சிந்தனை தெளிவே கல்வி

By நா. தமிழ்ச்செல்வி

வாழ்வில் தெளிவான சிந்தனையை வளர்த்துக் கொள்வதே கல்வி கற்பதன் உன்னத நோக்கமாகும். கற்றவர் பாதை தெளிந்த நீரோடை போல இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் தாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பாதுகாப்புடனும் தெளிவுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும். குழப்பங்கள் ஏற்பட்டால் சிந்தனை நம்மை தெளிவாக்க வேண்டும்.

பணம் வாழ்க்கையின் முக்கிய தேவை எனினும் அதனை சம்பாதிப்பதற்கான வழியாக மட்டும் நாம் கல்வியை பயன்படுத்தக்கூடாது. தெளிவான சிந்தனை இல்லாதவர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அது நல்வழியில் பயன்படுத்தப்படமாட்டாது. லட்சங்களை கொட்டிக் கொடுத்து மட்டும் லட்சியங்களை அடைய முடியாது. பெற்றோரின் அரவணைப்பிலிருந்து நீ வெளியே வந்து உனது வாழ்க்கையை தொடங்கும் போது சிந்தனை ஓட்டத்தில் தெளிவு இருக்க வேண்டும். அத்தகைய சிந்தனை ஓட்ட தெளிவை நாம் உடனே பெற்றுவிட முடியாது.

சிறு வயது முதலே நாம் கற்கும் ஒவ்வொரு கருத்திலும் நம்மை இணைத்து (பொருத்தி) சிந்திக்க பழகிக் கொள்ள வேண்டும். அந்த சிந்தனையானது ஆரோக்கியமானதாகவும் ஊட்டமிக்க தாகவும் அமைய வேண்டும்.

உயர்கல்வியில் தான் சிந்தனை பிறக்கும் என்பதில்லை. பள்ளிக் கல்வியிலேயே நம் மூளையை தட்டி எழுப்பி நற்பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும். உதாரணமாக எம்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன், எங்கள் பள்ளிக்கு அன்பளிப்பாக கிடைத்த புத்தகப் பையை அவனிடம் வழங்கிய போது "மிஸ் என்கிட்ட பேக் இருக்குங்க, என்னோட பேக் நல்லாவும் இருக்குதுங்க மிஸ், இங்க பாருங்க எதுவுமே கிழியல, எல்லாமே நல்லா இருக்குங்க மிஸ், இதே எனக்கு போதும்.' என்று கூறி பெற்றுக் கொள்ள மறுத்தபோது நான் அவனிடம் தோற்றுப்போனேன். என்னே! ஓர் சிந்தனைத் தெளிவு. எனவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கற்றுத் தெளியுங்கள். ஏன் அப்படிப் பிறக்கவில்லை, இப்படி பிறக்கவில்லை என்ற எண்ண ஓட்டங்களில் காலத்தை விரயம் செய்யாமல் கிடைத்த வாழ்வினை எவ்வாறு பயனுள்ளதாக்குவது என்பது பற்றி சிந்தியுங்கள்.

பளிங்கு பாதையிலே நாம் ஒவ்வொருநாளும் பயணிக்க முடியாது. கடினமான பாதையிலே பயணிக்கலாமா? வேண்டாமா? என்ற எண்ணமும் தோன்றக்கூடாது. நாம் ஒரு குறிக்கோளுடன் பயணிக்கும் பாதையில் கற்களும் இருக்கும். முட்களும் இருக்கும். அதைக் கடந்து செல்ல நாம் எவ்வாறு தயாராக வேண்டும் என சிந்தித்து எதற்கும் துணிந்து அந்தப் பாதையில் பயணிக்கத் தொடங்குவதே சிந்தனைத் தெளிவு.

நாம் தேர்ந்தெடுக்கும் பாதைக்கு குறிக்கோள் மிக அவசியம். அதாவது உங்கள் சிறு வயது முடிந்த உடனே குறிக்கோள் முடிவு செய்யப்பட வேண்டும். பாதையைக் காரணம் காட்டி பாதியிலேயே பின்வாங்குவதாக நம் சிந்தனை இருக்கக்கூடாது. கல்லாகிலும் முள்ளாகிலும் வெற்றிக்கோட்டினை தொடும் அளவுக்கு நம் சிந்தனை தெளிவானதாகவும் விசாலமானதாகவும் இருக்க வேண்டும். குறிக்கோளை எட்டும்சரியான பாதையில் தெளிவான சிந்தனையுடன் பயணித்தால் வெற்றி நிச்சயம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE