‘நாங்கள் எதையும் வெறுக்க மாட்டோம்’ - முதல் தொலைக்காட்சிப் பேட்டியில் நேரு

By முகமது ஹுசைன்

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு. பிரிட்டிஷ் அரசிடம் இருந்து நாடு விடுதலை பெற்ற பிறகு, 1953 ஜூன் 2 அன்று பிரிட்டன் அரசி எலிசபெத்தின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க நேரு லண்டன் சென்றிருந்தார். அப்போது பிரிட்டன் பொதுத் துறை ஊடக நிறுவனமான பி.பி.சி. நேருவிடம் பேட்டியெடுத்தது. அதுவே நேரு பங்கேற்ற முதல் தொலைக்காட்சிப் பேட்டி.

அன்றைக்கு ஊடகத் துறையில் ஆளுமைமிக்கவர்களாகக் கருதப்பட்ட ‘நியூ ஸ்டேட்ஸ்மேன் நேஷன்’ பத்திரிகையின் ஆசிரியர் கிங்ஸ்லி மார்ட்டின், ‘தி சண்டேடைம்ஸ்’ ஆசிரியர் எச்.வி. ஹட்சன், ‘தி எகானமிஸ்ட்’ வெளிநாட்டுப் பிரிவு ஆசிரியர் டொனால்ட் மெக்லாலின் ஆகியோர் அந்தப் பேட்டியை எடுத்தனர்.

இந்தியா விடுதலை பெற்று சில ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், நேருவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பொறுமையுடன், எவ்வித பதற்றமும் இன்றி அந்தக் கேள்விகளை நேரு எதிர்கொண்ட விதம் ஆச்சரியமூட்டுவது. நேருவின் பதிலில் தென்படும் தெளிவும் பக்குவமும் அவர் ஒரு சிறந்த தலைவர் என்பதை உணர்த்துகின்றன. நேரு ஏன் இந்தியாவின் சிறந்த பிரதமராகக் கருதப்படுகிறார் என்பதற்கு இந்தப் பேட்டி விடையளிக்கும்.

மரியாதையும் வியப்பும்: இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்ட தலைவர் நேரு. 1952இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பின் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக நேரு மாறினார். இந்தப் பேட்டி எடுக்கப்பட்டபோது, ஒரு மதிக்கப்படும் தலைவராக இருந்தார். அதே நேரம் இந்தப் பேட்டியை இயல்பான உடல் மொழியுடனும், பணிவான குரலிலும் நேரு தொடங்குகிறார்.

பேட்டியாளர்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னதாகவே, இத்தகைய சவாலான சூழலைத் தான் எதிர்கொள்வது இதுவே முதல்முறை என்று கூறி, அங்கிருந்த ஊடகவியலாளர்களை அவர் இயல்புநிலைக்குக் கொண்டுவந்தார். அதன் தொடர்ச்சியாக, நேருவின் மீது அவர்களுக்கு இருந்த மரியாதையும் வியப்பும் பன்மடங்கு அதிகரிப்பதை காணொளி மூலம் நம்மால் உணரமுடிகிறது.

மனசாட்சியை உலுக்கிய பதில்: ‘இந்தியாவை இங்கிலாந்து ஆட்சி செய்தபோது, விரும்பத்தகாத பல கொடூரங்கள் நிகழ்ந்துள்ளன. இருந்தும், இங்கிலாந்து மீது இந்தியா மிகப் பெரிய வெறுப்பை வெளிப்படுத்தவில்லை; காமன்வெல்த் அமைப்பிலும் இந்தியா இணைந்து பயணிக்கிறது. இந்தியாவின் பெரிய மனதும், மன்னித்துக் கடந்து செல்லும் போக்கும் வியப்பை ஏற்படுத்துகின்றன.

மன்னித்துக் கடக்கும் இயல்புக்குப் பின் இருக்கும் கருத்தியல் பற்றிக் கூற முடியுமா?’ என்று நேருவிடம் கேட்கப்பட்டது. அதற்கு நேரு “நாங்கள் எதையும் நீண்ட காலத்துக்கோ தீவிரமாகவோ வெறுக்க மாட்டோம். கடந்த தசாப்தங்களில் காந்தி கற்றுக்கொடுத்த பாடம் இது” என்று சிரித்தபடியே கூறுகிறார்.

‘சுதந்திரப் போராட்டத்தின்போது, 16 ஆண்டு களுக்கு மேல் சிறையில் இருந்துள்ளீர்கள். அப்படியிருந்தும் எங்களை உங்களால் மன்னிக்க முடிகிறது என்பது பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கும் நேரு சிரித்தபடியே “சில ஆண்டுகள் சிறையிலிருந்ததால், ஏழு ஆண்டுகளுக்கும் மேல் பிரதமராக இருந்துவருகிறேன். அப்படியானால், அது நல்ல விஷயம்தானே” என்று கேட்கிறார்.

நேருவின் நம்பிக்கை: ‘ஏழாண்டுகளுக்கு மேல் நீங்கள் பிரதமராக இருக்கிறீர்கள். பதவியேற்றபோது நீங்கள் நிறைய நம்பிக்கையை விதைத்தீர்கள். இப்போது அந்த நம்பிக்கையின் நிலை என்ன? ஒரு பிரதமராக நீங்கள் சாதித்துள்ளீர்களா? அல்லது ஏமாற்றங்களே மிகுந்துள்ளனவா?’ என்று நேருவிடம் கேட்கப்பட்டது.

அவர் சற்றும் தயங்காமல், “இரண்டும்தான்” என்று பதிலளிக்கிறார். “நாங்கள் சாதித்தவை எனக்குப் போதுமானதாக இல்லை. வலுவான ஜனநாயகக் கட்டமைப்பை நிறுவுவதில் நாங்கள் வெற்றியடைந்துள்ளோம். ஆனால், பொருளாதாரரீதியாக நாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உள்ளது. இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று நேரு தெரிவிக்கிறார்.

சமரசம், அரசியலின் அடிப்படை: ‘உடன்பாடுகளும், இணக்கமும் ஜனநாயகத்தைக் காப்பதற்கு அவசியம் தேவை. ஓர் அரசியல்வாதியாக நீங்கள் அதற்கு நிறையச் சமரசங்களைச் செய்துகொள்ள நேரிடும், அதை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’ என்று நேருவிடம் கேட்கப்பட்டது. “சமரசம்தானே அரசியலின் அடிப்படை இயல்பு” என்று நேரு சட்டெனப் பதில் அளிக்கிறார்.

ஆர்ப்பாட்டமில்லாத உண்மை: நேருவின் எந்த ஒரு பதிலிலும் வெறுப்போ, அகங்காரமோ தென்படவில்லை. மாறாக, அவரது பதில்கள் அனைத்திலும் அன்பும் பணிவும் மிகுந்திருக்கின்றன. முக்கியமாக, யாரையும் குறை கூறாமல் உண்மையை எடுத்துரைக்கிறார்.

ஆவேசத்துடனும் உணர்ச்சிப் பொங்கவும் கருத்துகள் பகிரப்படும் இன்றைய அரசியல் சூழலில், ஆர்ப்பாட்டமின்றி அமைதியாகச் சொல்லப்படும் கருத்து எவ்வளவு முக்கியமானது என்பதை நேருவின் பதில்கள் உணர்த்துகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE