இளையோரின் கனவு மெய்ப்பட அரசின் பங்கு

By ரவி கண்ணப்பன்

பிள்ளைகளுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்வதில் பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகள் பல. அவற்றுள் தாங்கள் விரும்பியதைப் படிக்க வைக்கவில்லை என்பதும், அதனால் தங்களது காலமும், வாழ்வும் வீணானது என்பதும், இவற்றுக்கு பெற்றவர்களே காரணமெனக் குறை கூறுவதும் பிள்ளைகளின் நிலைப்பாடுகளில் சில. இக்குறைகளை போக்குவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற பல சூழல்கள் தடையாக அமையலாம். ஆனால், தீர்வு அரசின் விதியாக இருந்தால் எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகிவிடும்.

கல்வித்துறை மாற்று ஆலோசனை: வாரத்தில் நான்கு நாட்கள் தற்போதைய கல்வி முறையைக் கடைப்பிடிக்கவும், மீதி இரண்டு நாட்கள் பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த படிப்பை அல்லது தொழிலை அல்லது திறனைப் பயிலவும் தகுந்த வழி செய்யலாம்.

மேலும், திங்கள், செவ்வாய்,வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை களில் தற்போதைய கல்வி முறையையும், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பிள்ளைகளுக்குப் பிடித்ததை பயில்வதற்கான முறையையும் செயல்படுத் தினால், மாணவர்களுக்கு தற்போதைய கல்வி முறையினால் ஏற்படுவதாகக் கருதப்படும் மனஅழுத்தம் குறைகிறதா எனக் கண்டறியலாம்.

பிள்ளைகள் தங்களுக்கு பிடித்ததைத் தேர்ந்தெடுக்கும் வகையில் எல்லாவிதமான வாய்ப்புகளும் அனைத்துப் பள்ளிகளிலும் கிடைக்கவும், தேர்ந்தெடுத்தது பிடிக்கவில்லையென்றால் எத்தனை முறைவேண்டுமானாலும் வேறொன்றைத் தேர்வு செய்யும் பிள்ளைகளின் உரி மையில் எவரும் தலையிடாதவாறும் விதிகளை உருவாக்க வேண்டும்.

மற்ற பாடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பாடத்தின் அளவு உயர்த்தப்படுவது போல், புதிய முறைக்கும் அடிப்படை நிலையிலிருந்து திறனுடையவராகும் வரை வகுப்பிற் கேற்றவாறு அளவினை உயர்த்தலாம். இதன் விளைவாக, கல்லூரி படிப்பை முடிக்கும் போது, பிள்ளைகள் இரண்டு வகையிலும் தேர்ச்சியடைந்திருப்பதால், தங்களுக்குப் பிடித்ததைச் செய்து உயர்வடை வார்கள்.

செய்தொழிலில் மாறுதல் செய்வோம்: சில பிள்ளைகளுக்கு குடும்பச் சூழல் காரணமாக தங்களுக்குப் பிடித்ததைச் செய்ய முடியாத நிலைமை வரலாம். அவர்கள் முறையான கல்வி மூலம் என்ன வேலை கிடைக்கிறதோ அதில் சேர்ந்து கொள்ளலாம்.

அவர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் அவ்வேலையைச் செய்ய அனுமதி தரவேண்டும். மீதிநாட்களில் அவரவருக்குப் பிடித்ததைச் செய்வதற்கு வழிவகை செய்யவேண்டும். இதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உறுதியாகச் செயல்படுத்தக்கூடிய வகையில் அரசாணை பிறப்பிக்கவேண்டும்.

அரசின் முதலீடுகளுக்கான பயன்: இம்மாற்றங்களைச் செயல்படுத்தும் போது அரசுக்காகும் கூடுதல் நிதிச்சுமையைச் செலவென்று எண்ணாமல் தனிமனிதரை, குடும்பத்தை, சமூகத்தை, நாட்டை உயர்நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புக்கான முதலீடாகக் கருத வேண்டும். இம்மாற்றங்களால், பிள்ளைகளால் குடும்பத்தை நல்லமுறையில் வாழவைக்கவும் பிடித்ததைச் செய்து வாழ்வில் உயரவும் முடியும்.

பிடிக்காததைச் செய்யும் போது ஏற்படுகின்ற எதிர்மறை மனப்பான்மை, செய்தொழிலில் நாட்டமின்மை, மனஉளைச்சல், மன அழுத்தம் போன்றவை பிடித்ததைச் செய்யும் போதுநீங்குவதால், பிள்ளைகள் மகிழ்வாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வாழ்வில் உயர்வார்கள்.

இதனால், பெற்றவர்களைக் குறை கூறமாட்டார்கள். பிள்ளைகளின் நல்வாழ்க் கையைக் கண்டு பெற்றவர்களும் மகிழ்வார்கள். அனைவரும் மகிழ் வாக வாழும் போது நாட்டின் மகிழ்நிலைக் குறியீடு உயர்வடையும்.

மேலும், வேலையில் தரமும், உற்பத்தியும் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி நாட்டின் பெருமை உயரும். இவற்றால், தொழில் வளம் பெருகி நாடு வளம் பெறும்.

எந்த ஒரு செயலிலும் முதலில் எதையோ ஒன்றை முதலீடு செய்தாக வேண்டும். அது நேரம், உழைப்பு, பணம், இவை அனைத்துமாகவும் இருக்கலாம். பின்னர்தான், அதற்கான பலனை அனுபவிக்க முடியும். அரசு இம்முதலீட்டைச் செய்வதால், பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் நாட்டின் வளர்ச்சிஉயர்வது நிச்சயம்.

அதுமட்டு மின்றி விரும்பியதை செய்ய அனுமதிக்கவில்லை என்பதால் பெற்ற வர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உருவாகும் பல பிரச்சினைகள் நீங்கு வதும் உறுதி.

- கட்டுரையாளர், எழுத்தாளர், (வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்).

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE