3 செ.மீ. உயரத்தில் சந்திரயான் - 3 விண்கலத்தை வடிவமைத்து அசத்திய காவலர்

By ம.பிரபு

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவைத் தலைநிமிரச் செய்திருக்கிறது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம். சந்திரனையும் சந்திரயானையும் நேரில் நம்மால் காண முடியுமா என்ற ஏக்கம் பலருக்குள் இப்போது உள்ளது.

பார்ப்பது என்ன, தொட்டு தூக்கி அழகு பார்க்கலாம் என்கிறார் சந்திரயான் -3 விண்கலம், விக்ரம் லேண்டர்,ரோவர், நிலவின் தென் துருவம் எனஅத்தனையையும் குட்டி வடிவில் வெறும்3 செ.மீ. உயரத்தில் தத்ரூபமாக வடிவமைத்திருக்கும் ஓய்வுபெற்ற காவலர் ஜி ஸ்ரீனிவாஸ்.

தமிழ்நாடு காவல்துறை தலைமையிடம் (டிஜிபி) அலுவலகத்தில், உளவுத்துறை மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி சென்ற வருடம் ஓய்வு பெற்றவர் இவர். உளவுத்துறை தலைமை இடத்தில் 31 வருடம் 10 மாதங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அறிவியல் கண்டுபிடிப்புகளை ’மினியேச்சர்’ வடிவில் உருவாக்கும் ஆர்வம் தனக்கு உண்டானது குறித்து னிவாஸ் கூறியதாவது: நாகர்கோவில் டிவிடி மேல்நிலைப் பள்ளியில் எட்டாவது வகுப்பு படிக்கும்போது அறிவியல் பாடத்தில் உள்ள விமானம் பற்றி ஆசிரியர் சி.டி. பெருமாள் அபாரமாகப் பாடம் நடத்தினார். அதை கேட்டதும் குட்டி விமானத்தை நானே வடிவமைக்கும் ஆர்வம் துளிர்த்தது. ஆசிரியரின் உதவியுடன் என் முதல் மினியேச்சர் முயற்சி அன்று ஆரம்பமானது.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தொடர்ந்து அறிவியல் படைப்புகளின் மாதிரிகளை சிறிய அளவில் உருவாக்குவதைப் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தேன். பிறகு தமிழ்நாடு காவல்துறையில் வெவ்வேறு காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கார்களை வடிவமைப்பதில் ஆர்வம் கொண்டேன். 1929 வருடம் பயன்படுத்தப்பட்ட கார், 1959 ஆண்டு பயன்படுத்தப்பட்ட கார்களை உருவாக்கியதைப் பார்த்து பலர் வியந்தனர்.

1970-ல் சென்னையில் ஓடிய டபுள்டக்கர் பஸ், முதன்முதலாக விடப்பட்ட சவுண்ட் ராக்கெட், வயல்களில் பயன்படும் கலப்பை உள்ளிட்டவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேக்கு மரத்தில் செய்து வைத்திருக்கிறேன்.

ஸ்ரீனிவாஸ்

கைப்பேசியில் மூழ்கி இருக்கும் இன்றைய இளம் தலைமுறையினர் இதுபோன்ற மினியேச்சர் கலை வடிவத்தைக் கற்றுக்கொள்வது அவர் களுக்கு நன்மை பயக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE