கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய கொள்கை

By நந்தன்

கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று 1968இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தேசிய கல்விக் கொள்கைஅறிவிக்கப்பட்டது. தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தேவையான விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் இந்தக் கல்விக் கொள்கை கவனம் செலுத்தியது. நாட்டின் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில் கல்வி மகத்தான பங்களிப்பை ஆற்றக்கூடும் என்று இந்த கல்விக் கொள்கை அங்கீகரித்தது.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் 45ஆம்பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுநெறி, 14 வயதுவரை உள்ள அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி கிடைக்கவழிவகை செய்யப்பட வேண்டும் என்கிறது.இந்த வழிகாட்டு நெறியை நிறைவேற்றுவதில் தேசிய கல்விக் கொள்கை 1968கவனம் செலுத்தியது.

நாட்டில் உள்ளஅனைத்து குடிமக்களுக்கும் சமமானகல்வி வாய்ப்புகளை உருவாக்குவது அந்தக்கல்விக் கொள்கையின் முதன்மைஇலக்காக இருந்தது. மாற்றுத் திறனாளிகளுக்கும் கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட,பழங்குடியினர் பகுதிகளில் வாழ்வோருக்கும் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தது. பெண் கல்விக்கும் கூடுதல் அழுத்தம் கொடுத்தது.

பல்கலைக்கழகங்களிலும் இடைநிலைப் பள்ளிகளிலும் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டிய தேவை இருப்பதை ஏற்றுக்கொண்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமலே அவற்றுக்கு உரிய வயதைக் கடந்துவிட்டோருக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கும் முதியோர் கல்வி உள்ளிட்ட திட்டங்களின் மூலம் நாட்டின் எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்றது. கற்பித்தலில் தரத்தைஉறுதிசெய்வதற்கான ஆசிரியர் பயிற்சி,தொழிற்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதலும் இந்தக் கல்விக் கொள்கையின் நோக்கங்களாக இருந்தன.

இந்தி, ஆங்கிலம், மாநில மொழி ஆகிய மூன்று மொழிகளை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்றது. அனைத்துப் பாடங்களையும் தாய்மொழிவழியில் கற்பிப்பதையும் ஆதரித்தது. இந்தி மொழியை தேசிய ஒருமைப்பாட்டுக்கான கருவியாகக் கருதிய இந்தக் கல்விக் கொள்கை, நாடு முழுவதும் அது மேம்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. கோத்தாரி ஆணையத்தின் பரிந்துரைப்படி பள்ளிக் கல்வி 10 2 3 என்று வரையறுக்கப்பட்டது.

பல முற்போக்கான இலக்குகளை வெளிப்படுத்திய தேசிய கல்விக் கொள்கை 1968 தனது இலக்குகள் பலவற்றை எட்டத் தவறியது. நிதிப் பற்றாக்குறையே இதற்கு முதன்மையான காரணம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE