செயலில் இறங்கு - காரணம் கூறாதே...

By ரவி கண்ணப்பன்

பிள்ளைகளுக்கான படிப்பை தேர்வு செய்வதில் பிள்ளைகளுக்கும் பெற்றவர்களுக்கும் இடையே ஏற்படும் பல பிரச்சினைகளில் ஒன்று, விரும்பமில்லாத படிப்பைப் படிக்கவைத்து பெற்றவர்கள் தங்கள் வாழ்வின் காலத்தை வீணாக்கிவிட்டார்கள் என்பதாகும். இப்பிரச்சினைக்கான மூலம், பிள்ளைகள் வாழ்வின் இரண்டு நிலைகளில் ஏற்படுகிறது. ஒன்று பத்தாம் வகுப்பு முடித்து பதினோராம் வகுப்பு சேரும் போதும், மற்றொன்று பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் ஏற்படுகிறது. படிக்கும் காலத்தில், பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றவர்களின் கட்டுப் பாட்டில் வாழவேண்டி உள்ளதால் பெற்றவர்களின் விருப்பத்திற்கு உடன்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதனால், தாங்கள் விரும்பாத படிப்பைப் படித்ததால் பல ஆண்டுகள் வீணாகி விட்டதென எண்ணும் மனநிலை பிள்ளைகளுக்கு உருவாகிறது.

ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிப்பது அனைத்து படிப்புகளுக்கும் பொதுவான அடித்தளமாக இருப்ப தால், இக்காலங்கள் பிரச்சினை இல்லை. 11-ம் வகுப்பு சேரும் போதுதான் வாழ்வின் போக்கைத் தீர்மானிக்கும் பாடங்களான அறிவியல், கணினி அறிவியல், வணிகவியல், பொருளாதாரம் போன்றவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அக்குழப்பங்கள் ஏதோவொரு வகையில் முடிந்து, 12-ம் வகுப்பு முடித்த பிறகு திரும்பவும் பட்டப்படிப்பிற்கான பலவித வாய்ப்புகளில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதில் பிரச்சினை உருவாகிறது. இந்த இரண்டு நிலைகளிலும், இக்குழப்பங்கள் ஏற்படுவதற்கு பெற்றவர்களின் விருப்பம் மற்றும் பொருளாதார நிலை, பிள்ளைகள் தேர்வில் பெறும் மதிப்பெண், சிலருக்கு வெளியூர் சென்று படிக்க தைரியமின்மை போன்றவை காரணமாகிறது.

இக்குழப்பங்களைத் தவிர்க்க, 8, 9, 10 வகுப்புகளிலே, பிள்ளைகளும்பெற்றோரும் 11-வது வகுப்பிலும்,பட்டப்படிப்பிலும் என்ன படிக்க வேண்டும் என்பதை ஆராய்ந்தறிந்து முடிவு செய்யவேண்டும். முடிவிற்கேற்றவாறு பிள்ளைகள் தங்கள் தகு தியை உயர்த்திக் கொள்ளவேண்டும். எனினும், மேல்நிலை வகுப்பு படிக்கும் இரண்டு ஆண்டுகளில், உலகம் எதனை நோக்கிச் செல்கிறது என்பதையும் அதற்கு என்ன பட்டப்படிப்பு படித்தால் சிறப்பான வாழ்வை அமைத்துக் கொள்ளலாம் என்பதையும் அறிந்து, ஏற்கெனவே எடுத்த முடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியாக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், சிறந்த படிப்பு எனத் தேர்வு செய்து படிப்பது விரைவில் பயனற்றதாகி, வேறு புதிதாக வந்துவிடுகிறது.

அதனால், பிள்ளைகள் தாங்கள் விரும்பிய படிப்பைத் தேர்ந்தெடுத்தாலும், அதைமட்டுமே நம்பியிருந்தால், மற்றவர் களிடமிருந்து பின்தங்கி விடுவார்கள். ஆகவே, புதியனவற்றை கண்டறிந்து பயின்று, பிள்ளைகள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தால் தான் எப்போதும் முன்னேறிக் கொண்டேயிருக்க முடியும். இதனைப் பிள்ளைகள் உணர்ந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதைவிடப் பெற்றவர்கள் புரிந்து கொள்வதும் மிக அவசியம். 11-ம் வகுப்பிலிருந்து முதுநிலை படிப்பு வரை, அவரவர் படிக்கும் படிப்பினைப் பொறுத்து 2 – 7 ஆண்டுகள் வீணானதாகக் கருதும் காலம் இருக்கலாம். இது பிள்ளைகளாகிய நீங்கள் வாழப்போகும் வாழ்வின் காலத்தில் ஒரு பகுதிதான். இதனை, நீங்கள் நினைத்தால் எளிதில் ஈடுசெய்து விடலாம்.

‘‘நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு’’ எனக் திருக்குறள் கூறுவது போல், பெற்றவர்கள் நன்மை உண்டாகும் என்று கருதி செய்தவை, உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது என நினைத்தால் அதிலிருந்து உங்களை காத்துக்கொள்ள நீங்கள்தான் வழிவகை செய்து கொள்ளவேண்டும். சென்றதினி மீளாது, எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர், இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனும் மகாகவி பாரதியின் சில வரிகளை ஏற்று செயலாற்றுபவர் தங்கள் நிலைக்கு எவரையும் காரணமாக்கமாட்டார்கள். விரும்பிய படிப்பையும், திறன் களையும், தொழில்களையும் பகுதிநேர முறையில் பயின்று வாழ்வை முன்னேற்றிக் கொள்வது முடியக்கூடிய ஒன்றே. செய்து பார் உயர்வாய்.

- கட்டுரையாளர் எழுத்தாளர். (வல்லமை சேர் மற்றும் வேர்களின் கண்ணீர் ஆகிய புத்தகங்களின் ஆசிரியர்).

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்