உன்னால் முடியும் தம்பி... தம்பி...

By கலாவல்லி அருள்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?” என்ற மகாகவியின் வரிகள், சாதாரண வரிகள் அல்ல. “நான் வீழ்வேனென்று நீ நினைத்தால், நான் வீழ்வேனா? அல்ல, அல்ல, நான் எழுவேன்” என்ற மகாகவியின் தீவிர தன்னம்பிக்கையின் வெளிப்பாடுதான் இது. ஆம், சுதந்திரம் பெறுவதற்கு முன்பாகவே, ”ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று பாடி, தனது அதி தீவிர நம்பிக்கையை வெளிப்படுத்தியவரல்லவா அவர்?

பாரதி, தன்னால் முடியும் என்றநேர்மறை நம்பிக்கையைக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், தன் மீது பிறர் கொண்டிருந்த எதிர்மறையான அவநம்பிக்கையை பொருட்படுத்தாமல் புறந்தள்ளினார். அதனால் தான், அவர்மகா கவியாய் உயர்ந்து நிற்கிறார்.

நமது திறமை மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களின் வார்த்தைகளை மனதிற்குள் புக விடக் கூடாது. தெளிவான நம்பிக்கை, சரியான திட்டமிடல், முறையான பயிற்சி, தொய்வில்லா முயற்சி ஆகியவையே நம் இலக்கை நாம் அடைய,வழி வகுக்கும் என்பதை நம் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி அம்மையார், தன் முன் இருந்த தடைகள் அனைத்தையும் தனது நம்பிக்கை என்னும் சக்திவாய்ந்த உளியால் உடைத்து வெற்றி பெற்ற கதை நமக்குத் தெரிந்தது தானே.

ஒளிவிடும் பல்பு கண்டுபிடிக்க முயன்ற போது ஏற்பட்ட பல சிக்கல்களை, தனது நம்பிக்கை வெளிச்சத்தால் தவிடுபொடியாக்கி வெற்றி பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை வரலாறு உலகறிந்தது தானே.‘போராட உகந்ததல்ல அகிம்சை முறை’ என அனைவரும் கூறியபோது, தன் நம்பிக்கையால் அதை பொய்யாக்கி, சாத்வீக முறையில் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்த மகாத்மாவின் உறுதி நாம் அறிந்தது தானே.

இவர்கள் மட்டுமல்லாமல், வாழ்க்கையில் சாதனை படைத்த அனை வரும், தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து வெற்றி பெற்றவர்கள் தான் என்பதை யாரும் மறுக்க இயலாது.

"நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவதில்லை" என்பார் ஏ.பி.ஜே. அப்துல்கலாம். எந்த உறவுக்கும் வலு சேர்ப்பது பரஸ்பர நம்பிக்கைதான்.

ஒரு மனிதரின் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ அவரது ஆழ்மனதின் அதி தீவிர நம்பிக்கை தான் அடிப்படைக் காரணமாய் அமைகிறது. நேர்மறையான நம்பிக்கையால் வாழ்வின் உச்சத்தை தொட்டவர்களும் உள்ளனர். எதிர்மறையான அவநம்பிக்கையால் வாழ்வின் மிச்சத்தை தொலைத்தவர்களும் உள்ளனர். (தற்கொலை செய்பவர்கள் மிச்ச வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் தானே?)

அது சரி, நம்பிக்கையின் சக்தி பற்றி,பலர் நன்கு அறிவோம். ஆனால், குருட்டு நம்பிக்கை என்பது பற்றிஉங்களுக்குத் தெரியுமா? ஒன்றைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளாமல், அப்படியே நம்புவது குருட்டு நம்பிக்கை எனப்படும். செயலின் விளைவு பற்றி சிந்திக்காமல், மற்றவர் சொல்வதை நம்பி செயல்படுவது மிகவும் தவறு.

ஒன்றின் தன்மையை ஆராயாமல், அதன் பின் விளைவுகளை உணராமல், கண்மூடித்தனமாய் நம்பிக்கை வைப்பது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதை சிறு வயதிலேயே உணரச் செய்ய வேண்டும்.

‘என்ன பெரிய தப்பு நடந்திடப் போகுது? ஃப்ரியா விடு, பார்த்துக்கலாம்’ என்று தன் மனதிற்குள், தானே, சமாதானம் சொல்லிக் கொண்டுதான் சமூக வலைதளங்களில், இன்றைய தலைமுறையினர் அனைத்தையும் பகிர்கின்றனர். இந்த குருட்டு நம்பிக்கை, பல சிக்கல்களில் மாட்டிவிட வாய்ப்புள்ளது என்பதை இன்றைய தலைமுறையினருக்குப் புரிய வைக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.

- கட்டுரையாளர், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்காடிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE