கடல் விவசாயம்

By தே. இளவரசி

நீலப்புரட்சி என அழைக்கப்படும் கடல் பொருளாதாரம் தற்போது பிரபலமாகி வருகிறது. விவசாயப் பயிர்களை விதைத்தல் பராமரித்தல், அறுவடை செய்தல் போல கடலில் விளைகின்ற அனைத்தையும் பாதுகாப்பதும் பிறகு அறுவடை செய்வதும் விவசாயம் செய்வதற்கு ஒப்பானது. கடலில் விதைப்பது நாமில்லை என்றாலும் இயற்கையில் விளைகின்ற கடல்வளங்களை மனிதனின் அபரிமிதமான நுகர்வு கலாச்சாரத்தாலும், மாசுபடுத்திகளாலும் சீரழிக்காமல் பாதுகாத்து சரியான பருவ நிலைகளில் அறுவடை செய்து பயன்பெற வேண்டும். விவசாய நிலங்களில் வேதி உரங்களை அதிகளவு பயன்படுத்துவதை தவிர்த்தல் போல கடலில் வெடிவைத்து மீன் பிடித்தல், தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்ப்பது கட்டாயம்.

கடல் தொலைவு: கடலுக்குள் செல்லும் தொலைவை நாட்டிகல் மைல் (Nautical mile) என்ற அலகால் குறிப்பிடுகிறோம். 1 நாட்டிகல் மைல் = 1.15 மைல் = 1.85 கிலோமீட்டர். இதுகுறித்து மீனவர் கனி, கண்ணன் ஆகியோர் கூறிய தகவல்கள்:

கால நிலைக்கு ஏற்ப காற்று வீசும் திசையைப் பொறுத்து நீரோட்டம் இருப்பதை கணக்கில் கொண்டுதான் கடலில் மீன், நண்டு, இறால் போன்றவற்றை அறுவடை செய்கிறோம். தொலைகடல் மீன் பிடித்தல் தொழிலுக்கு சுமார் 20 நாட்டிகல் தொலைவு வரை விசை படகுகளையும் (லாஞ்ச்), கரையை ஒட்டிய சுமார் 10 நாட்டிகல் தொலைவு வரை நாட்டுப் படகுகளையும் (தராத்து) பயன்படுத்துகிறோம். இறால்கள் குஞ்சு பொரித்து வளர்கின்ற இடம் கரையோரமாக இருந்தாலும் வளர்ந்த இறால்கள் தொலைகடலிலேயே இறால் மடி வலைகளின் மூலம் அறுவடை செய்யப்படுகிறது.

மேலும் பண்ணா மீன், காரல், நெத்திலி, வஞ்சிரம், ஓட்டுக் கனவாய் (Cuttle fish), பாறை, சுறா, கிளாத்தி, சால்மன் (காளா மீன்), மத்தி மீன், கானாங்கத்தை போன்றவை தொலைகடல் மீன் பிடித்தலில் கிடைக்கின்றன. இரண்டு நாட்டிகல் தொலைவிற்குள் செங்கனி, வெலமீன், மொரல்மீன், ஈச்சங்கனவாய் (Squid) கிடைக்கும். நண்டு, நகரை மீன் மற்றும் மிகச் சிறிய மீன் வகைகள் கரையின் அருகிலேயே ஒரு நாட்டிகல் கடல் தொலைவிற்குள் அறுவடை செய்யப்படுகிறது.

பருவ கால மீன் விளைச்சல் மழை பெய்தால்தான் பயிர் விவசாயம் செழிக்கும் என்பது போலதான் கடலிலும் பருவ மழைக்குப் பிறகுதான் மீன்கள் பெருகி அதிகளவு கிடைக்கிறது. வடகிழக்கு பருவமழைக் காலமான அக்டோபர் நவம்பர் டிசம்பர், ஜனவரி (வாடைக்காலம்) மாதங்களில் இறால் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும்.

நன்னீர் கடலில் கலக்கும் முக துவாரங்களில் சேரும் சகதியுமான இடங்களில் கடல் கலங்குவதால் அங்கு புதைந்துள்ள மீன்கள் வெளியேறி நெத்தலி, கிழங்கான், சூரை போன்ற மீன்களின் புழக்கம் அதிகமாக இருக்கும். நன்னீரோட்டம் குறைவான காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை (வெயில் காலம்) மாதங்களில் நண்டு அதிகமாகக் கிடைக்கும்.

மீன்பிடித்தல் உபகரணங்கள்: ஆழ்கடல் மீன் பிடித்தலில் மூச்சை அடக்கி கடலின் நிலப்பரப்பிற்கு சென்று சங்கு, கடல் அட்டை, கடல் குதிரை, நட்சத்திர மீன் போன்றவற்றை கையால் பிடித்து சேகரித்து வருவது மிகவும் சவாலான காரியம். இடுப்பில் கயிற்றால் கட்டி எடுத்துச் செல்லும் நீண்ட (மண்டா) ஈட்டியைப் பயன்படுத்தி திருக்கை மீனை குத்தி கயிற்றில் கோர்த்து மேலே இழுத்து வருவார்கள்.

தொழில்நுட்ப கருவிகளின் (GPS) (Eco Sounder) உதவியோடு குறிப்பிட்ட இடத்தையும், நீர்ப்பரப்பின் எல்லைகளையும், திசைகளையும் அடையாளம் கண்டு செல்ல முடிகிறது.

கரை வலையில் பல வகையான சிறிய மீன்கள் (மொரல் மீன், நகரை, ஓரா, செங்கனி, ஊளி, ஊடகம்) சேர்ந்து ஒரே வலையில் சிக்கி வரும். இவை தவிர ஒரே இடத்தில் ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கி வைத்தது போல மட்டி மீன்கள் கரையோர மண்ணில் பூதைந்து காணப்படும். அவற்றை கையாலேயே சேகரிப்பார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

- கட்டுரையாளர்: தாவரவியல் ஆசிரியை அரசு மேல்நிலைப்பள்ளி லக்காபுரம், ஈரோடு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE