இயற்கையிடமிருந்தும் கற்போம்...

By காமாட்சி ஷியாம்சுந்தர்

‘காகம் ஒரு அனைத்துண்ணி’ என்றுஅறிவியல் பாடத்தில் படித்திருப்போம். அதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோமா? காகம் தலையில் வந்து அடித்து விட்டுப் போனால் சனி பிடிக்கும்; கஷ்டம் வரும் என்றெல்லாம் சொல்லக்கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காகத்தின் இயற்கையான குணாதிசயங்களை பார்க்கும்போது எனக்கு அது உண்மை இல்லை என்று தோன்றுகிறது.

தனக்கு கிடைக்கின்ற உணவை தனது கூட்டத்துடன் இணைந்து உண்ண வேண்டும் என்று எண்ணி “கா”..”கா” என்று பலமுறை கரை கிறது. இதில் காகத்தின் ஒற்றுமை உணர்வை காண முடிகிறது.

அதேபோன்று ஏதோ ஒரு காகம் அடிபட்டு விழுந்தால் உடனடியாக காகம் கரைந்து தனது கூட்டாளிகளான மற்ற காகத்தினை அழைக்கும்போது விபத்தில் சிக்கிய மனிதனுக்கு முதலுதவி செய்ய முயற்சிக்காமல் அதனை அலைபேசியில் படம் எடுத்துக் கொண்டிருக்கும் மனிதாபிமானம் இல்லாத மனிதர்களை விட காகத்தின் காகநேயம் பெரிதாக தோன்றுகிறது.

தனது தேவைக்கான தண்ணீர் குடுவையின் அடியில் இருந்தாலும் கல்லினைப்போட்டு தண்ணீரை மேலே கொண்டு வர முயற்சித்து தாகம்தணிந்து செல்கின்ற காகத்தின் விடாமுயற்சியை காண முடிகிறது. மிகக் கடினமான உறுதியான ஓடுகளுடன்கூடிய கொட்டையில் உள்ள பருப்புகளை உண்ணுவதற்கான ஒரு முயற்சியாக நெரிசல் மிகுந்தசாலைகளில் செல்லும் வாகனங்களின் டயர்களில் பட்டு திறந்திடும் முயற்சியை காணும் போது காகத்தின் உழைப்பு தெரிகிறது.

தனது கூட்டில் குயிலின் முட்டைவந்துவிடாமல் தீவிரமாக கண்காணித்த பின்பும் பொறுப்புணர்வற்ற குயிலின் முட்டை கூட்டினில் இருந்தால் அதனை அடைகாக்கும் பொறுப்பினை ஏற்கிறது. முட்டையிலிருந்து வெளிவந்த பின்னும்கூட உணவளித்து பராமரிக்கும் காகத்தினை பார்க்கும்போது அதனுடைய குடும்பப் பொறுப்புணர்வை உணர முடிகிறது.

தனது இணைக்காகவும் தனதுகுஞ்சுகளுக்காகவும் தேடித்தேடி குச்சிகளையும், நூல், மரப்பட்டைகளை யும், பஞ்சு, வைக்கோல் என காலநிலையின் மாற்றத்தையும் உணர்ந்து மழைக்காலங்களில் அடர்ந்த மரங்களின் நடுவில் மிகவும் பாதுகாப்பாகவும், மழை வராத காலங்களில் மரநுனியில் உள்ள கிளைகளிலும், தனது கூட்டினை கட்டும் முயற்சியை பார்க்கும்போது காகத்தின் புத்திசாலித்தனத்தை உணர முடிகிறது.

எந்தவிதமான கால நிலையிலும் தன்னை தகவமைத்துக் கொள்கின்ற காகம் உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் பரவலாக தென்படுகிறது. இதனை எண்ணும்போது சவாலான சூழ்நிலையை எதிர்கொள்கின்ற தைரியத்தை உணர முடிகிறது. மனிதர்களிடம் இருக்க வேண்டிய பல குணநலன்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் “இயற்கையின் படைப்புகளான பறவைகள் மற்றும் விலங்குகளிடம் இருக்கும் நற்குணங்களை உற்று நோக்க பழகுவோம்; மனித நேயம் குறைந்து வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் காகத்தின் குணாதிசயங்களிலிருந்து பாடம் கற்போம்.

- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE