வாழ்க நீ எம்மான்…

By கலாவல்லி அருள்

மகாத்மா என்பதன் பொருள் என்ன, என்று கூகுளில் தேடியபோது, புனிதமான, மேலான, உயர்வான ஆத்மாவைக் கொண்டவர் என தமிழ் விக்சனரியில் கூறப்பட்டுள்ளது.

‘புனிதர்’ என்பதற்கு, ‘தெய்வீகத் தன்மையுடன், உயர்வாக மதிக்கத் தக்க பண்புகளை உடையவர்’ என்பது பொருள். ஆம், அன்பு, பாசம், நேசம், பரிவு, பிறர் நிலையில் தன்னை வைத்து யோசித்தல் போன்ற மேலான, தெய்வீகத் தன்மை வாய்ந்த நேர்மறை எண்ணங்கள் காந்தியிடம் நிறைந்திருந்தன.

மேலாடை இல்லாமல் தன்னை சந்தித்த விவசாயிகளைப் பார்த்தபோது, அவருள் ஏற்பட்ட தாக்கத்தால், அரையாடை அணியத்தொடங்கி, இறுதி வரை அரையாடையை அணிந்து வாழ்ந்தார் அந்த மாமனிதர். பிறர்படும் துயரத்தை, தன் துயரமாய் நினைத்து, அதை சீர்செய்ய முயற்சித்து, அதன்மூலம் அனைவரின் மனதிலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மகான் அவர்.

‘மேலான’ என்பதற்கு, ‘சிறந்ததிலும் சிறந்தது’ என்பது பொருள். ஆம், தன் நிலையிலிருந்து ஒருபோதும் மாறாமல் சிறந்தவரிலும், சிறந்தவராக திகழ்ந்தவர் நம் காந்தி. இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது பற்றி

பேசுவதற்காக, காந்தியடிகளை லண்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அக்காலத்தில், பிரிட்டிஷ் மாமன்னரை சந்திப்பதற்கு என தனியாக சில உடை மற்றும்நடத்தை விதிமுறைகள் இருந்தன. பிரிட்டிஷ் பிரதமருடனும், வைஸ்ராயுடனும் பேச்சுவார்த்தை நடத்த, வழக்கம் போல் வேட்டி அணிந்து கைத்தடியுடன் உள்ளே நுழைந்தார்.

அதைப் பார்த்த பிரதமர், கோபத்துடன் பேசி காந்தியை கிண்டல் செய்தாராம். ஆனால், காந்தி சற்றும் கோபப்படாமல், பேச்சுவார்த்தையை முடித்து வெளியே வந்தாராம். காந்தியிடம், “இந்த எளிய உடையுடன், மன்னர் எதிரில் நின்றது உங்களுக்கு கூச்சமாக இல்லையா?” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டபோது, “எங்கள் இருவருக்கும் தேவையான உடையை மன்னர் ஒருவரே அணிந்திருந்தாரே, பிறகு நான் ஏன் கூச்சப்பட வேண்டும்?” என்று சிரித்தவாறே கூறினாராம்.

எந்த சூழ்நிலையிலும் தன் நிலையிலிருந்து மாறாது விளங்கி, கோபத்தை விட்டொழித்து, புன்னகை பூத்த முகத்தோடு, அனைவருக்கும் முன்னுதாரணமாய் ஒரு மேலான மனிதராகத் திகழ்ந்த மகான் அவர். ‘உயர்வான’ என்பதற்கு, ‘தெய்வத்திற்கு ஒப்பான’ என்று பொருள் கொள்ளலாம். “உண்மையின் பேர் தெய்வம் என்போம்” என்ற பாரதியின் பாடல்வழி, ‘உண்மையே தெய்வம்’ என்பதை அறியலாம்.

“கடவுள் என்றால் சத்தியம் மாத்திரமே எனக் கருதி நான் வழிபடுகிறேன். சத்தியத்தைத் தவிர வேறுகடவுள் இல்லை என்பதை, ஒரேமாதிரியான என்னுடைய அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன” என்று தனது சுய சரிதமான ‘சத்திய சோதனை’ புத்தகத்தின் முடிவுரையில் காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியத்தையும் அகிம்சையையும் கையாண்டு, அவற்றின் வழி நின்று, அவற்றை வாழ்நாள் முழுவதும் பின்பற்றி நமக்கெல்லாம் முன்னுதாரணமாய் நம் உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் மகான் அவர். சத்தியத்தை நித்தியமாய்க் கொண்டு, உண்மையே நன்மை எனக் கண்டு, ஆகச் சிறந்த உத்தமராக வாழ்ந்த காந்தியை, ‘மகாத்மா’ என்று அழைப்பது சாலப் பொருந்தும்.

“வாழ்க நீ எம்மான்” என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பற்றி மகாகவி பாரதி எழுதியுள்ள பாடலில், “பெரும் கொலை வழியாம் போர் வழி இகழ்ந்தாய், அரும் கலைவாணர் மெய்த் தொண்டர் தங்கள் அறவழி என்று நீ அறிந்தாய்” என்று எழுதியுள்ளார்.

ஆம், சத்தியத்தை கடைபிடித்து வாழ வேண்டும் என்று உறுதி ஏற்பதே, அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் ஆகும்.

- கட்டுரையாளர், தலைமையாசிரியர், அரசினர் மேல் நிலைப்பள்ளி, சிங்காடிவாக்கம் காஞ்சிபுரம் மாவட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE