குழந்தைகள் விடுமுறையை கொண்டாடட்டும்

By மகா.இராஜராஜசோழன்

துளிர் வகுப்பில் படிக்கிறாள் மகள். துளிர் வகுப்பு என்பதால் எல்லா வகுப்புகளுக்கும் முன்பாகவே தேர்வு முடிக்கப்பட்டு பத்துநாட்கள் காலண்டு விடுமுறை விடப்பட்டுவிட்டது. கடைசித் தேர்வு அன்று பள்ளி மதிய வேலையோடு நிறைவடைந்தது. பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்து மகளின் பள்ளிப் பையைப் பார்த்தோம். தமிழ், ஆங்கிலம், கணிதம், ஈ.வி.எஸ் என மொத்தம் நான்கு வினாத்தாள்கள் இருந்தன. ஒவ்வொரு பாடத்தாளிலும் ஐம்பது மதிப்பெண்ணிற்கான வினாக்கள் கேட்கப்பட்ட நான்கு வினாத்தாள்கள் இருந்தன.

இந்த வினாத்தாள்கள் விடுமுறைநாட்களுக்கான அசைன்மென்ட் என்றும் இதனை தாங்களே எழுதவேண்டும் எனவும் பள்ளியில் மகளிடம் தகவல் சொல்லியிருக்கிறார்கள். வீட்டிற்கு வந்த உடனேயே வினாத்தாள்களை எடுத்துக்கொண்டு "அம்மா எழுதிக்காட்டுங்க நான் பார்த்து எழுதறேன்" என்றாள். "செம்மொழி இன்னும் லீவ் பத்து நாள் இருக்கு பாப்பா நாளைக்கு எழுதலாம்" என எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை அழத் தொடங்கிவிட்டாள்.

பிறகு சமாதானம் செய்து "தமிழ் வினாத்தாளை மட்டும் இப்போது எழுதலாம் பாப்பா மற்றதை எல்லாம் நாளை எழுதலாம்" எனக் கூறி விடுமுறை விட்ட அன்று மாலையே தமிழை எழுதி முடித்துவிட்டாள். எழுத வேண்டும் என்கிற ஆர்வம் கடந்து மிஸ் திட்டுவாங்க என்கிற அச்சம் மிக ஆழமாக அவளுக்குள் புதைந்து கிடக்கிறது.

தினமும் காலை கண் விழிக்கும் போதெல்லாம் "அப்பா எழுதனும்பா கலர் அடிக்கனும்பா" என்றுதான் பேசவே தொடங்குகிறாள். இன்னும்எழுத்துகளைக்கூட அடையாளப்படுத்த தெரியவில்லை. ஆனாலும் எழுதி முடிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவளை எழுதத் தூண்டிக் கொண்டே இருக்கிறது.

விடுமுறையை மகிழ்ச்சியாக்குவோம்: பள்ளிக்கு போகும்போது "எப்போஅப்பா லீவ் விடுவாங்க" என்று தான் கேட்பாள். இன்னும் நான்கு நாட்கள் இருக்கிறது, மூன்று நாட்கள்இருக்கிறது என்று விடுமுறை வரும்நாட்களைக் கூறி சமாதானப்படுத்து வோம். அப்படியும் காலை புறப்படும் போது சின்ன அழுகையோடுதான் புறப்படுவாள்.

இந்த மனநிலையில் பள்ளி செல்லும் குழந்தைக்குத் தான் விடுமுறை நாட்களிலும் எழுத்து வேலை கொடுக்கிறார்கள். அவை ஒரு புறம் இருக்கட்டும். விடுமுறையை குழந்தைகள் மகிழ்ந்து கற்பதற்கான புதிய திட்டங்களைப் பெற்றோர்களே தீட்டி விடுமுறையை மகிழ்ச்சியாக்கலாம்.

காட்சியகங்களுக்கு போகலாமே! - நம் ஊரில் அல்லது அருகில் இருக்கும் தொல்லியல் காட்சியகங்கள் அல்லது கோளரங்கம் போன்ற புதிய இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். குழந்தைகள் பார்த்தும் மகிழ்ந்தும் கற்பதற்கான பல செய்திகள் அங்கு கொட்டிக்கிடக்கின்றன.

விடுமுறை நாட்களில் குழந்தைகளை நூலகங்களைப் பார்க்கவும் குழந்தைகள் பகுதிகளில் சென்று எப்படிப் படிக்க வேண்டும் என்கிற அறிமுகத்தையும் எப்படி நூலகத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் நேரடியாக காட்டலாம். இது குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த வாசிப்பாளராக உருவாக வழிவகுக்கும்.

கடலை பார்க்கும்போது அங்குள்ள பெரும் நீர்பரப்பையும் அலையையும் கண்டு மகிழ்வார்கள். கடல் சார்ந்த பொருட்களான மீன், சங்கு, சிப்பி, நண்டு, படகு, வலை, மணல், ஆமை என பல புதிய பொருட்கள் அவர்களுக்கு அறிமுகமாகும். இப்படியான புதிய திட்டங்களை ஒவ்வொரு நாட்களும் உருவாக்கி அந்தப் பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள். எங்கு இன்றைக்குச் செல்லலாம் என குழந்தையின் விருப்பத்தை கேட்டு அங்கு அழைத்துச் செல்லுங்கள்.

வீட்டிற்குள் அடைத்து குழந்தைகளை எழுது எழுது என தொல்லை செய்து அவர்கள் கற்றுக் கொள்வதைவிட பன்மடங்கு புதிய இடங்களும் புதிய மனிதர்களும் கற்றுத் தருவார்கள். விடுமுறையை மகிழ்ச்சி யோடு குழந்தைகள் விளையாடிக் கழிக்கட்டும்.

- கட்டுரையாளர் குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

1 month ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

வெற்றிக் கொடி

2 months ago

மேலும்