விடுதலை போராட்டத்தில் துடிப்புடன் பங்கேற்ற இளையோர்

By ம.சுசித்ரா

சமூக மாற்றத்துக்கு வித்திட்ட இளையோர் பலர் வரலாறு நெடுகிலும் இருந்துள்ளனர். அந்த வகையில் இந்திய திருநாட்டின் விடுதலை போராட்டத்திலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதிலும் தேசத்தந்தை காந்தியடிகள் அனைவரும் தன்னலம் மறந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கிளர்ந்தெழும்படி அறைகூவல் விடுத்தபோது முதலில் வெகுண்டெழுந்து நாட்டுப்பற்றுடன் வீதியில் கூடியவர்கள் மாணவர்களே.

அந்நிய உற்பத்திகளை பகிஷ்கரித்து இந்தியத் தயாரிப்புகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தும் கொள்கை முழக்கத்துடன் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்திலும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் முழுமூச்சாக செயலாற்றினார்கள். 1905-ல் வங்கதேசம் பிரிக்கப்பட்டபோது அதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாணவர்களே.

இதேபோன்று ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் தீவிரமாக பங்கேற்று ஆங்கிலேயரை நாட்டை விட்டு வெளியேற்றியதில் போற்றத்தக்க பங்களிப்பை இந்திய இளையோர் வழங்கியிருக்கிறார்கள்.

75-வது விடுதலை நாளை இந்தியா பெருமிதத்துடன் கொண்டாடிவரும் இவ்வேளையில் சுதந்திர போராட்ட இயக்கத்தில் தன்னை கரைத்துக் கொண்ட இளையோர் சிலரை தெரிந்து கொள்வோமா மாணவர்களே!

பழங்குடியின வீரர் பிர்சா முண்டா

அரசியல் விடுதலை அடைந்து 75 ஆண்டுகளை நாடு எட்டியதை முன்னிட்டு, கடந்த ஆண்டிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக நவ.15-ம் தேதி பழங்குடி விடுதலை போராளிகளை நினைவுகூரும் நாளாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.

இந்நாளில்தான் ‘பகவான்’ என்று வாஞ்சையோடு அழைக்கப்படும் பழங்குடியின புரட்சியாளர் பிர்சா முண்டா பிறந்தார். 1895-லிருந்து 1900 வரை ஆங்கிலேயரை எதிர்த்து பிர்சா முண்டா செய்த கலகம், இன்றும் முந்தாரி கிராமிய பாடல்கள் மற்றும் கதைகளின் வழியாகப் போற்றப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஓர் இளைஞர் அதுவும் 6 ஆண்டுகளில் தம் மண்ணின் மைந்தர்களுக்கு, ‘மண்ணின் தந்தை’யாக (தர்த்தி அபா) உருவெடுத்த பெரும்புரட்சியாளர் பிர்சா முண்டா. ஜார்க்கண்ட் மாநில குந்தி மாவட்டத்தில், 1875 நவம்பர் 15 அன்று பிர்சா முண்டா பிறந்தார்.

தனது 25 வயதுக்குள் நாட்டு விடுதலைக்காகவும் நிலச்சுவான்தாரர்களிடம் சிக்குண்டு கிடந்த பழங்குடியின மக்களின் அடிமைத்தளையைத் தகர்த்தெறியவும் பெரும் புரட்சியை முன்னெடுத்தார்.

உள்நாட்டு ஜமீன்தாரர்கள் மற்றும் நிலப்பிரபுக்களின் பிடியில் மாட்டிக் கொண்டு, தங்களது உழைப்பை தாரைவார்த்தே மடிந்த பழங்குடியின மக்களை மீட்க, ‘உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்’ என்று போர்க்குரல் எழுப்பினார். ஆங்கிலேயரின் காலணி ஆதிக்கத்தில் மதிமயங்கி கிடந்த இந்தியர்களுக்கு மத்தியில், “தங்கள் தேசத்தை தாங்களே ஆள்வோம்!” என்று முஷ்டியை உயர்த்தினார்.

தனது 19 வயதிலேயே அரசியல் விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் போர்க்கொடி தூக்கினார். காட்டில் பயிரிடும் உரிமைக்கான வரி நிலுவையைத் தள்ளுபடி செய்யக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணியை நாக்பூரில் அவர் நடத்தியதே, நாட்டின் பழங்குடிகளின் முதல் உரிமைப் போராட்டம் என்று அடையாளம் காணப்படுகிறது.

அவரது தலைமையின்கீழ் பழங்குடி வீரர்கள் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட போது, பிரிட்டிஷ் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொடுஞ்சிறையில் சித்தரவதை செய்யப்பட்டவர், 25 வயதில் தன் மண்ணின் மைந்தர்களுக்காக மாண்டார்.

கையில் கீதை, உதட்டில் வந்தே மாதரம்!

தேச விடுதலைக்காக 18 வயதில் தூக்கு மேடையில் உயிர் துறந்தவர் குதிராம் போஸ். வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் 1889-ல் பிறந்தார்.

