தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் சமுதாய கூடத்தில் செயல்படும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி

By பெ.ஜேம்ஸ்குமார்


தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக் கத்தில் போதிய வகுப்பறை வசதிஇல்லாததால் மாநகராட்சி தொடக்கப்பள்ளி சமுதாய கூடத்தில் செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கியும் இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை.

தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கத்தில் சுமார், 60 ஆண்டுகளாக மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த, 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரேயொரு கட்டிடம் மட்டுமே உள்ளது.

இந்த கட்டிடம் மிகவும் பழமையானதால் மேற்கூரை ஓடுகளும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் அனைவரையும் அருகே பெரியார் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

பொது மக்கள் கோரிக்கை: சேதமடைந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு கூடுதல் வகுப்பறை வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் மாடம்பாக்கம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், அதிகாரிகள்எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து வகுப்பறை சமுதாயகூடத் திலேயே இயங்கி வருகிறது.

வகுப்பறை கட்டிடம் சேதமடைந் துள்ளதால் பள்ளி ஆவணங்கள் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக வைக்க முடியாமல் ஆசிரியர்களும் தவித்து வருகின்றனர். பள்ளி இயங்குவதால் சமுதாயக் கூடத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடத்த முடியாமல் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தர மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், "பள்ளி கட்டிடம் சேதமடைந்ததால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி, 4, 5வகுப்பு மட்டும் சமூக நலக்கூடத்தில் செயல்படுகிறது. கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கப்படும் என தெரிவித்தனர்.

1 முதல், 3 வகுப்பு வரை ஒரு கட்டிடத்திலும் 4, 5 வகுப்புகள் அருகேயுள்ள பெரியார் நகர் சமுதாய கூடத்திலும் செயல்படுவதால் ஆசிரியர் களுக்கும் சிரமமாக இருக்கிறது. மேலும் காலை, மதிய உணவு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "பள்ளியின்சேதமடைந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டுவதற்கு டெண்டர்கள் விடப்பட்டு ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்ட பின், பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE