இன்றைய தலைமுறையின் விருப்பம் என்ன?

By அ.கிரேஸி மேரி

ஆடம்பரமாக இருப்பதை ஆராதிக் கின்றனர். நண்பர்களோடு நேரம் செலவழிப்பதை மகிழ்ச்சியாக நினைக்கின்றனர். சுமையற்ற இறகு போன்ற இலகுவான இன்பத்தை ஏற்க ஏங்குகின்றனர். எல்லாம் எளிதில் கிடைத்துவிட வேண்டும் என்ற இலக்கற்ற மனோநிலையில் வாழ்வை எப்போதும் நகர்த்துகின்றனர். ஏன் இந்த நிலை?

எண்பதுகளிலும், தொண்ணூறுகளி லும் வளர்ந்த குழந்தைகள் மிதமான செலவினங்களில் வார்க்கப்பட்டனர். பள்ளிக்கு தனித்துச் சென்று வரும் வழக்கம் கொண்டிருந்தனர். அலைபேசிகள் அலைக்கழிக்காத அற்புதமான காலம் அது. பாடப்புத்தகங்களை மனனம் செய்து மதிப்பெண் என்ற இலக்கு அற்று வாழ்ந்த காலங்கள் இனி மீளாது. அப்படியான இணைய இணைப்பற்று வாழ்ந்த வாழ்க்கை இனி சிறுகதைகளில் மட்டுமே வலம் வர காண முடியும்.

இன்றைய குழந்தைகள் தேர்ந்த பள்ளிகளில் கல்வி கற்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் போதும், வரும்போதும் கூடவே பெற்றோர்கள் பயணிக்கின்றனர். ஆசிரியர்களும் தேர்ந்தே எடுக்கப்படுகின்றனர். பள்ளிகள் மதிப்பெண் இயந்திர குழந்தைகளைத் தேர்ந்தெடுக்கின்றன. இத்தகையதொரு தகவமைப்பு "எதிர்த்து நிற்கும் மனநிலையை" அழித்து உணர்வுப்பூர்வமான மாய உலகத்தை வழிகாட்டுகின்றன.

எதிர்பாலின நட்பு: ஆண், பெண் என்ற எதிர்பாலின நட்புகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ற மனநிலை பதின்ம வயதில் சவாலாக நிற்கிறது. குழந்தைகள் "நான் சிங்கிள் தான்" என்று பொது இடங்களில் கூறிக் கொள்ளும் அளவிற்கு நாகரிகம் பெருகியுள்ளது.

குழுவாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவி, படித்துமுன்னேறிய காலங்கள், தற்போது குழுவாக இணையத்தில் குறுஞ்செய்திகள் அனுப்புவதையும், குரூப்கால் பேசுவதிலும், அதை ஸ்டேட்டஸில் போடுவதையுமே மதிப்பும் மரியாதையு மாக எண்ணுகிற பண்பாட்டு மாற் றம். நாள் முழுக்க பயணித்த நண்பர்களிடம் வீட்டுக்குச் சென்று கால் செய்கிறேன் என்று கைகளையே அலைபேசி ஆக்கி சைகை மொழி பகிர்வதில் கரைந்து போகின்றது இக்கால இளைய சமூகம்.

காரணங்களே பதிலாகுமா? - அருகிலிருக்கும் மனிதரின் முகம்நோக்கி, புன்னகைக்காது, முகமறியா முகவரி, அறியா எங்கோ எப்போதோ கண்ட சிநேகிதங்கள், இதுவரை காணாத நண்பர்கள், நாள் முழுவதும் ஒற்றை வரியில் கலந்துரையாடுவதோடு அவர்கள் அனுப்புகிற ஜோக்குகளைக் கண்டு, சிக்கனமாக சிரித்து நாள் நகர்த்தும் நாம் வேறொரு பண்பாட்டு மாற்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எதிர்கால இலக்குகளைவிட நிகழ்காலமகிழ்வுகள் அவசியத் தேவையாகிவிட்டன. கதைகளும், அறிவுரைகளும் கூறினால் வயதானவர்கள் எனக் கூறுவதோடு பலவித பெயர்கள் வைத்து அழைத்து மகிழும் காலங்கள் நடைமுறையில் உள்ளன.

கேளாத காதுகள், வாசிக்காத கண்கள், சிந்திக்காத சிந்தை நல்வழியில் எவ்வாறு செல்ல இயலும்? புத்தக வாசிப்பால் மட்டுமே மனித மனங்களை நேசிக்க முடியும். கதை கேட்பதன் மூலம் சிந்தனைகளை வளர்த்தெடுக்க முடியும். வாசித்துப் பழகுவோம். மனிதர்களை நேசித்து வாழ்வோம். முகம் நோக்கி புன்னகைசெய்ய இன்றைய இளைய தலைமுறை யினருக்குக் கற்றுக் கொடுப்போம்.

- கட்டு்ரையாளர் ஆசிரியர், எஸ்.ஆர்.வி.சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளி, திருச்சி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE