கேள்விகளை உருவாக்கும் வகுப்பறை

By செய்திப்பிரிவு

‘‘20 முதல் 30 ரூபாய் விலையில் அரசு எங்களுக்கு நாப்கின் தருமா?’’ சமீபத்தில் பீஹார் மாநிலத்தில் ஒரு பள்ளி மாணவி கேட்ட கேள்வி இது. அதற்கு மோசமான, அதிர்ச்சியான பதிலை உயர் அதிகாரியிடம் இருந்து பெறுகிறார். இருந்தாலும் தைரியமாக தொடர்ந்து கேள்வி கேட்கிறார். ‘‘ஆமாம். மக்கள்தானே ஓட்டுப் போட்டு அரசை தேர்ந்தெடுக்கிறார்கள்!’’ என‌ பதிலும் தருகிறார் அந்தப் பள்ளி மாணவி. கல்வி சிந்தனையாளர் பிரெய்ரே கனவு கண்ட மாணவி இவர்தான்.

தன் ஊர், குடும்பம், சமூகம், பொருளாதாரம் என தன்னைச் சுற்றி தொடர்புடைய அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்குவதே உண்மையான கல்வி என்கிறார் பிரெய்ரே. நம் வகுப்பறைகள் கேள்விகளைவிட பதில்களைச் சொல்லத்தான் பழக்கப்படுத்துகின்றன. அவை மதிப்பெண்ணுக்கான பதில்கள். ஏற்கனவே யாரோ ஒருவரால் எழுதப்பட்ட‌ பதில்கள்.

கரோனோ முடிந்து பள்ளி திறந்த முதல் நாள். ஆறாம் வகுப்பிற்குச் சென்றேன். நான்காம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக ஆறாம் வகுப்பில் உட்கார்ந்திருந்தனர். புதிய ஊர். புதிய பள்ளி. இரண்டு ஆசிரியர்களை மட்டுமே பார்த்தவர்கள் இப்போது எட்டு பாடவேளை ஐந்தாறு ஆசிரி யர்களைச் சந்திக்கின்றனர்.

பார்வையில் சிறிது மிரட்சி. உற்சாகமூட்ட ஆடல், பாடல் என வகுப்பு தொடங்கியது. மெல்ல என்னுடன் பேசத் தயாரானார்கள். ஏதாவது கேள்விகள் கேளுங்கள் என்றேன். ஆச்சரியமாகப் பார்த்தனர். என்ன கேள்வி கேட்பது எனப் புரியாமல் குழம்பினர். யோசிக்க நேரம் தந்தேன். அவர்களுக்கு தோன்றும் கேள்விகளை போர்டில் எழுதச் சொல்லி அழைத்தேன். முதலில் தயங்கினர். வார்த்தை மாறாமல் ஒப்பித்து பழக்கியபின் எப்படி கேள்விகள் வரும்?

தெரிந்த கேள்வியில் இருந்து வகுப்பை நகர்த்த நினைத்தேன்.

சரி. ஏன் வானம் நீல நிறமாக இருக்கிறது? என முதல் கேள்வியை போர்டில் எழுதினேன்.

அடுத்து ஒரு மாணவி வந்தார். சாக்பீஸ் எடுத்து, ‘ஏன் கடலில் மீன் இருக்கிறது?' என எழுதினார்.

அடுத்து விலங்குகள் ஏன் காட்டில் வாழ்கின்றன?

நாம எப்படி நீச்சல் அடிக்கிறோம்?

முதலில் கப்பல் எப்படி வந்தது?

வெட்டுக்கிளி எப்படி பறக்கிறது?

பள்ளி எப்படி உருவானது?

நாய் ஏன் குலைக்கிறது?

டீச்சர் உங்க ஊர் எது?

பச்சோந்தி எப்படி நிறத்தை மாற்றுகிறது?

மனிதன் ஏன் குளிக்கிறான்?

நாம எப்படி பிறந்தோம்?

காகம் ஏன் கருப்பு நிறத்தில் இருக்கு?

என்ன கேள்வி கேட்கலாம்? என்பதே கேள்வியாக வந்தது.

அட!! கேள்விகள் நிற்கவில்லை. வகுப்பில் உள்ள எல்லா மாணவரும் முன்வந்து போர்டில் மகிழ்ச்சியாக எழுதினர்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் உடனடி பதில் தர வேண்டியதில்லை, தேவையுமில்லை. கேள்விகள் கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.

இதுவரை தான் நம்பியதை, கேட்டதை, பார்த்ததை எல்லாம் கலைத்துப் போட்டு கேள்விக்குட்படுத்த வேண்டும். அவ்வளவுதான் இன்று அவர்கள் அறிய வேண்டிய விஷயம்.

கேள்வி கேட்பதைப் புதியதாக நாம் சொல்லித் தர வேண்டியதில்லை. ஏனெனில் நிறைய கேள்விகளுடன்தான் அவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். ஆனால் நம் கல்வி முறையோ வெறும் பதில் சொல்லும் எந்திரமாக மாற்றிவிட்டது.

பதில் சொல்லப் பழக்குவதன் வழி ஏற்கனவே இருக்கும் தகவல்களை அவர்களிடம் திணிக்கிறோம். இதனால் புதிய சிந்தனைகள் எப்படி உருவாகும்?

‘‘கேள்விகள், ஆசிரியரும்- மாணவரும் வகுப்பறையில் சமம் என்பதைக் காட்டும் குறியீடு. இருவரும் விவாதிப்பார்கள். பதில்களை சேர்ந்து கண்டறிவார்கள்'' என்கிறார் பிரெய்ரே.

பதில் சொல்லும் வகுப்பறையை விட கேள்வி களை உருவாக்கும் வகுப்பறையை நோக்கி நகர்வோம்.

அரசுப்பள்ளி ஆசிரியர்

விடத்தாகுளம், விருதுநகர் மாவட்டம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

10 hours ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

18 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

மேலும்