அன்றைய காலகட்டத்தில் அரவிந்தர் கோஷ் (பின்னாளில் ஸ்ரீ அரவிந்தர்) தலைமையில் பிரிட்ஷ் அரசுக்கு எதிராக ‘அனுஷிலன் சமிதி’ என்ற புரட்சிகர அமைப்பு மூலம் சிறுவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.

15-வயதில் இந்த இயக்கத்தில் குதிராம் போஸ் கால் பதித்தார். இரவு பகல் பாராது, பசி தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் காலரா, மலேரியா நோய் கண்ட இந்திய மக்களை காக்க சேவையில் ஈடுபட்டார்.

1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டபோது நாடே கொந்தளித்து எழுந்தது. இவரும் அந்தப் போராட்டத்தில் குதித்தார். பல காவல் நிலையங்களை குதிராமின் குழுவினர் குண்டுகளால் தாக்கினர்.

விடுதலை வீரர்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த நீதிபதி கிங்ஸ்போர்டை பழிவாங்க குதிராம் போஸூம் அவரது கூட்டாளிகளும் உறுதி பூண்டனர்.

நீதிபதி கிங்ஸ்போர்டின் வாகனம் மீது குதிராம் போஸூம் அவரது நண்பர் சாஹியும் குண்டு வீசினர். ஆனால் அந்த வாகனத்தில் நீதிபதி வரவில்லை.

அதில் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். பிடிபட்ட குதிராம் போஸூக்கு தேச துரோக குற்றத்துக்காக தூக்கு தண்டனை 1908-ல் விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18 தான். கை யில் பகவத் கீதையுடனும் வந்தே மாதரம் முழக்கத்துடனும் குதிராம் போஸின் உயிர் பிரிந்தது.

கொடியையும் நாட்டையும் காத்த குமரன்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஏழ்மையான குடும்பச் சூழலில் பிறந்த திருப்பூர் குமரன் ஆரம்பப் பள்ளிப் படிப்புக்கு மேல் தொடர முடியாமல் நெசவு தொழில் செய்தவர். குழந்தை பருவத்திலேயே காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அறப் போராட்டங்களில் முன்னிலை வகித்தவர்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு எதிராக 1932-ல் தமிழகத்தில் சட்ட மறுப்பு இயக்கம் தீவிரமடைந்தது. அப்போது கையில் தேசியக் கொடியினை ஏந்திய குமரன் “வந்தே மாதரம் வந்தே மாதரம்” என்று முழக்கமிட்ட தொண்டர் படைக்கு தலைமை ஏற்று வீறுநடைபோட்டார். தடையை மீறி நடத்தப்பட்ட அந்த ஊர்வலத்தை தடுக்க போலீஸார் தடியடி நடத்தினர்.

தடியடிபட்டு மண்டை பிளந்து ரத்தம் கொட்ட சரிந்து கீழே விழுந்தார் குமரன். அப்போதும் அவரது விரல்கள் தேசிய கொடியை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன, உதடுகள் “வந்தே மாதரம்! வந்தே மாதரம்” என்று வீர முழக்கமிட்டன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த காந்தியடிகள், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். “கொடி காத்த குமரன்” என்று இன்றுவரை நம் அனைவரின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.

செயல் வீரன் பகத்சிங்

விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய இந்திய இளைஞர்களில் முக்கியமானவர் பகத் சிங். பஞ்சாப் மாநிலம் பங்கா பகுதியில் பிறந்த பகத் சிங் சிறுபிராயத்திலிருந்தே வாசிப்பு, சிந்தனையுடன் கூடிய செயல் வீரனாக உருவெடுத்தார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்டபோது பகத் சிங்குக்கு 12 வயது. அந்த சம்பவம் பகத்சிங் மனதை உலுக்கியது. அப்போதே படுகொலை நடந்த இடத்திலிருந்து மண்ணை எடுத்து வந்து பாதுகாத்து வைத்திருந்தார்.

சைமன் கமிஷனை புறக்கணிக்க நிகழ்ந்த ஊர்வலத்தில் மூத்த தலைவரான லாலா லஜபதிராய் கொல்லப்பட்டார். அதன் பிறகு தீவிர போராளியானார் பகத் சிங். லாலா லஜபதிராயின் மரணத்துக்குக் காரணமான போலீஸ் அதிகாரி ஸ்காட்டை கொல்ல முடிவெடுத்தார்.

ஆனால், தவறான சமிக்ஞையால் ஜே.பி. சாண்டர்ஸ் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பகத் சிங் மற்றும் அவரது நண்பர்களான ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஒரு புறம் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடிக் கொண்டே ஆக்ராவில் 175 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை அமைத்தார். தூக்கு மேடை ஏறும்வரை தீவிர வாசிப்பில் ஈடுபட்டவர் என்பது அவரது சிறை குறிப்பேட்டை வாசித்தால் புரியும்.

நாட்டுக்காக தனது இன்னுயிரை 23 வயதில் நீத்த பகத் சிங் சிறை தண்டனை அனுபவித்த காலத்தில், “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” உள்ளிட்ட நான்கு புத்தகங்களை எழுதினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE