கல்வியும் போராட்டத்தின் ஒரு பகுதி!

By செய்திப்பிரிவு

“படித்திருப்பது கல்வியின் முடிவு அல்ல; ஆரம்பமும் ஆகாது. ஆணும் பெண்ணும் கற்றவர்களாக இருப்பதற்குள்ள உபாயங்களில் ஒன்று மாத்திரமே அது. படித்திருப்பது, அதனளவில் கல்வியாகிவிடாது” என்கிறார் காந்தி.

மதிப்பெண்களை இலக்காகக் கொண்டதாகக் கல்வியை உருமாற்றி, அளவுக்கு மீறிய முக்கியத்துவத்தை மதிப்பெண்களுக்குக் கொடுத்து, மாணவர்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தையும் நெருக்கடியையும் கொடுத்திருக்கிறோம் என்பதுடன் காந்தியப் பார்வையை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரியிலோ பொறியியல் கல்லூரியிலோ ஒரு இடத்தை வாங்குவதற்குள் பெற்றோருக்கும் மாணவருக்கும் உயிர்போய் உயிர் வருகிறது. இதுதான் உண்மையான கல்வியா? மனதை மலரச் செய்யும், ஒருவரின் சிறந்த தன்மைகளை வெளிக் கொண்டுவரும் கல்வி இந்த அளவுக்கு நம்மை நெருக்கடிகளுக்குள் ஆட்படுத்துமா என்பதைக் கிட்டத்தட்ட நூற்றாண்டுக்கு முன்பு காந்தி பேசியதுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

காந்தியக் கல்வி

காந்தியின் கல்விக் கொள்கைகளைச் சுருக்கமாக இப்படி பட்டியலிட்டுக் கொள்ளலாம்:

1. கல்வி என்பது ஒரு குழந்தைக்கு ஒட்டுமொத்தமாக ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். வெறுமனே போதிப்பதாக மட்டுமல்லாமல், இதயம், மூளை, உடலுறுப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும்.

2. கைத்தொழில் மூலம் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். படிக்கும்போதே உடலுழைப்பில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உடலுழைப்பாளர்களை இழிவாகப் பார்க்கும் மனநிலை அகலும். வெறும் புத்தகங்களும் பாடங்களும் மட்டும் போதாது. புத்தகங்கள் மாணவர்களைவிட ஆசிரியர்களுக்கே அவசியமானவை.

3. நல்ல கல்வியின் அடிப்படை என்பது உயர்ந்த பண்புகள் கொண்ட பொறுப்பான குடிமக்களை உருவாக்குவதே. அகிம்சை, சத்தியம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நல்ல கல்வியானது உணர்த்தும்.

4. கல்வி நிறுவனங்கள் தற்சார்பைக் கொண்டிருக்க வேண்டும். தாம் உற்பத்தி செய்யும் பொருட்களைக் கொண்டே செயல்படும் வல்லமை கல்வி நிறுவனங்களுக்கு வேண்டும். கல்வி நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களைக் கொள்முதல் செய்துகொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துடையது.

5. தாய்மொழி வழிக் கல்வி என்பது மிக முக்கியமானது. தாய்மொழி வழியாகக் கற்பிக்கப்படும்போதுதான் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.

6. அனைத்துக் குழந்தைகளுக்கும் முதல் 7 வருடங்களுக்கு ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். அது அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

7. கல்வி முறையை இந்திய கிராமப்புற மக்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்க வேண்டும். மேட்டிமைவாதிகளையும் நகரவாசிகளையும் மட்டும் கணக்கில் கொண்டு கல்வியானது தீர்மானிக்கப்படக் கூடாது.

காந்தியின் கல்விக் கொள்கைகளை சுதந்திர இந்தியா உதாசீனப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மாறாக மெக்காலே கல்வி முறையின் நவீன வடிவத்தை அது சுவீகரித்துக் கொண்டது.

இதன் விளைவாக, கல்வியானது மேலும் மேலும் வணிகமயமாகவும் ஆன்மாவற்றதாகவும் ஆனது. காந்தி கேட்கிறார், “படிப்பறிவோ கற்றலோ அல்ல, உண்மையான வாழ்க்கைக்கான கல்விதான் ஒரு மனிதரை உருவாக்குகிறது.

ஒருவருக்கு எல்லாம் தெரிந்து தனது அண்டை அயலாருடன் சகோதரத்துவத்துடன் வாழத் தெரியவில்லை என்றால் என்ன செய்வது?” நாம் உண்மையாகவே இந்தியாவுக்கு ஒரு அசலான கல்விக் கொள்கையை உருவாக்க விழைகிறோம் என்றால், அது பதில் தேடும் ஆதாரக் கேள்வியாக இதுதான் இருக்க முடியும்!

- “என்றும் காந்தி” புத்தகத்திலிருந்து...

நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டை கொண்டாடும் விதமாக “இந்து தமிழ் திசை” வெளியீ்டான “என்றும் காந்தி” புத்தகம் (ரூ.280/-) 20% சிறப்பு தள்ளுபடியில் ரூ.224/-க்கு 2022 ஆண்டு முழுவதும் விற்கப்படுகிறது. தபால் செலவு இலவசம்.

ஆன்லைனில் பெற: store.hindutamil.in/publications மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE