சுதந்திர தினம் - 78: கல்வி எனும் சக்திவாய்ந்த கருவி!

By ம.சுசித்ரா

ஆற்றல் மிக்க ஆயுதம் கல்வி என்று அறிஞர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இதில் விடுதலை போராட்டக் காலத்தில் சமூக விடுதலைக்காகக் கல்வியை சக்திவாய்ந்த கருவியாக உருமாற்றிய தலைவர்களில் சிலரின் பங்களிப்பை இன்று அறிவோம் வாருங்கள்.

பூர்வக்குடி நூலகத்தின் தாய்: பின்தங்கிய சமூகத்தில் அதுவும் பெண்ணாகப் பிறந்த காரணத்தினால் கல்வி மறுக்கப்பட்ட சாவித்திரி பாய் பூலேதான் நாட்டின் முதல் மகளிர் பள்ளிக்கூடத்தை புனேநகரில் 1848-ல் தொடங்கியவர். அப்போது அவருக்கு வயது 17. இரண்டடுக்கு மாடிக் கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், 2 அரங்குகள், ஒரு பொது கழிப்பறையுடன் கூடிய தனது பள்ளிக்கு ‘பூர்வக்குடி நூலகம்’ (‘பிதே வாடா’) என்று பெயர்சூட்டினார்.

கணிதம், அறிவியல் உள்ளிட்ட பகுத்தறிவு சார்ந்த பாடங்களை அறிமுகம் செய்தார். குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம் போன்றவற்றை சமூக அறிவியல் மூலம் கற்பித்தார். அன்றைய தேதியில் அரசு பள்ளிகளில் படித்துவந்த மாணவர்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் மாணவிகள் இந்த பள்ளியில் சேர்ந்துபடிக்கத் தொடங்கினர்.

இதனால் சாவித்ரிபாய் புலேவும் அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அவரது கணவர் ஜோதிராவ் பூலேவும் உள்ளூர் மக்களால் துன்புறுத் தப்பட்டனர். தடைகளைத் தகர்த்து அடுத்த சில ஆண்டுகளில் 17 பள்ளிகளை சாவித்ரிபாய் நிறுவினார். ஆகவேதான் இந்தியாவின் முதல் ஆசிரியை என போற்றப்படுகிறார்.

மரத்தில் ஏறி படி என்றவர்: எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர் ரவீந்திரநாத் தாகூர். ஆனால், பள்ளிக்குச் செல்ல முரண்டு பிடித்ததால் வீட்டிலிருந்தே முறைசாராக் கல்வி பெற்றார். 17 வயதில் உயர்கல்வி பெற இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். அங்கும் படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்றார்.

பின்னாளில் தானே ‘சாந்தி நிகேதன்’ என்ற பரிசோதனை முறைப் பள்ளிக்கூடத்தை நிறுவி அங்குக் குழந்தைகளின் தனித்துவத்துக்கும், கலை, இலக்கியத்துக்கும் முன்னுரிமை அளித்தார். இந்திய தேசிய கீதம், வங்கதேசத்தின் தேசிய கீதம் ஆகியவற்றை இயற்றியது மட்டுமல்லாமல் இலங்கையின் தேசிய கீதமும் உருவாக உந்துதலாகத் திகழ்ந்தார். நோபல் பரிசு (1913) வென்ற முதல் ஆசியத் தலைமகன்.

நமக்குத் தகவல்களை அளிப்பது அல்ல; சகஜீவன்களோடு இணக்கமாக வாழக் கற்றுத்தருவதே உயரிய கல்வி என்ற இலக்குடன் பள்ளியை நடத்தினார். இவரது பள்ளியில் வகுப்பறையில் மட்டுமல்லாமல் மரக்கிளையில் ஏறி அமர்ந்து கொண்டு படிக்கவும் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தனித்துவத்தை போற்றிய அம்மையார்: லண்டனில் பிறந்தாலும் இந்தியராக அதிலும் சென்னை வாசியாகவே வாழ்ந்தவர் அன்னி பெசன்ட் அம்மையார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராக அகிம்சை வழியில் விடுதலை போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் பங்கேற்றவர்.

ஆங்கிலேயர் அறிமுகம் செய்த இந்தியக் கல்வி திட்டத்தில் பட்டியலின மக்களுக்கு இடமில்லை என்பதை உணர்ந்தார். சென்னையின் பட்டியலின குழந்தைகளுக்கு அமெரிக்கரான ஹென்ட்ரி ஸ்டீல் ஆல்காட், ‘ஆல்காட் பஞ்சமர் இலவசப் பள்ளி’யை 1894-ல் தொடங்கியபோது அந்த பள்ளியை முன்னெடுத்துச் சென்றார்.

அன்றைய ஐரோப்பிய அல்லது அமெரிக்கக் கல்வித் திட்டத்தை இந்த பள்ளி நகல் எடுக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளை வளர்த்தெடுக்கத் தனித்துவமான பாடத்திட்டம் இந்த பள்ளிக்கென வரையறுக்கப்பட்டது.

இன்றுவரை சென்னை அடையாறு பகுதியில் இந்த பள்ளி செயலாற்றி வருகிறது. மதன் மோகன் மாளவியா நிறுவிய பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு அடித்தளமிடும் விதமாக பனாரஸ் நகரில் மத்திய இந்து கல்லூரியை நிறுவியவரும் இவரே.

பூரண கல்வி புகட்டியவர்: இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பல்கலைக்கழக மானியக் குழு, முதல் ஐஐடி, ஐஐஎஸ், ஜாமியா மில்லியா இஸ்லாமியா மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்வாய்ந்த நிறுவனங்களை உருவாக்கியவர்.

எழுத்தறிவு இயக்கத்தின் முன்னோடி அவரே. ஏட்டுக் கல்வி முறைக்கு மாற்றாகக் குழந்தைகளின் அறிவு, உணர்வு மற்றும் சமூகச்சூழலை மேம்படுத்தும் ’பூரண கல்வி’ முறையை அறிமுகம் செய்தார். இதில், ஆளுமைத்திறன் மேம்பாடு, விமர்சன சிந்தனைத்திறன், அனுபவக் கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி பரிந்துரைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE