கிராமப்புற தனியார் பள்ளிகளுக்கும் இலவச பாடநூல் வழங்கலாமே!

By ம.சுசித்ரா

தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் பாடப்புத்தகங்களின் விலை நடப்பாண்டில் 40% வரை அதிகரித்திருப்பதாக அண்மையில் அறிவிப்பு வெளியானது. தமிழ்நாடு பாடநூல் கழகம் தயாரிக்கும் புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

மறுபுறம் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் (தமிழ் மொழி பாடநூல்) மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு விலைக்கு விற்கப்படுகிறது. இதன் பொருட்டு 2024-25 கல்வியாண்டுக்கென மொத்தம் 4 கோடியே 18 லட்சம் பாடநூல்கள் அச்சடிக்கப்பட்டன.

இவற்றில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.9 கோடி புத்தகங்கள் இலவசமாகவும், 1.2 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலைக்கும் வழங்கப்பட்டதாகக் கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடநூல்களின் விலை 40% வரை உயர்த்தப்பட்டிருப்பதாக புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசு உதவி பள்ளிக்கும் இலவசமே: இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும், தனியார் பள்ளி சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கடந்த ஆட்சியில் 2018-ல் 466% வரை பாடநூல் விலை அதிகரிக்கப்பட்டது.

ஆனால், இம்முறை இலாப நோக்கத்துக்காகப் பாடநூல்களின் விலை உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்திலுள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மேலும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்குத் தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

நந்தகுமார்

10% மேல் ஏற்க முடியாது: இது பற்றி தமிழ்நாடு மெட்ரிக் மேனிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் கே.ஆர்.நந்தகுமாரிடம் பேசியபோது, “தனியார் பள்ளிகளிலும் ஏழை வீட்டு குழந்தைகள் படித்து வருவதால் இந்த விலையேற்றம் நிச்சயம் அவர்களது பெற்றோரை பாதிக்கும். விலை வாசி ஏற்றத்தினால் பாடநூல் விலையேற்றம் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்.

ஆனால், 10% வரை அதிகரித்தால் ஏற்கலாமே தவிர 40%-ஐ ஏற்க முடியாது. தனியார் பதிப்பாளர்களிடமிருந்து பாடப்புத்தகங்களை வாங்கினால் இவ்வளவு விலை கொடுக்கத் தேவையில்லை. ஆனால், தமிழ்நாடு பாடநூல் கழகத்திடமிருந்துதான் வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதில் சென்னையை தாண்டி புறநகர் பகுதிகளிலும், சிற்றூர்களிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்குப் பாடநூல்களை வரவழைப்பதற்காகப் போக்குவரத்து செலவு, ஏற்ற-இறக்கக் கூலி எல்லாவற்றையும் கணக்கிடும்போது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாகப் பாடநூல் கட்டணத்தை மாணவர்களிடமிருந்து வசூலிக்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 15,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளின் மாணவர்கள், பெற்றோர் வருத்தத்தில் உள்ளனர்” என்றார்.

ஸ்ரீதர்

மொழி நூல்கள் இலவசம்!? - இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர் சங்கத்தின் மாநில செயலாளர் ஜி.ஆர்.ஸ்ரீதர் கூறுகையில், “தனியார் பள்ளிகளை பொருத்தவரை மின்கட்டணம், காப்பீட்டுத்தொகை, பள்ளி கட்டிடத்துக்கான ஜிஎஸ்டி என ஏராளமான சிக்கல்கள் உள்ளன.

அரசு பள்ளிகளுக்கு மின்சாரம் இலவசம் என்றால், தனியார் பள்ளிகள் யூனிட்டுக்கு ரூ.10 வரை கட்டணம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோக பத்திரப்பதிவு, பால், காஸ், பெட்ரோல், டீசல் என எல்லாவற்றின் விலைவாசியும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது அரசு அறிவித்திருக்கும் பாடநூல் விலையேற்றம் தனியார் பள்ளிகளை பெரிதாக பாதிக்காது.

ஆனாலும், நகரங்களில் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நடுத்தர, கீழ் நடுத்தர வீட்டுக் குழந்தைகளும் படிக்கின்றனர். இதனை அரசு மனதில் கொண்டு கிராமப்புற தனியார் பள்ளிகளுக்கேனும் பாடப்புத்தகங்களை இலவசமாக அளிக்க முன்வர வேண்டும். குறைந்தபட்சம் தமிழ், ஆங்கிலம் மொழி பாடநூல்களை இலவசமாக வழங்கலாம்” என்றார்.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: susithra.m@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE