சுறுசுறுப்பையும், நினைவாற்றலையும் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு கற்றுத் தரப்படும் பாரம்பரிய விளையாட்டுக்கள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியில் இன்றைக்கு உலகம் உள்ளங்கைக்குள் வந்தநிலையில் பாரம்பரிய பழக்க வழக்கங்களும், உணவு முறைகளும் நம்மை விட்டு போய்விட்டன. அதனாலே, இன்று ஆரோக்கியத்தையும், மனநலனையும் காப்பாற்றிக் கொள்ள 40 வயதிற்கு மேற்பட்டோர் நடைப்பயிற்சி, உடற் பயிற்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால், குழந்தைகளுக்கு வழிகாட்டுவதற்கு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் நேரமில்லை.

24 மணி நேரமும் சுற்றும் கடிகார முள் போல் வாழ்க்கையை தக்க வைக்க பெற்றோர்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மதிப்பெண் கல்வியை நோக்கி ஆசிரியர்கள் மாணவர்களை துரத்துகிறார்கள். அதனால், இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் விளையாட நேரமில்லாமல் பள்ளிக்கும், சிறப்பு வகுப்புகளுக்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். கிடைக்கும் குறைந்த நேரத்தையும் செல்போனுக்கு அர்ப்பணித்துவிட்டு, குழந்தைப் பருவத்தையே தொலைத்து நிற்கின்றனர்.

இதற்கு ஒரு காலத்தில் குழந்தைகளை பெரிதும் மகிழ்வித்ததோடு, நற்பண்புகளையும் விதைத்து வந்த பாரம்பரிய குழு விளையாட்டுக்கள் குழந்தைகளுக்கு அந்நியமானதே முக்கிய காரணம்.

அதனால், குழந்தைகளின் விளையாட்டு உரிமையினை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் மதுரையில் சக்தி-விடியல் என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து வருகிறார்கள்.

மதுரையில் அடித்தட்டு, நடுத்தர மக்கள் வசிக்கும் 20 இடங்களில் குழந்தைகளுக்கு இந்த அமைப்பினர், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் இந்த பராம்பரிய விளையாட்டுப் போட்டிகளை கற்றுக் கொடுக்கின்றனர். கடந்த வாரம் மதுரை சுப்ரமணியபுரம் பகுதியில் உள்ள மதுரா கல்லூரி விளையாட்டுத் திடலில், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தனிநபர் விளையாட்டுக்கள், குழு விளையாட்டுக்கள், உள்அரங்க விளையாட்டுக்கள் மற்றும். வெளி அரங்க விளையாட்டுக்கள் என்ற பிரிவுகளில் பிகினர், பிரைமரி, ஜூனியர், இன்டர்மிடியட் மற்றும் சீனியர் என்ற அடிப்படையில் சுமார் 50 விளையாட்டுக்கள் நடத்தினர்.

தனி நபர் விளையாட்டுக்களான கோலிக்குண்டு, டயர் வண்டி ஓட்டுதல், பம்பரம், உள்ளரங்கு குழு விளையாட்டுக்களான சொட்டாங்கல், பிடி கொழுக்கட்டை, பல்லாங்குழி, தாயம், கிச்சு கிச்சு தாம்பளம், நால்கரம் ஆட்டம் , அத்தளி புத்தளி, கல்லாங்காய், கண்ணாடி வளையல் நூற்றான் குச்சி எடுத்தல், தாயம் செட் பிரித்தல் ஆகியவையும் நடத்தப்பட்டன.

வெளியரங்கு குழு விளையாட்டுக்களான பூப்பறிக்க வருகிறோம்,கொல கொலயா முந்திரிக்காய், கண்ணாம்பூச்சி, கிட்டி, கீந்துகம்பு, பன்னிவெட்டு, நொண்டி, ரங்க ராட்டினம், பிள்ளை பந்து, குரங்குப்பந்து, சப்பாத்தி கல், கோழிச் சண்டை, பச்சைக் குதிரை, கவட்டை அடித்தல், குரங்குப்பந்து, 7 கல் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

மேலும், விளையாட்டு பொருட்கள் செய்து கொடுக்கும் அரங்குகள் உருவாக்கப்பட்டு அதில் சோடா மூடி, சுழல் பந்து, காத்தாடி (பனை ஓலை, பேப்பர்), டப்பா மூடி வண்டி, களிமண் பொம்மை செய்தல், காகித விமானம், பீப்பி செய்தல் (நாணல், இலை}, தென்னை ஓலை ராக்கெட், பட்டம் விடுதல் போன்றவற்றை குழந்தைகள் செய்து காண்பித்தனர்.

சக்தி-விடியல் அமைப்பின் நிறுவனர் செயல் இயக்குனர் முனைவர் ச.ஜிம் ஜேசுதாஸ் கூறுகையில், ‘‘பெரும்பாலான குழந்தைகளுக்கு என்னென்ன விளையாட்டுகள் இருக்கிறது என்பதே தெரியவில்லை. பாரம்பரிய விளையாட்டுகளை அழிய விடாமல் தடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுதான் இந்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

ஒரு முறை சொல்லிக் கொடுப்பதோடு இல்லாமல் விடுமுறை நாட்களில் இந்த விளையாட்டுகளை தொடர்ச்சி யாக விளையாடுகிற சூழலை உருவாக்கி தருகிறோம்.

இந்த பாரம்பரிய விளையாட்டுகளால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். வெற்றி தோல்வியை எளிதில் அணுகக்கூடிய பக்குவம் ஏற்படும். தற்கொலை எண்ணம் தலைதூக்காது. விளையாட்டுகளால் மூளைக்கு வலிமையும், உடல்திறனும் மேம்படும். சுறுசுறுப்பையும், நினைவாற்றலையும் தருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்