காட்டாங்கொளத்தூர் | தேசிய ஆங்கில கையெழுத்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவி தேர்வு

By பெ.ஜேம்ஸ்குமார்

காட்டாங்கொளத்தூர்: காட்டாங்கொளத்தூர், நின்னைக் கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி, பிரியலட்சுமி, மாநில அளவிலான ஆங்கில கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

நம்மில் பலருக்கு கையெழுத்து நேர்த்தியாக இருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் நம்பள்ளிகளில் அன்றாடம் மேற்கொண்ட கையெழுத்து பயிற்சி தான்.

அந்த வகையில், பள்ளி மாணவ-மாணவிகளின் கையெழுத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜாக்கி கிரியேஷன் மற்றும் சர்வதேச சாம்பியன்ஸ் அகாடமி சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில கையெழுத்து போட்டி மாநில அளவில் நடத்தப்பட்டது.

இதில், செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்தூர், நின்னைக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு மாணவி, பிரியலட்சுமி பங்கேற்று, ஆங்கில கையெழுத்து போட்டியில் மாநிலஅளவில் வெற்றி பெற்றதுடன், தேசிய அளவிலான போட்டிக்கும்தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

இதன்மூலம் ‘ஹேண்ட் ரைட்டிங்-சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை பெற்றுள்ள பிரியலட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் சீனி.சந்திரசேகரன், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர் பாராட்டினர்.

கேலியோகிராஃபி என்னும் வெளிநாட்டுக் கையெழுத்து முறையில் தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் எழுதும் கையெழுத்து போட்டியில், மாணவி பிரியலட்சுமியின் கையெழுத்து தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைமை ஆசிரியர் சீனி.சந்திரசேகரன் கூறுகையில், “வீடியோ விளையாட்டை சிறுவர்கள் பல மணிநேரம் விளையாடுவதால் கையெழுத்தும், தொலைக்காட்சியை நெடுநேரம் பார்ப்பதால் உள்ளமும் பாதிக்கப்படுகிறது. அழகான கையெழுத்து ஒழுங்கற்றதாகவும் மாறிவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இதற்காக தமிழ், ஆங்கிலத்தில் கையெழுத்து பயிற்சி அளிக்கிறோம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE