ஹாங்காங் சுற்றிய அசத்தல் அரசு பள்ளி மாணவர்கள்

By ம.சுசித்ரா

அரசு பள்ளி மாணவர்களுக்கு உலகெங்கிலும் உள்ள சிறந்த வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்துவைக்கும் முயற்சிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அவற்றில் ஒன்று கல்விச் சுற்றுலா. இதன்கீழ் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண்கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சர்வதேச அளவில் புகழ் பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்தவகையில், கராத்தே, கவிதை புனைதல், அறிவியல் நாடகம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வென்ற அரசு பள்ளி மாணவர்களில் 150 பேர் கடந்தாண்டு தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து 8 மாணவர்களும், 12 மாணவிகளும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், ஹாங்காங்கிற்கு கடந்த ஆக. 22 முதல் 27வரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுடன் தேசிய நல்லாசிரியர் விருதாளர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் மாலதி மற்றும் துணை இயக்குனர் செல்வி சென்றனர். இம்மாணவர்களுக்கு வழிகாட்டியாக சென்று நாடு திரும்பிய ஆசிரியர் மாலதியுடன் பேசியதிலிருந்து...

மாலதி

பாராட்டிய சீன மாணவர்கள்: அரசு பள்ளி குழந்தைகள் வகுப்பறையைத் தாண்டிய செயல்பாடுகளிலும் முன்னேற அவர்களை ஊக்கப்படுத்துவதே இந்த வெளிநாட்டு சுற்றுலாவின் நோக்கமாகும் என்று முதல் நாளே எங்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் எடுத்துரைத்தார்.

கடந்த 22 ஆகஸ்ட் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு அடுத்த நாள் மதியம் ஹாங்காங் சென்றடைந்தோம். முதல் இரண்டு நாட்கள் டிஸ்னிலேண்ட், ஓஷன் பார்க் ஆகிய கேளிக்கை இடங்களில் மகிழ்ச்சி பொங்க மாணவர்கள் விளையாடினர். அடுத்த இரு நாட்கள் யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங், ஹாங்காங் பாப்டிஸ்ட் யூனிவர்சிட்டி ஆகியவற்றை பார்வையிட்டோம்.

கல்வியில் உலக தரத்தில் 17வது இடத்தில் உள்ள ஹாங்காங் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட அனுபவம் பிரமிப்பூட்டியது. பல்கலையின் ஆராய்ச்சி துறையை பார்வையிட்டபோது மாணவர்கள் பல கேள்விகளை எழுப்பி சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டனர். தமிழ்நாடு அரசு செலவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதைத் தெரிந்து கொண்டனர்.

ஆராய்ச்சியை மேற்கொண்டு அறிவியல் விஞ்ஞானி ஆனவர்களைப் பற்றி அறிந்து கொண்டனர். அங்கு படித்து வரும் 2 தமிழக மாணவர்கள் எங்களுக்கு அங்குள்ள வாய்ப்புகளை விளக்கினார்கள். அங்கு நாங்கள் சந்தித்த சீன மாணவர்கள் இதுபோன்று அரசே முழு செலவையும் ஏற்று மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் திட்டம் தங்கள் நாட்டில் இல்லை என்றே கூறினார்கள்.

அனுபவத்தைப் பகிருங்கள்! - அமைச்சருடன் மாணவர்கள் சுதந்திரமாகவும் எளிதாகவும் பேசினர். மாணவர்களுடன் அமைச்சர் உரையாடும்போது, “நீங்கள் பெற்ற இந்த அனுபவத்தை உங்களுடைய சகதோழர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் எடுத்துக் கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்கள் பாடப்புத்தகத்தோடு மட்டுமல்லாது கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்குவதற்கு அரசு பல திட்டங்களையும் போட்டிகளையும் நடத்தி வருகிறது. இலக்கியமன்றம், வினாடி வினா மன்றம், சிறார் திரைப்படங்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அரசு பள்ளிதோறும் நடத்தப்படுகின்றன. இவற்றில் பங்கேற்றால் வெளிநாட்டு பயணம் செல்லலாம் என்பது குழந்தைகளை மிகவும் ஈர்க்கிறது.

இப்படித்தான் சென்ற வருடம் தனது அக்கா இலக்கிய போட்டியில் வெற்றி அடைந்து கல்விச்சுற்றுலா சென்றதைப் பார்த்து உத்வேகம் பெற்ற ஒரு சிறுவன் அறிவியல் நாடகத்தில் இம்முறை வென்று எங்களுடன் ஹாங்காங் வந்திருந்தான். அதேபோல் ஒரே வீட்டில் அக்கா தங்கை இருவர் போட்டிப்போட்டு வென்று எங்களுடன் வந்திருந்தார்கள். இதனால் கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அரசு பள்ளிகளில் பன்மடங்கு அதிகரித்து வருகிறது.

கல்வி இணை செயல்பாடுகளில் பல போட்டிகளை நடத்துவது பாடம் புரியாத மாணவர் கூட தன்னிடம் இருக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கு சிறப்பான திட்டமாக இருக்கிறது. தான் பெற்ற கல்வியை வாழ்க்கையோடு இணைத்துச் செயல்படுத்துவதற்கும் எந்த சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்வதற்கும் வாசிப்பு அனுபவமும் திறமையும் உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE