இக்கால சமூகத்தில் எதிர்படும் பற்பல பிரச்சினைகளையும், சமூக விரோதச் செயல்களையும் எதிர்கொள்ள முடியாமல், புலம்பலோடும், அவநம்பிக்கையோடும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் இவர்கள்தான் அல்லது அவர்கள்தான் என ஒருவர் மாற்றிஒருவரை கைகாட்டிக் கொண்டிருக்கிறோம். பிரச்சினைகளுக்கு காரணம் யார் என ஆராயாமல், யாரால் இதற்கு தீர்வு காண இயலும் என சிந்தித்தால், என் கண் முன் தோன்றுபவர்கள் ஆசிரியர்களே.
ஆம், ஆன்மீகத் தேடலுக்கு வித்திட்டு, மனத் தெளிவை அறுவடை செய்யும் நாடலை உருவாக்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் என்னும் குருவால் உயர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். ஆசிரியராக, தோழியாக, வழிகாட்டி யாக தனது 50 வருட வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்த ஆனி என்ற ஒப்பற்ற குருவால் உயர்ந்தவர் ஹெலன் கெல்லர். கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாட்டில் என்னும் குருவின் வழிகாட்டலால், யுத்த வரலாற்றில் மிக வெற்றிகரமான ராணுவ தளபதியாக உயர்ந்து நிற்பவர் மகா அலெக்ஸாண்டர்.
கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரடியாய் பறவை பறப்பதைக் காண்பித்து விளக்கிய ஸ்ரீ சிவ சுப்ரமணியர் என்ற குருவால் வித்திடப்பட்டு ஏவுகணை மனிதராக உயர்ந்தவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். ‘கடின பயிற்சி, கனவினை நனவாக்க உதவும்’ என்று கூறிய ராம்காந்த் அச்ரேகர் என்னும் குருவின் பயிற்சியால், சாதித்தவர் சச்சின் டெண்டுல்கர்.
குருவின் பெயர் இணைப்பு: முத்தாய்ப்பாக, குருவின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொள்ளும் அளவிற்கு, தனது குருவின் செயலால் உந்தப்பட்டு சட்ட மாமேதையாக உயர்ந்தவர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார். ஆம், உச்சத்தை தொட்டபலரது வாழ்வு, அச்சத்தை நீக்கிய அவர்களது ஆசான்களின் அணுகுமுறையால்தான் மேம்பாடு அடைந்தது.மாணவர்களில் மனதில் மறைந்திருக் கும் நச்சுக்களாகிய மன இருளைப் போக்கி, அறக்கருத்துக்கள் என்னும் உள்ளொளியை உருவாக்குபவராக ஆசிரியர் திகழும்போதுதான், இந்த சமூகம் சீர்பெறும்.
ஆசிரியர்களுக்கான அறம்: திண்மை, பகிர்தல், ஞானம், ஊக்கம் இந்த நான்கும் அரசருக்கு மட்டுமல்லாமல், ஆசிரியருக்கும் தேவையான அறங்களாகும். அந்தக் காலவாழ்க்கையில் இயல்பாகவே அறநெறிகள் இழைந்து காணப்பட்டதால், அக்கால ஆசிரியர்களும் அவற்றை இயல்பாக பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், மாணவர்களிடமும் வெளிப்படுத்தினர்.
ஆனால், இந்தக் கால இயந்திரத்தனமான வாழ்க்கை முறையால், ஆசிரியர்கள் உடலளவிலும், மனதளவிலும் அழுத்தத்திற்கு ஆளாகிபொறுமையை இழந்து காணப்படுகின்றனர். அதனால் பல ஆசிரியர்கள், பதட்டம், கோபம், பிடிவாதம், வீண் சண்டை, மன உளைச்சல், புரிந்துணர்வு இன்மை போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இவற்றைப் பார்த்து வளரும் மாணவர்களும் இவற்றையே வெளிப்படுத்துகின்றனர்.
மன இருள் அகற்றம்: எனவே, பிறர் குற்றங்களை மன்னித்தல், பிரச்சினையை தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளல், நட்புணர்வோடு வாழ்தல், மனிதர்களிடையே பாகுபாடு பாராமை, மாணவர்களை குழந்தைகளாகப் பாவித்து அன்பை பரப்புதல் போன்ற அறங்களை கடைப்பிடித்து, மன இருளை அகற்ற உதவும் குருவாக, நாம் உயர்ந்து நிற்கும்போது, நம்மைப் பார்த்து வளரும் மாணவர்கள் மட்டுமல்லாமல், பெற்றோர்கள், சமூகம் அனைத்தும் கோடி நன்மை பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
எந்த வகையில் நியாயம்? - அற இலக்கியங்கள், உளவியல் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களே அந்த அறங்களை தமது வாழ்வில் பின்பற்றாதபோது, மாணவர்களும், பெற்றோரும், மற்றவர்களும் அவற்றை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? என்ற இந்த வினாவினை உங்கள் முன் நிறுத்தி, நம்மை நாம் சீர்தூக்கிப் பார்த்து, சரி செய்து கொள்ள இதுவே சரியான தருணம் என்பதைக் கூறி, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கி மகிழ்றேன்.
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago
வெற்றிக் கொடி
2 months ago