பறவைகளுக்கு தேவை பாசம் அல்ல... சுதந்திர சுவாசம் தான்...

By மீனாட்சி ராமசாமி

பரசுராமன்.... இவன் பறவைகளின் நண்பன். பத்தாம் வகுப்பு படிக்கும் இவனுக்கு படிப்போ பாகற்காய். இவன் ஒரு வித்தியாசமானவன். மனிதர்களின் குரலைக் கேட்டு அலுத்து விட்டானோ என்னவோ? பறவைகளின் கீச்கீச் சத்தம் மட்டுமே, அவனது காதுகளுக்கு இனிமையை தந்தது.

ஒருவேளை கூடு விட்டு, கூடு பாயும் வித்தை மட்டும், இவனுக்கு தெரிந்திருந்தால், இவனும் பறவை யின் உடலுக்குள் புகுந்து விடுவான். இவனது வீட்டு மொட்டை மாடியில் பறவைகளுக்காகவே அமைக்கப்பட்டிருந்தது ஒரு சிறிய அறை போன்ற கூண்டு. அதன் நடுவே பறவைகளோடு அமர்ந்திருந்தான் நம் பறவை நண்பன் பரசு. அவனது தந்தை அவனுக்கு கொரிக்க வாங்கி வந்த பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை யாவும் அவனது அளவில்லா பாசத்தால் அங்கே பறவைகளுக்கு இரையாகிக் கொண்டிருந்தது.

அம்மா சுமித்ராவின் விடாத அழைப்பு. அவன் அம்மாவிடம், அம்மா! ஏன் இப்படி பறவைகளை தொந்தரவு செய்றீங்க? நான் பரிட்சைக்கு படிக்கணும் அவ்வளவுதானே? என எரிச்சலாகக் கத்தினான்.

அஞ்சு நிமிஷம் பேசக்கூடாதா? - டேய்! அது இல்லடா பரசு! உங்க அப்பா உன்னோட பேசணும்னு சொல்றாரு. நீ அப்பாவோட பேசி எவ்வளவு நாளாச்சுன்னு உனக்கு தெரியுமா? கொஞ்சம் வந்து பேசு என கெஞ்சினாள் சுமித்ரா.

வெகு நேரம் கழித்து வந்த மகனிடம், ஏன்டா பரசுராமா! நீ அந்த பறவைங்களோட இருக்கிற நேரத்துல, என்கிட்ட வந்து ஒரு அஞ்சு நிமிஷம் பேசக்கூடாதா? ஆடும் வரை ஆடுடா, இந்த அப்பாவின் அருமை மாண்டால் தான் தெரியும் என தழுதழுத்த குரலில் சொல்லி கண்கள் கலங்கியபடி தன் பேச்சை மீண்டும் தொடர்ந்தார் தந்தை தனசேகர்.

டேய்.. தம்பி! நாளைக்கு நம்ம ஊர்ல இருக்கிற குலதெய்வ கோயில்ல பூசை செய்யச் சொல்லி இருக்கேன். இரண்டே நாள்தான். சீக்கிரம் கிளம்பு என்றார்.

நீங்க போங்க. நான் வரல. நான் வீட்டில இருந்து படிக்கப் போறேன் என்றான் பரசு. மகனை தங்களுடன் வரச் சொல்லி வற்புறுத்தினாள் சுமித்ரா.

மகனின் பிடிவாதம் மட்டுமே அங்கே ஜெயித்தது. பெற்றோர்கள் ஊருக்கு கிளம்பிய அன்று மாலை, வெளியே செல்ல தயாரானான் பரசுராமன். அங்கே அவனுக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவனது வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இது என்ன தெரியாமல் நடந்த தவறா? அல்லது தந்தை தனக்களித்த தண்டனையா? புரியாமல் விழித்தான் பரசுராமன்.

தந்தையின் கைப்பேசிக்கு விடாத அழைப்பு விடுத்தான். அப்பா! என்னை வீட்டுக்குள்ள வச்சு கதவை அடைச்சிட்டா, நான் படிப்பேனு நினைச்சிட்டீங்களா? ... நீங்க வரும் வரை நான் புத்தகத்தை தொடவே மாட்டேன்.. என்று கூச்சலிட்டான் பரசுராமன்.

செய்வதறியாது வாய் விட்டு அழுதான். துக்கம் தொண்டையை அடைத்தது. பிரிட்ஜில் இருந்த உணவு களை குப்பையில் கொட்டினான். பறவைகளிடம் பேசப் பிடிக்கவில்லை. கோபத்தில் புத்தகங்களை தூக்கி மூலையில் எறிந்தான். தன்னை ஏதோ சிறையில் அடைத்ததாக எண்ணி வருந்தினான்.

மறுநாள் வீட்டிற்கு வந்த பெற் றோரை பார்த்ததும், அப்பா.. ஏன்பாஇப்படி செஞ்சீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்? என்று கேள்விகளை தொடுத்த மகனின் கையைப் பிடித்து தரதரவென இழுத்து மாடிக்கு போனார் அப்பா.

ஏன்டா டேய்! ரெண்டு நாள் உன்னை அடைச்சதுக்கே இப்படி வேதனைப்படுறீயே! இந்தப் பறவைகளை எத்தனை நாளா நீஅடைச்சு வச்சிருக்க? என்று கேட்கவே, தன் தவறை உணர்ந்த பரசு, சட்டென்று ஓடிப்போய் பறவைகளின் கூண்டுக் கதவை திறந்தான்.

பறவைகள் சடசடவென பறந்து வெளியேறின. 'டேய் மகனே! இப்பபுரிஞ்சுக்கடா!.. நீ கதவைத் திறந்ததும், வளர்த்த உன்னை திரும்பிக் கூடப் பார்க்காமல், சிறகடித்து பறந்துசென்ற அந்தப் பறவைகளை பார்! அந்தப் பறவைகளுக்கு தேவை உன்பாசம் அல்ல. அதற்கு வேண்டியதெல்லாம் சுதந்திர சுவாசம் தான் என்றார் அப்பா.

- கட்டுரையாளர் எழுத்தாளர் ஆவடி, சென்னை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE