கண் போன போக்கிலே கால் போகலாமா...

By முழுமதி மணியன்

நதியின் வெள்ளம் இரு கரைகளுக்கு இடையில் பாய்ந்து கரைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை சுதந்திரமாகச் செயல்படும். பிறரை துன்புறுத்தாத தன்மையே சுதந்திரம். கரைகளின் கட்டுப்பாட்டை தாண்டி வெள்ளம் வெளியேறும்போது நதி தன் கட்டுப்பாட்டை இழக்கிறது. பாதையை துறக்கிறது.

கட்டுப்பாட்டில் சுதந்திரமாய் இருந்த ஆற்றின் செயல் நன்மை என்பதாக இருந்தது. அது போற்றப்பட்டது, பாராட்டப்பட்டது, வணங்கப்பட்டது. கட்டுப்பாட்டை இழந்து அழிவை ஏற்படுத்திய நதி பலரின் துயரங்களுக்கு காரணமாகி மதிப்பை இழந்தது. கட்டுப்பாடும் சுதந்திரமும் இணைந்திருக்கும்போது தான் நன்மைகள் விளையும்.

கடலின் அலை கரையைத் தொட்டுவிட்டு செல்வது அழகு. அதுபோல கரைகளின் எல்லைகளுக்குள் இருக்கும்வரை தான் கடல் அலைகள் ரசிக்கப்படும். அதன் எல்லைகளைத் தாண்டி ஊருக்குள் பிரவேசிக்கும் போது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும். அவர்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு இன்னல்களுக்கு உள்ளாவார்கள். பிறரின் சுதந்திரத்தை பறிக்கும் எதுவும் புறக்கணிக்கப்படுவது திண்ணம். சுதந்திரமாக இருக்கிறோம் என்பதன் பொருள் ஒன்றின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறோம் என்பதே. சுதந்திரமான கட்டுப்பாடு மிகவும் பாதுகாப்பானது.

நமது சுதந்திர இந்தியா தனதுஎல்லைகளையும், மாநில பிரிவினைகளையும், அரசியல் கோட்பாடுகளையும், சட்டங்களையும் உருவாக்கி வரையறைகளுக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறது. தனது எல்லைகளை மீறாமலும் நமது எல்லைக்குள் யாரையும் அனுமதிக்காமலும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகிறது.

இதுவே இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் பாதுகாப்பான ஒன்றாகும். எல்லைகளுக்குள்ளும் வரையறைகளுக்குள்ளும் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம். கட்டுப்பாடுகளோடு வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனும் சுதந்திர மனிதனே.பிறரின் சுதந்திரத்திற்கு ஊறுவிளைவிக்காத சுதந்திரமே போற்றுதலுக் குரியது மதிப்புமிக்கது .

ஒவ்வொரு மனிதனும் சுதந்திரமானவனே. சுதந்திரமான மனிதர்களால் மட்டுமே சுதந்திரமான நாட்டை உருவாக்க முடியும். கட்டுப்படும் மனமும், கட்டுப்பாடான மனமும் உடையவர்களே சுதந்திர மனிதர்கள். காற்றுக் கூட ஒரு கட்டுப்பாட்டில் இருக்கும்வரை பூமியில் தென்றல் என்றும் உயிர் மூச்சு என்றும் போற்றப்படுகிறது. அது தனது கட்டுப்பாட்டை இழக்கும்போது புயலாக மாறி உயிர்களின் மூச்சினை நிறுத்தி அழிவை ஏற்படுத்தி விடுகிறது. கட்டுப்பாடு இல்லாத எதுவும் நன்மை விளைவிப்பதில்லை.

சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் சுதந்திரத்தின் பொருள் உணர்ந்து செயல்பட வேண்டும். சுதந்திரம் என்பது அவரவர் மனதிற்குள் இருக்க வேண்டும். மனம் கட்டுப்பாட்டை மதிக்கும் போது சிந்தனைகள் சிறந்த செயல்களாக வெளிப்படும். ஒவ்வொருவரின் தூய சிந்தனைகளும் சொல்லாக செயலாக வெளிப்படும் போது சமுதாயமும் நாடும் ஆக்கமும் ஊக்கமும் பெறும் சுதந்திரமான மனிதர்களால் மட்டுமே தன் சுற்றுப்புறத்தை தூய்மையாக்கவும், செழுமையாக்கவும் முடியும்.

சுதந்திரமானவர்களின் ஒவ்வொரு இயக்கமும் ஒரு கட்டுப்பாட்டிலேயே இயங்கிக்கொண்டிருக்கும் அவர்கள் கட்டுப்பாட்டையும் சுதந்திரத்தையும் ஆளும்வல்லமை பெற்றவர்களாக இருப்பார்கள். ஆம் சுதந்திரமும் கட்டுப்பாடும் ஒரு தாய் வயிற்றில் ஒட்டிப்பிறந்த இரட்டை பிள்ளைகள் போன்றவை சுதந்திரத்தை போற்றுவோம்! சுதந்திர மாய் வாழ்ந்திடுவோம்!

- கட்டுரையாளர்: கல்வியாளர், மயிலாடுதுறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்