மாம்பழத்து வண்டு....

By தே. இளவரசி

கிளிமூக்கு மாம்பழம், ஒட்டு மாம்பழம், நீலம் மாம்பழம் போன்றவற்றை வெட்டும் போது சிலவற்றில் வண்டு ஊர்ந்து வெளியே வரும். அது எப்படி பழத்திற்குள் சென்றது? உள்ளே எப்படி உயிரோடு இருக்க முடிந்தது? அந்த பழத்தை சாப்பிட்டால் உடல் நலத்தைப் பாதிக்குமா? இதற்கு முன்பு பல முறைகள் இப்படிப்பட்ட பழங்களை சாப்பிட்டபோது எந்த பாதிப்பும் வந்ததில்லை, ஆனால் ஒருமுறை வயிறு வலித்ததன் காரணம் இதனால் இருக்குமோ... !? என பல சந்தேகங்களோடே இந்த வருட மாம்பழ சீசனும் முடியப் போகிறது.

பொதுவாக காய்கறிகள் மற்றும் பழங்களில் புழுக்கள், பூச்சிகள் இருக்கும். குறிப்பிட்ட சில காய்கறிகள் (கத்திரிக்காய், கீரைகள், முட்டைகோஸ், காலிபிளவர்) பழங்களில் (மா, கொய்யா, ஸ்ட்ரா பெர்ரி, சப்போட்டா) இவை அதிக அளவில் காணப்படுகின்றன. வெவ்வேறு பருவகாலங்களில் இந்த பூச்சிகள் வேறுபடலாம். மழைக்காலங்களில் அதிகமாக இருக்கும்.

ஏன் வந்தது...? - சரியான நீர் பாசன முறைகள் மற்றும் விவசாய முறைகளை மேற் கொள்ளாமல் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்களில் அதிகம் இருக்கும். எனவேதான் நாம் வீட்டுத் தோட்டம் மற்றும் விவசாய நிலங்களில் விளைந்த உணவுப் பொருட்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். தெரு ஓரங்களில், கழிவு நீர் ஓரங்களில் விளைந்த காய்கறிகள் பழங்களை உட்கொள்ளக் கூடாது.

எப்படி வந்தது...? - மா, கொய்யா போன்ற முற்றிய காய்களின் தோலுக்கு அடியில் ஈக்கள் முட்டை இட்டு விடும். அந்த முட்டைகள் பின்பு கனிகளில் புழுக்களாக காணப்படுகின்றன. அத்திப்பழத்தில் அத்திப்பழக் குளவி பூச்சிகள் இருக்கும். அத்திப்பழக் குளவிக்கும், பழத்திற்குமான பரஸ்பர கூட்டுயிரி வாழ்க்கை முறை மிகவும் ரசிக்கும்படியானது. ஒன்றுக்கொன்று பயனுள்ளது. நன்றாகப் பழுத்த அத்திப்பழத்தினுள் உள்ள குளவிகள் (ficinenzymes) நொதிகளால் செரிக்கப்பட்டுஅப்பழத்திற்குள்ளேயே தாதுக்களாக மாற்றப்படுகின்றன. எனவே அத்திப்பழம் உண்பதை பற்றிய அச்சம் தேவையில்லை.

எப்படி வாழும்...? - பூச்சி புழுக்களில் வகைகளைப் பொறுத்து அவை பல்வேறு சுவாசித்தல் மற்றும் வாழத் தேவையான ஆற்றல் பெறும் முறைகளைக் கொண்டுள்ளன. காற்று மற்றும் காற்றில்லா சுவாச முறைகளில் வாழக்கூடியவை. தோலின் மூலம் பரவல் (Diffusion) முறையில் சுவாசித்தல். மூலக்கூறு தொகுதிகள் (Electron chain reaction)மூலம் வேதி ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன். குறைந்த வளர்சிதை மாற்றம் (metabolism) கொண்டவை என்பதால் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ள சூழலில் வாழும் திறன் கொண்டவையாகும்.

பாதிக்குமா...? - ஒருவேளை தவறுதலாக புழு இருக்கும் உணவை சாப்பிட்டுவிட்டோம் என்றால் பயம் கொள்ளத் தேவையில்லை. அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. கொஞ்சம் அதிகமாக சுடு தண்ணீர் குடிக்கலாம். உடற்பயிற்சி செய்வது பொதுவாக எந்தவித நச்சுப்பொருளையும் உடலை விட்டு வெளியேற்ற உதவும்.

சிலவகை புழுக்கள் பூச்சிகள் காய்கறி பழங்களில் மட்டுமே வாழக்கூடியவை. அவை மனித உடலுக்குள் செல்லும்போது உயிரோடு இருக்க முடியாது. ஆனால் ஆஸ்காரிஸ் போன்ற குடலில் வாழும் ஒட்டுண்ணி உருளைப்புழுக்களின் முட்டைகளை உண்பதன் மூலம் மனித உணவு மண்டலத்தில் அவை பெருகும். மேலும் நாடாப்புழு, கொக்கிப்புழு, நூற்புழு, தட்டைப்புழு போன்ற மனிதஉணவு மண்டலத்தில் வாழும் புழுக்களை நீக்க குறிப்பிட்ட இடைவெளியில் பூச்சி மருந்துகள் எடுத்துக் கொள்வது நல்லது.

தடுப்பு முறைகள்: தோல் நீக்காமல் உட்கொள்ளப்படும் பச்சை காய்கறிகள் பழங்களை சுத்தமாக நீரில் கழுவிய பின்பே உண்ண வேண்டும். நீரில் சிறிதளவு வெள்ளை வினிகர் அல்லது எலுமிச்சை சாறு இட்டு கழுவலாம்.

புழுக்கள் பூச்சிகள் இருந்த அடையாளங்கள் (துளைகள்) தென்பட்டால் அவற்றை வெட்டி நீக்கி விட்டு அருவருப்பு அற்றமனநிலையோடு உண்ணலாம்.

- கட்டுரையாளர்: ஆசிரியர் (தாவரவியல்) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE