நான் நல்லா வாசிப்பேன்...

By சக.முத்துக்கண்ணன்

வாசிப்பில் தடுமாறும் குழந்தைகளைப் பற்றிய கவலை தீர்ந்தபாடில்லை. துறைசார் நடவடிக்கைகள் சமீபமாகத் தீவிரமடைந்து வருகின்றன. சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தியிருக்கும் வாசிப்பு இயக்கம், கதை வாசிப்பை முன்வைக்கிறது.

வாசிப்பு இயக்கக் கதைகள் சிறார் இலக்கியத்தின் அடுத்த கட்டமோ, இலக்கியத்தை முதன்மையெனக் கொண்டோ உருவாக்கப்பட்டவை அல்ல.மாணவர்களின் வாசிப்பை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை. தடுமாறி வாசிக்கிற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தருவதே முக்கிய நோக்கம்.

திண்டுக்கல் மாவட்ட களப்பயணத்தில் ஒரு மாணவரைக் கவனித்தேன். பெயர் கௌதம். ஏழாம் வகுப்பு. எழுத்தாளர் சாலைசெல்வம் எழுதிய 'நான் தோசை சுடுவேன்' என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். அதில், என் பெயர் சுப்பம்மா. நான் நல்லா ஓடுவேன்'.

‘என் பெயர் பரிதா, நல்லாஊர் சுற்றுவேன்' ‘என் பெயர் அப்துல்'நான் நல்லா ஆடுவேன்' இப்படியாக அப்புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு வரிகளும், அழகான வண்ணத்தில் படமும் இருக்கும். கடைசிப்பக்கத்தில், ‘வா தங்கம் வா,உங்களுக்கு என்ன தெரியும்? சொல்லுங்க! கேட்போம்' என்று இருக்கும்.

குழந்தைகள் வாசித்து முடித்ததும் வாசித்த புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடலை வாசிப்பு இயக்கக் கருத்தாளர் செல்வராணி ஒருங்கிணைத்தார். எழுத்துக்கூட்டி.. எழுத்துக்கூட்டி ‘நான் தோசை சுடுவேன்' புத்தகத்தை ரொம்ப நேரமாக... வாசித்துக் கொண்டிருந்த கௌதம் எந்திரிச்சான்.. வாசித்ததைச் சொன்னான். என்னென்ன பெயர்கள்,அவர்கள் என்னென்ன செய்தார்கள்..?

ஓரளவு சரியாகச் சொல்லி முடித்தான். அந்த ஏழாம் வகுப்பில் வாசிக்க மிகவும் தடுமாறும் மூன்று மாணவர்களில் கௌதமும் ஒருவர். கௌதமுக்கு எல்லோரும் கைதட்டினர். ‘சரி கடைசி பக்கம் பாத்தியா.. உங்களுக்கு என்ன தெரியும்? சொல்லுங்க கேட்போம்'ன்னு இருக்கு. அதில் இருப்பது போலவே பெயர் சொல்லி சொல்லனும்' சொல்ரியா' என்றார் செல்வராணி.

அந்தப் புத்தகத்தைப் படித்த சிலர், வேக வேகமாக கை தூக்கினர். ‘சரி சொல்லுங்க.' அவங்க பேர் சொல்லி.. சொன்னாங்க: ‘‘என் பெயர் வாணி, நான் புரோட்டா சாப்பிடுவேன்.'' ‘‘என் பெயர் ஆதனா நான் விஜய் படம் பாப்பேன்.'' ‘என் பெயர் பாண்டீஸ்வரன் நான் நல்லா நீச்சலடிப்பேன்.'' ‘‘என் பெயர் பாத்திமா நான் நல்லா சைக்கிள் ஓட்டுவேன்.'' ‘‘என் பெயர் ஜீவனா நான் நல்லா டான்ஸ் ஆடுவேன்.'' ‘அந்த புக் வாசிக்காத பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர். ஆளாலுக்கு இப்படி சொல்லி முடித்தனர்.

நம்ம கௌதம் என்ன சொன்னான் தெரியுமா..? ‘என் பெயர் கௌதம். நான் நல்லா வாசிப்பேன்.' வாசிப்பு இயக்கம் மெல்ல மலரும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையைத் தந்து கொண்டிருக்கிறது.

- கட்டுரையாளர் ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி சடையம்பட்டி, திருச்சி மாவட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE