‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ - மாணவர்களின் அபாரமான அறிவியல் கண்டுபிடிப்புகள்

By என்.மாதவன்

மாணவர்கள் என்றால் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். எப்போதும் அலைபேசியை துழாவிக் கொண்டிருப்பார்கள். சமூக அக்கறையின்றி கண்ட இடத்தில் குப்பை வீசுவார்கள். இப்படியான பல்வேறு விமரிசனங்களைத் தவிடு பொடியாக்கி தங்களது தனித்திறன்களைத் தனிநபர்களாகவும் குழுவாகவும் பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்கள் பலர் நிரூபித்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் அமைந்திருந்தது சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (விஐடி) நிறுவனம் வழங்கிய ‘இந்து தமிழ் திசை - நாளைய விஞ்ஞானி 2023’ என்ற மாணவர்களுக்கான அறிவியல் நிகழ்வு. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எல்லையில்லாப் பொறியாளர் அமைப்பின் பெங்களூரு கிளை ஆகிய அமைப்புகளும் இணைந்து இந்நிகழ்வை அண்மையில் நடத்தின.

எண்ணெய் கழிவுக்குத் தீர்வு: எண்ணெய்க் கழிவுகளை எவ்வாறு தாவரம் ஒன்றின் இலைகள் மூலம் உறிஞ்சலாம் என்பது பற்றிய செயல் விளக்கம். இதை சொன்னதும் அண்மையில் சென்னை வெள்ளத்தில் எண்ணெய்க் கழிவு கலந்து ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்த சம்பவம் நினைவுக்கு வராமலா இருக்கும்? இதனை மனதில் வைத்து சோதனை முயற்சி ஒன்றை செய்து காட்டினர் சில மாணவர்கள்.

செயற்கையாக எண்ணெய் கழிவை தண்ணீரில் ஊற்றி ஒரு குறிப்பிட்ட தாவரத்தை அதன் மேல் தூவியதும் பிளாட்டிங் தாள் மையை உறிஞ்சுவது போல அந்த எண்ணெய் முழுவதுமாக உறிஞ்சப்பட்டது. மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அடுத்து, ஊருக்குள் புகும் யானைகளின் நடமாட்டத்தை அவற்றுக்கு தொந்தரவில்லாமல் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று ஒரு குழு முயன்றது. மண்ணின் வளத்தை எவ்வாறு கேப்சுல் மாத்திரைகள் மூலம் வேரின் அருகில் வைத்து கூட்ட இயலும் என்பதாக ஒரு செயல்திட்டம் அமைந்திருந்தது. இதேபோன்று, இயற்கைப் பொருட்கள் மூலம் நச்சுத்தன்மையற்ற வாசனை திரவியம் கண்டறிந்து ஒரு குழுவினர் கொசு விரட்டி தயாரித்திருந்தனர்.

பாலித்தின் பயன்பாட்டைக் குறைக்க வாழைத்தண்டின் மேற்பட்டைகளைக் கொண்டு பைகள், மஞ்சப்பை, உணவு தட்டுகள் தயாரித்தல் போன்ற முயற்சிகள் மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டது.

தங்க நேரம்: உள்ளூரிலேயே கிடைக்கும் பஞ்சினைக் கொண்டு எவ்வாறு பாதுகாப்பான சேனிடரி நேப்கினை தயாரிக்கலாம் என்றும் ஒரு குழுவினரின் முயற்சி அமைந்திருந்தது. மலைப்பாங்கான பகுதிகளில் எவ்வாறு வாகனஒட்டத்தைக் கட்டுப்படுத்தி விபத்தில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என்பதான முயற்சி.

எவ்வாறு பாலித்தின் கழிவுகளைக் கொண்டு சாலைகளை அமைக்கலாம் என்ற முயற்சியைப் பார்த்து அதிசயப்படாமல் எப்படி இருக்க முடியும்? விபத்தில் பாதிக்கப்பட்டோர் பாதிக்கப்பட்ட நேரத்திலிருந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனையை அடைகிறாரோ அந்த நேரத்தை ஆங்கிலத்தில் ’கோல்டன் அவர்’ (Golden hour) என்று அழைப்பார்கள்.

இங்கே நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளை விரைவாய் கொண்டு செல்ல உதவும் குறைந்த செலவிலான டிரோன்களை வடிவமைத்திருந்தனர். இதன் மூலம் அவசர கால மருத்துவ சேவைகள் எவ்வளவு முக்கியமானவை என்ற அறிவை அவர்கள் பெற்றிருப்பது எவ்வளவு பெரிய அறிவாற்றல்.

பார்த்தீனியம் என்ற நச்சுத் தாவரத்தினை நாம் நன்கறிவோம். அதனைக்கொண்டு உரம் தயாரிக்கும் முயற்சியினை ஒரு குழுவினரும், அதே தாவரத்தினை அழிக்க மரபணு மாற்றம் செய்து ஒரு மண்புழுவினைக் கண்டறியும் யோசனையை மற்றொரு குழுவினரும் தெரிவித்திருந்தனர். இது போன்ற முயற்சிகள் பிரபலமாகும்போது எவ்வளவு பெரிய சூழலியல் பலன்கள் கிடைக்கும்.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல் கைகளை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு எளிமையான பிளாஸ்டிக் குழாய்களைக்கொண்டு செயற்கைக் கைகள் தயாரித்திருந்தனர் ஒரு குழுவினர். இவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் தினம் தினம் பேசுபொருளாகும் பல சவால்களுக்கு விடையளிப்பதாக அமைந்திருந்தது ’நாளைய விஞ்ஞானி’ நிகழ்வின் மாநில அளவிலான பங்கேற்பாளர்களின் படைப்புகள். நம் மாணவர்களில் பலரும் கிரேட்டா துன்பர்க் போன்றே சிந்திக்கின்றனர் என்பதை நாம் பெருமையோடு நினைவு கூறலாம் தானே!

- கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE