ஸ்மார்ட் வகுப்பறை வசதிகளுடன் குன்னூரில் தனியாருக்கு நிகராக மாறிய அரசு பள்ளி

By ஆர்.டி.சிவசங்கர்


குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெட்டட்டி அரசு நடுநிலைப் பள்ளி வைபை, ஸ்மார்ட் வகுப்பறை, இசைக்குழு மற்றும் நவீன வசதிகளுடன் தனியார் பள்ளிக்கு நிகராக மாறியிருக்கிறது.

கரோனா காலகட்டத்துக்கு பின்னர் அரசு பள்ளிகளை நோக்கி பெற்றோரின் கவனம் திரும்பியுள்ளது. இதை தக்கவைத்துக்கொள்ள ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில், குன்னூர் சுங்கம் பகுதியில் உள்ள பெட்டட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் உதவியுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியுள்ளார் பெட்டட்டி பள்ளி ஆசிரியை கீதா. இந்த பள்ளியில் 68 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக ராதா பணியாற்றுகிறார்.

குன்னூர் வட்டாரத்திலுள்ள சுங்கம், பெட்டட்டி, இளித்துறை, எடப்பள்ளி, ஆனியாடா, பந்துமை உட்பட 10-க்கும்மேற்பட்ட கிராம மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக விளங்கிய இப்பள்ளி,மாணவர் சேர்க்கை குறைந்து பொலிவிழந்து காணப்பட்டது. இந்நிலையில், 2019-ம் ஆண்டு இப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியையாக பணியமர்த்தப்பட்டார் கீதா. இவர், ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் இப்பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்றி அசத்தியுள்ளார்.

புரஜெக்டர் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை.

இதுதொடர்பாக ஆசிரியை கீதா கூறியதாவது:

ரோட்டரி சங்கம் உதவி: தற்போது எங்கள் பள்ளியில் எல்கேஜி,யுகேஜி சேர்த்து மொத்தம் 68 மாணவர்கள் உள்ளனர். எல்கேஜி, யுகேஜி மற்றும் கணினி பாடத்துக்கு ஆசிரியைகளை நியமித்துள்ளோம். எல்கேஜி, யுகேஜி வகுப்பு மாணவர்களுக்கு, எனது சகோதரி ரூ.80 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வழங்கியுள்ளார்.

ரோட்டரி சங்கம் உதவியுடன் ரூ.55லட்சம் செலவில், பள்ளியை பொலிவுபடுத்தியுள்ளோம். வைபை வசதி ஏற்படுத்தியுள்ளோம். தற்போது எங்கள் பள்ளி, மாதிரி பள்ளியாக திகழ்கிறது. மாணவர்களுக்கு ரூ.70 ஆயிரம் செலவில் சீருடை, கோட், டிராக் ஷூட், காலணிகள் வழங்கியுள்ளோம். ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்ற புரஜெக்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. பாதுகாப்பான குடிநீருக்கு நவீன உபகரணம் அமைக் கப்பட்டுள்ளது.

நவீன நூலகம்

முன்னர், மாணவர்கள் உணவு அருந்தும் பகுதியில் குரங்குகள், வன விலங்குகள் இடையூறு இருந்தது. தற்போது, அப்பகுதியில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் இருப்பதைப்போல, எங்கள் பள்ளியிலும் பேண்ட் இசைக்குழுவை உருவாக்கியுள்ளோம். ஆண்டுதோறும் மாணவர்களுக்கு சீருடை வழங்கஎங்கள் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்பட்டால்தான், தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பார்கள். இந்த நம்பகத்தன்மையை அடைய பாடுபடுகிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE