குழந்தைகள் கொஞ்சம் பொய் பேசவும் அனுமதிப்போம்!

By மகா.இராஜராஜசோழன்

பொய்களையும் பொய்பேசும் குழந்தைகளையும் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? வள்ளுவர், “பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” என்கிறார். அதாவது, பொய் சொல்லாமல் ஒருவர் வாழ்ந்தால் பிற அறங்களைச் செய்யாமல் இருப்பதுகூட, அவருக்கு நல்லதாகிவிடும்.

பொய் பேசாது இருந்தால் எத்தனை நன்மை என்பதை மேலும் பல குறள்கள் வழியாக விளக்கமாகச் சொன்னவர் வள்ளுவர். அவரே, “பொய்மையும் வாய்மை இடத்துப் புரைதீர்க்கும் நன்மை பயக்கும் எனின்” என பிறருக்காகப் பொய் பேசுவதால் எழும் நன்மைகளையும் கூறுகிறார்.

இவை எல்லாம் வளர்ந்த நம்மால் உணர்ந்து கொள்ளமுடியும். உண்மை, பொய்மையின் நன்மை, தீமைகளை உணராத குழந்தைகளுக்கு எப்படி இதைப் புரிய வைக்கப்போகிறோம்? அதற்கு முன்னால் குழந்தைகள் பொய் பேசுவதை நாம் எப்படி அணுகப்போகிறோம்?

காரணம் சொல்வதேன்? - என்னிடம் தமிழ் கற்க ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சில வாரங்களுக்கு முன்பு வரத் தொடங்கினார். மாலை வகுப்பு முடிந்ததும் மறுதினத்திற்கான வீட்டில் எழுத வேண்டிய தொடர் பயிற்சியாக உயிர் எழுத்துக்களையும் மெய் எழுத்துகளையும் உயிர் மெய் எழுத்துகளையும் எழுதி வரச் சொன்னேன். அந்த மாணவி ஒரு நாள்கூட அந்தப் பணியைச் செய்து வந்ததே இல்லை. “ஐயா நோட்டைப் பள்ளிக்குக் கொண்டு செல்லவில்லை அதனால் எழுத முடியவில்லை. தேர்வு இருந்ததால் தமிழ் படிக்க முடியவில்லை. எழுதினேன் அந்தப் பக்கத்தை யாரோ கிழித்துவிட்டார்கள். எழுதிய நோட்டைப் பள்ளியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்..” என அந்தக் குழந்தை ஒவ்வொரு நாளும் ஒரு காரணத்தோடு வந்தார்.

நான் இந்தக் காரணங்களை எப்படிப் புரிந்து கொள்வது? இந்தக் காரணங்கள் அனைத்தையும் தவறு என்று கூறி மறுப்பதா? இல்லை ஏன் இப்படிப் பொய் பேசுகிறாய் எனக் குரல் உயர்த்திப் பேசுவதா? அமைதியானேன். எதையுமே அந்தக் குழந்தையிடம் சொல்லவில்லை.

குழந்தை சொன்ன காரணங்கள் அனைத்தும் ஒருவேளை உண்மையாகக்கூட இருக்கலாம். பொய்யாக இருந்தாலும் இருக்கட்டுமே அதை அப்படியே ஆசிரியர் மறுக்காமல், எதிர் கேள்வி எழுப்பாமல் ஏற்றுக்கொள்கையில் அந்தப் பொய் உண்மையாக அல்லவா ஆகிவிடுகிறது.

இப்படியே பொய் பேச குழந்தையை அனுமதித்தால் குழந்தை எதிர்காலத்தில் என்னவாக மாறும்? அதன் வாழ்க்கை வீணாகிவிடாதா? என முணுமுணுப்பவர்கள் தாம் வாழ்வில் சின்ன சின்னதாய், பெரிதாய் எத்தனை பொய்களை உதிர்த்திருக்கிறோம். அந்தப் பொய்கள் எல்லாம் நம்மை என்னவாக மாற்றியிருக்கிறது. நாம் என்ன அத்தனைக் கொடியவர்களாக அந்தப் பொய்களால் உருமாறி இருக்கிறோமா என்ன? இல்லையே.

பொய்யோடு உரையாடல்: குழந்தைகள் கொஞ்சம் பொய் பேசவும் அனுமதிப்போம். குழந்தைகள் பொய்ப்பேச எடுத்துக்கொள்கிற முயற்சி இருக்கிறதே அத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை நான் மாணவர்களிடம் பார்த்து ரசித்திருக்கிறேன். அவர்கள் அந்தப் பொய்களை உண்மைப்போலவே ஆக்குவதற்கு அத்தனை முயற்சிகள் செய்கிறார்கள். உண்மையைச் சொல்லியிருந்தால்கூட அன்றோடு எல்லாம் முடிந்து போய்விடும்.

ஆனால், பொய் அப்படியல்ல தினம் தினம் அது அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதை அவர்கள் சுமந்து திரிகிறார்கள். இதில் இருக்கிற அழுத்தம்தான் அவர்களைப் பின்னாட்களில் பொய் பேசாதவர்களாக மாறுவதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறது.

உண்மையில் அவர்கள் தாங்களே கூறிய பொய்களோடு நடத்துகிற உரையாடல்கள்தான் எதிர்காலத்தில் அவர்கள் பொய்பேசக் கூடாது என்பதற்கான பெரும் திறப்பை உருவாக்குகிறது. பொய் என்று உள்ளம் உணர்த்துவதைச் சொல்ல வேண்டாம். சொன்னால், அதைப் பொய் என்று உலகு அறிய நேரும்போது தன் மனமே தன்னைச் சுடும் என்பதை குறிக்க

வள்ளுவர் சொன்ன “தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்” என்பதற்கான சூழலை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுப்போம்.

நாம் சொல்லிச் சொல்லி ஒன்றைக் குழந்தைகள் கற்றுக்கொள்வதைவிட உள்ளார்ந்த உணர்வுப்பூர்வமானவற்றை அவர்களாகவே முயன்று கற்பது நிலையானதாக இருக்கும். வாழ்நாள் முழுதும் அவர்களினூடே அது பின்தொடரும். பொய்களில் இருந்தும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.பொய்களையும் கற்றுக் கொள்ளட்டும்.

- கட்டுரையாளர்: குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி; தொடர்புக்கு: cholan1981@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்