பயண அனுபவமும் மகிழ்ச்சிதான்...

By முனைவர் கா. சாகித்யபாரதி

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் எப்படி என்பதையும், நாம் நினைத்தபடி செயல்படுத்துவதும் மிகவும் சிரமமாக இருக்கிறது. காரணம் வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போன்று அல்ல. வாழும் வாழ்க்கை நாம் நினைப்பதை நிறைவேற்றும் களம் அல்ல, மாறாக என்ன நடக்க வேண்டுமோ அது எப்போது, யாரால் நடக்குமோ என யாருமே அறியாத விதத்தில் மிக நன்றாக நடப்பதும் உண்டு.

இப்படி ஒரு சூழ்நிலை நம் அனைவரையும் அழைத்து கொண்டு செல்லும்போது நாம் நினைப்பது நடந்தால் மகிழ்ச்சி. இல்லையென்றாலும் மிகவும் மகிழ்ச்சி என்றுதான் எடுத்து கொள்ள வேண்டும். மாறாக நினைத்தது நிறைவேறவில்லை என்று வருந்தினாலும், நடந்தது நிறைவு என்று மகிழ்ச்சியுடன் இருந்தாலும் என இரண்டுமே ஒன்றுதான்.

வாழ்க்கை பயணத்தில் ஏற்றம், இறக்கம், மேடு, பள்ளம் போல மகிழ்ச்சி, துன்பம் என பலவும் மாறி, மாறி வந்து போகத்தான் செய்யும். ரயிலில் பயணிக்கும் போதோ அல்லது பேருந்தில் பயணம் செய்யும் போது உடன் வரும் பயணிகள் யாருமே நம்முடனே வருவேன் என்றோ அல்லது நம்மிடம் எந்தவிதமான சலுகைகள், எதிர்பார்ப்புடனோ வருவதில்லை. அவரவர் ஏறும் இடத்தில் ஏறி, எங்கு இறங்க வேண்டுமோ அங்கு இறங்கிச் சென்று கொண்டே இருப்பார்கள்.

இதுதான் நிதர்சனம். அப்படி இருக்கும்போது நாம் அவர்களிடம் வெறுப்பைக் காட்டி எதையும் சாதிக்க போவதில்லை என்பதைப் புரிந்து கொண்டால் பயணம் இனிதாகும். மாறாக பயண தூரம் அடைந்து இறங்கிய பிறகும், இறங்கியவர்கள் மீது கோபமும், வெறுப்பும் நீடிப்பது அவரவர் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். புரிந்துகொள்ளும் திறமையும், பொறுமை யும் இருப்பவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற்றும் பிறர் மனதில் கொஞ்ச காலங்கள் வாழ்ந்து விட்டும் செல்கிறார்கள்.

நேரமும், அலையும் எப்போதும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை. அதுபோலத்தான் வாழ்க் கையும், பயணமும். எனவே, பயணத்தின்போது நாமும் மகிழ்ச்சியாக இருந்து உடன் பயணிப் பவர்களையும் முடிந்தவரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள முயற்சிப்போம்.

நாம் கொடுக்கும் சின்னஞ்சிறு சந்தோஷம்கூட நமக்கு பலமடங்காக திரும்பி வரும்.

- கட்டுரையாளர் கணிதத்துறை விரிவுரையாளர், அரசினர் மகளிர் கல்லூரி, கும்பகோணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE