கற்கத் தூண்டும் கைதட்டல்

By மு.மகேந்திர பாபு

வகுப்பறையில் அவ்வப்போது நிகழும் கைதட்டல்களின் ஓசையில் மாணவர் மனம் மகிழும். கைதட்டல், தட்டுபவரையும், பெறுபவரையும் மகிழ்ச்சிப்படுத்துகிறது. வகுப்பறையில் நாமும் கைதட்டல் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டுகிறது. அந்த ஆர்வம் எழுத்திலும் படிப்பிலும் வெளிப்படுகிறது.

தமிழ் பாடத்திற்கு தினமும் கையெழுத்துப் பயிற்சி ஏட்டினை மாணவர்கள் வைக்கிறார்கள். நாற்பது மாணவர்களில் சிலர் மறந்துவிட்டேன் ஐயா என்கிறார்கள். சிலர் எழுதி வீட்டில் வைத்துவிட்டேன் என்கிறார்கள். சிலர் எழுத வேண்டுமே என்பதற்காக எழுதுகிறார்கள்.

சிலர் அதை ரசித்து, கையெழுத்தை கலையாகச் செய்கிறார்கள். அவர்களது கையெழுத்துப் பயிற்சி ஏட்டில் நட்சத்திரக் குறியீடுகளும், மிக நன்று என்றும் எழுதி கையெழுத்திடும் போது அவர்கள் முகம் மலர்கிறது. ஆர்வம் வளர்கிறது. கூடுதலாக, மாலினிக்கு எல்லோரும் கைதட்டி வாழ்த்துச் சொல்லலாமா? எனக் கேட்க அனைவரும் கைதட்டி மகிழ் கிறார்கள். கைதட்டலின் ஒலியில் வகுப்பறை சுறுசுறுப்பாகிறது.

முதல் பாடவேளை. ஏதேனும் ஒருகதை மூலமாகவோ, பாடல் மூலமாகவோ, விடுகதை மூலமாகவோ மாணவர்களை ஆர்வமூட்டத் தொடங்குகிறேன். நாளிதழில் வந்த செய்திகளுக்கான வினாக்களை கேட்கும்போது, விடை தெரியும் என்றால் முந்திக்கொண்டு எழுந்துநின்று, சொல்லி பேனா பரிசாகப் பெறுகிறார்கள்.

ஒரு வேளை விடை தெரியவில்லை என்றால் அமைதி நிலவுகிறது வகுப்பறையில். அப்போது ஒரு மாணவன் தனக்குத் தெரிந்ததைச் சொல்கிறான். அவனுக்கு எல்லோரும் கைதட்டுங்கள் எனக் கூறியபோது, ஐயா, அவன் சொன்ன பதில் சரிதானா? எனக் கேட்கிறார்கள் ஆர்வமுடன். அவன் சொன்ன பதில் தவறுதான். ஆனாலும் அவன் முயற்சி செய்தான். அதனால் அவனுக்குக் கரவொலி எழுப்பி பாராட்டச் செய்தேன் என்றேன்.

அப்படியானால் நாங்களும் ஏதேனும் ஒரு பதில் சொல்லியிருப்போமே என்றனர் மற்ற மாணவர்கள். இதனால் இயல்பாகவே மாணவர் மனதில் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவரைக் கைதட்டிப் பாராட்ட வேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு இறுதித் தேர்வில் பத்தாம் வகுப்பில் தமிழில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவருக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசாக வழங்குகிறேன். இதைப்போல் ஒவ்வொரு பாட ஆசிரியரும் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார்கள். இது அவர்களுக்குள் படிப்பில் ஒரு போட்டியை ஏற்படுத்தி ஊக்கப்படுத்துகிறது.

படிப்பில் மட்டுமல்ல. கல்வி இணைச்செயல்பாடுகளான ஆடல், பாடல், ஓவியம், பேச்சு, கவிதை, களிமண்ணில், காய்கனியில், சாக்பீசில் உருவங்கள், சிற்பங்கள் செய்தல், விளையாட்டு என தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்குவிப்பது பள்ளியின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கச் செய்கின்றன.

மாணவர்களை ஊக்கப்படுத்த கரவொலியோ அல்லது ஒரு பேனாவோ, பென்சிலோ, சிறு புத்தகமோ என விலை குறைவான சிறு பொருள் கொடுத்தாலும் அது விலைமதிப்பற்றதாகி விடுகிறது.என்னுடைய பள்ளிப் பருவத்தில்எனது தமிழாசிரியர் கவிஞர். அ.கணேசன் அவர்களிடம் நான் எழுதிய கவிதைகளைக் கொடுத்தேன். அவர்வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னும் என் கவிதைகளைப் பற்றி சொல்லி கரவொலி எழுப்பி வாழ்த்துகள் தந்தார். அதன்விளைவு பதினெட்டு வயதில் ‘இந்தியனே எழுந்து நில்' என்ற எனது கவிதைகள் நூலாக மலர்ந்தது.

துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தில் மாணவர்களை படிப்பிலும், இணைச் செயல்பாடுகளிலும் ஊக்குவித்தால் அவர்களது கவனம் பிறவற்றில் திசைதிரும்பாது. சின்னச் சின்னக் கைதட்டல்களும், பரிசுகளும் மாணவர்களைக் கற்கத் தூண்டுவதோடு தனித்திறன் மிக்கவர்களாகவும் மாற்றும். வாழ்வில் உயரத்தில் ஏற்றும்.

- கட்டுரையாளர் தமிழாசிரியர், அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, இளமனூர், மதுரை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE