கற்றல் இடைவெளியை சீரமைக்க என்ன செய்யலாம்?

By எம்.எஸ். சரவணன்

தேசிய கல்விக்கொள்கை 2020-ன்பரிந்துரையின்படி திறன் அடிப்படையிலான மதிப்பீடான ‘சஃபல்’ (SAFAL), ஜூலை 2021லிருந்து சிபிஎஸ்இ பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. இது கணிதம், மொழி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (EVS) ஆகிய பாடங்களில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் வருடாந்திர மதிப்பீடாகும்.

கடந்த இரண்டாண்டுகளாக நாடு முழுவதும் உள்ள 1887 சிபிஎஸ்இ பள்ளிகளில் பின்பற்றப்பட்ட ‘சஃபல்’மதிப்பீட்டின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதலிருந்து படிப்பினை பெற்று நாம் செயலாற்ற வேண்டிய திசை குறித்து இங்கு காண்போம்.

ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இந்திய அளவில் மொழி மற்றும் கணித பாடங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாய் உள்ளனர். சுற்றுச்சூழல் அறிவியல் (EVS) பாடப்பிரிவில் ஒரு கிரேடு நிலைக்குக் கீழே அடிப்படை நிலையில் உள்ளனர்.

எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்துப் பாடங்களிலும் ஒரு கிரேடு நிலைக்குக் கீழே அடிப்படை நிலையில் உள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளின்படி மாணவர்களிடையே கற்றல்இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கற்றல் இடைவெளியை அதிகப்படுத்தியதில் கரோனா பெருந்தொற்று காலத்துக்குக் கணிசமான பங்குள்ளது. ஆகவே இந்தக் கற்றல்இடைவெளியை சீர் செய்வதில் ஆசிரியர்களுடைய பங்கு இன்றியமையாதது. இல்லையெனில், கரோனா காலத்துக்கு பிந்தைய ஒரு தலைமுறை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்.

1. பள்ளி நேரத்திற்குப் பிறகு கூடுதல்வகுப்புகள்: பள்ளி நேரத்திற்குப் பிறகு கூடுதல் வகுப்புகள் நடத்துவது குறித்து பள்ளிகள் பரிசீலிக்க வேண்டும். இந்த கூடுதல் வகுப்புகள் மாணவர்கள் தங்கள் பாடம்சார்ந்த சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும் தங்களுடைய புரிதலை மேம்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் அமைய வேண்டும்.

2. ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டங்கள்:ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான பயிற்சிவகுப்புகள், புதிய கற்றல் வழிமுறைகள் அவ்வப்போது பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் இக்காலத்துக் கல்வி சூழலுக்கு ஏற்ப தங்களின் கற்பிக்கும் வழிமுறைகளை மாற்றிக் கொள்வதும் அவசியம்.

3. தொழில்நுட்பம் சார்ந்த கற்றல்: அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மின்னணு தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி (டிஜிட்டல் டூல்ஸ்) கற்பிக்கும் சூழலை ஏற்படுத்துதல் வேண்டும். மாணவர்களுக்கு அவர்களின் அறிவை மேம்படுத்தக் கூடிய கல்வி சார்ந்த வலைத்தளங்களைப் பற்றி ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். இவை, அவர்களுக்கு கல்வி மீதான ஆர்வதை தூண்டும்.

4. தனிப்பட்ட கற்றல் திட்டங்கள்: ஒவ்வொரு மாணவரின் பலம் மற்றும் பலவீனத்தை ஆசிரியர்கள் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். மாணவர்களுடைய கற்றல் முறைகளும், கற்றலின் வேகமும் ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருப்பதை உணர்ந்து அவரவரின் தேவைக்கு ஏற்ப கற்பிக்கும் முறைகளும், திட்டங்களும் அமைதல் வேண்டும். இவை ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட கற்றல் தேவைகளை பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும்.

5. பெற்றோரின் ஈடுபாடு: மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்கு மிக முக்கியம். ஆசிரியர்கள் அவ்வப்போது பெற்றோரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவர்கள் குழந்தைகள் எந்த அளவிற்கு கற்றலில் முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தப் பகிர்வு ஆசிரியர் பெற்றோருக்கு இடையே நல்லபுரிதலை உருவாக்கும். இந்த புரிதலே மாணவர்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.

6. மாணவர்களின் மனநலம்: ஆரோக்கியமான கற்றலுக்கு ஆரோக்கிய மான மனநலம் அவசியம். ஆகவே பள்ளிகள் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி சுமுகமான கற்றல் சூழலையும் உருவாக்கித் தர வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள அணுகுமுறைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதன் மூலம் நாம் மாணவர்களிடையே இருக்கின்ற கற்றல் இடைவெளியை குறைத்து அவர்கள் தங்கள் எதிர்காலத்தை எந்தஒரு தயக்கமும் இன்றி எதிர்கொள்ள ஆவன செய்ய வேண்டும்.

கட்டுரையாளர்: சிருஷ்டி பள்ளிகளின் தலைவர், வேலூர்; தொடர்புக்கு: principal.mssaravanan@gmail.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE