வாசிப்பிற்குத் தேவை ஒரு கூட்டியக்கம்

By என்.மாதவன்

நூலகத்திற்குச் சென்று புத்தகங்களை இரவல் வாங்கித்தான் வாசிக்க வேண்டும் என்ற நிலை இன்று இல்லை. பலரும் நூல்களை பணம் கொடுத்து வாங்கத் தொடங்கியுள்ளனர். தமிழகமெங்கும் நடைபெற்று வரும் பல்வேறு புத்தகக் காட்சிகளில் பல கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்பனையாவது பெருமகிழ்விற்குரிய விஷயம்.

இன்றைய காலகட்டத்தின் புது பாய்ச்சலாகத் தோன்றும் புத்தக வெளியீடு அதன் விற்பனை போன்றவை மக்களிடையே வாசிப்புப் பழக்கத்தைக் கூட்டியுள்ளதா? என்றால் அது ஆய்வுக்குரியதே. ‘மெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை’ என்று ஒரு சொலவடை உண்டு. புதிய நூல்களின் விற்பனை என்பது எப்படி நம் வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறாக மாறியதோ அது போல வாசிப்பும் ஒரு பண்பாட்டு முன்னெடுப்பாக மாற்றப்பட வேண்டும்.

வளமான பொழுதுபோக்கு: உலகளவிலும் நமது மாநிலத்திலும் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரரீதியான முன்னேற்றம் மக்களுக்கு அடுத்த கட்டமாக ஓய்வுக்கும் கேளிக்கைக்குமான இடத்தை உண்டாக்கி இருக்கிறது. அவ்வாறான இடத்தை இன்றைக்கு பல்லூடகங்களும் சமூக ஊடகங்களும் கைப்பற்றியுள்ளன.

சமூக ஊடகங்களிலும் ஆரோக்கியமான அம்சங்கள் உள்ளன என்றாலும் வாசிப்பு தரும் அளவுக்கு நல்ல சிந்தனை மாற்றத்தை இவை ஏற்படுத்த வாய்ப்பில்லை. வாசிப்பு ஒரு வளமான பொழுதுபோக்கு. அந்த பொழுதுபோக்கினை வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ளப் பலரும் முன்வரவேண்டும்.

எவ்வாறு இதனை சாத்தியப்படுத்தலாம்? வாசிப்பில் ஆர்வம் கொண்டோர் சிறு சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கலாம். குழுக்களின் சந்திப்புகளில் தமது வாசிப்பு குறித்துகலந்துரையாடலாம். சில நேரம்மெய்நிகர் வழியிலும் கூடலாம்.

இன்றைக்கிருக்கும் நேர நெருக்கடியில் அனைவரும் அனைத்து நூல்களையும் வாசித்து முடிப்பது என்பது பெருங்கனவு. இவ்வாறான கூட்டுச்செயல்பாடு பலருக்கும் வாசிக்கும் ஆர்வத்தினைக் கூட்டும். இதுவரை அறிந்திடாத பல விஷயங்களைக் கற்றுத் தரும். இவ்வாறான வாசிப்புக்குழுக்கள் மூலம் சிறுசிறு சமூகப் பணிகளும் ஈடேறும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆரோக்கியமான சிந்தனைக்கு: கல்வி உரிமைச் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தி வருவதன் பலனாக குடியிருப்புப் பகுதிகளிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஆரம்பப்பள்ளிகள் என்பதில் தொடங்கி அடுத்தடுத்த தொலைவுகளில் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேனிலைப்பள்ளிகள் அமைந்திருப்பதைக் காண இயலும். அதுபோலவே, மக்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்த்தெடுத்து மனிதவளம் மேம்பட அரசு நூலகங்களையும் நடத்திவருகின்றது.

ஒரு ஒன்றியத்தில் பள்ளிகள் எப்படி கல்விக்கு பொறுப்போ, ஒரு பொது சுகாதார மையம் மக்களின் ஆரோக்கியத்திற்குப் பொறுப்போ அதுபோல மக்களின் சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றங்களுக்கு நூலகங்கள் பொறுப்பேற்க வேண்டும். சுகாதார மையங்கள் எப்படி மக்களின் உடல் நலனில் கவனம் செலுத்துகிறதோ அதுபோல நூலகங்கள் மக்களின் மனநலனை மெருகேற்ற பங்காற்ற வேண்டும்.

எழுத்தாளர்களின் கடமை: நூலகப்பயன்பாட்டை மேம்படுத்த நூலக வாசகர் வட்டங்களை நூலகங்கள் தொடர்ச்சியாக நடத்திவருகின்றன. பல நூலகங்கள் போட்டித்தேர்வுக்கு இளையோரை தயார்ப்படுத்தப் பயிற்சி வகுப்புகளும் நடத்திவருகின்றன.

இவையெல்லாம் ஆரோக்கியமான முன்னெடுப்புகள் என்றாலும் மக்களின் சிந்தனையில் ஆரோக்கியமான மாற்றங்களை தொடர்வாசிப்பும் அதையொட்டிய சிந்தனையும் கலந்துரையாடலும்தான் ஏற்படுத்தும். மேலே நாம் பகிர்ந்த வாசிப்பு மற்றும் பகிர்வு தொடர்பான செயல்பாடுகளை மேற்கொள்ள நூலக வாசகர் வட்டங்கள் முன்வரவேண்டும்.

இவ்வாறான சமூக முன்னெடுப்புகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் முழுமனதுடன் பங்களிப்பு செய்ய முன்வரவேண்டும். சமூக மாற்றத்தை தமதுஎழுத்துகளால் மட்டும் ஏற்படுத்திவிட இயலாது. சமூக சிக்கல்களுக்குத் தான் முன்மொழியும் தீர்வுகள் நடைமுறைக்கு வருவதில் மக்களின் சிந்தனை மாற்றமும் செயல்பாடும் அவசியமானது என்பதை உணரவேண்டும்.

- கட்டுரையாளர்: கல்வியாளர், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்; தொடர்புக்கு: thulirmadhavan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE