2000 ஆண்டுகால கல்வி வரலாற்றை தாங்கி நிற்கும் மலை

By கி.அமுதா செல்வி

2000 வருடங்களுக்கு முன்பாக உண்டு உறைவிட பள்ளி இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வியை கேட்டால் நம்மால் சரியாக பதில் சொல்ல முடியுமா? 1200 வருடங்களுக்கு முன்பாகவே பெண் ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடம் இருந்திருக்கக்கூடும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியுமா?. ஆனால் அப்படிப்பட்ட பள்ளிக்கூடம் இருந்திருக்கிறது.

இந்தப் பள்ளிக்கூடத்தை பராமரிப்பதற்காக மன்னர் ஒருவர் ஒருகிராமத்தையே தானமாக கொடுத்துள்ளார் என்பதை நம்மால் நம்பமுடிகிறதா? அது எங்கே இருந்திருக்கும் என்று தானே யோசிக்கிறீர்கள்? மதுரை மாவட்டத்திலுள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்தின் அருகே கீழக்குயில் குடியில் உள்ள சமணர் மலையில் தான் அந்த பள்ளி அமைந்துள்ளது. இன்று வரை அதற்கான சான்றுகள் அம்மலையில் காணப்படுகிறது. சுமார் 90 மாணவர்கள் தங்கியதற்கான படுக்கை வசதி கொண்ட அமைப்பு இன்றும் நம்மால் காண முடிகிறது.

சமணர் மலை: மதுரையில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் தேனி நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டை கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது கீழக்குயில்குடி சமணர் மலை. இந்த மலையில் 2000 ஆண்டுகள் பழமையான சமண படுக்கைகளையும் பள்ளியும் சமணர்களின் சிற்பங்களையும் காண முடிகிறது.

மகாவீரரின் சிலை: சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் மகாவீரரின் சிலை புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் கீழ் வட்ட எழுத்து கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. குரண்டி திருக்கட்டாம்பள்ளி மாணவர்களே இந்த புடைப்புச் சிற்பம் செய்வதற்கு காரணமானவர்கள் என்பதனை அந்த வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது.

இந்தப் பகுதியில் இயற்கையாகவே அமைந்துள்ள சுனை ஒன்று காணப் படுகிறது. இந்த சுனை பேச்சிப் பள்ளம் என்றும் அழைக்கப்படுகிறது. இதில், எட்டு தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் வட்ட எழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது.

சமணப்பள்ளி: பேச்சிப் பள்ளத்திலிருந்து கொஞ்சம் தூரம் மேலே செல்லும்போது கி.பி பத்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மாதேவி பெரும்பள்ளி என்ற சமணப் பள்ளியின் அடித்தளம் காணப்படுகிறது. அங்குள்ள கல்வெட்டிலிருந்து பராந்தக வீரநாராயணன் என்ற மன்னன் தன் மனைவி வானவன்மாதேவியின் பெயரில் பள்ளி ஒன்று எழுப்பப்பட்டது தெரிய வருகிறது.

மாதேவி பெரும்பள்ளியின் அடித்தளத்திலிருந்து மேலே செல்லும்போது மலை உச்சியில் தீபத்தூண் ஒன்று காணப்படுகிறது. இதன் அருகே கன்னட மொழி கல்வெட்டுகள் காணப்படுகிறது. தமிழகத்தில் கன்னட மொழி கல்வெட்டுகளா! என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும். சிரவணபெளகுளாவில் இருந்து வந்த சமண மாணவர்கள் தங்களது பெயர்களை கல்வெட்டுகளாக பொறித்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

தமிழி கல்வெட்டு: தீபத்தூண் இருக்கும் பகுதிக்கு செல்லாமல் மலையின் வட புறம் செல்லும்போது அங்கே தமிழில் கல்வெட்டு ஒன்றினைக் காண முடிகிறது. இந்த கல்வெட்டினை செல்வகுமார் என்ற தஞ்சைப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மாணவர் 2012-ம் ஆண்டு கண்டுபிடித்தார்.

இந்த கல்வெட்டு கி.மு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததுஎன்பதனையும் அங்கிருக்கும் கற்படுகை பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பதும் அந்த கல்வெட்டிலிருந்து அறியமுடிகிறது. இப்படிப்பட்ட 2000 ஆண்டுகால கல்வி வரலாற்றினை தாங்கி நிற்கும் மலையை பார்க்க ஆசை இருக்கிறதா வாருங்கள் மதுரைக்கு...

- கட்டுரையாளர் பட்டதாரி ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி குலமங்கலம், மதுரை

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE