விபத்திலும் உடையாத கண்ணாடி

By சக.முத்துக்கண்ணன்

ஒரு பெரிய ஆய்வுக் கூடம். அலமாரியில் கண்ணாடிக் குடுவைகள், வேதிப் பொருட்கள், ஆசிட் பாட்டில்கள் வரிசைவரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அங்கு ஒரு விஞ்ஞானி இருந்தார். அவர் ஓவியம் வரைந்து கொண்டு இருந்தார். விஞ்ஞானி என்றால் ஆராய்ச்சிதானே செய்வார்!? இவர் என்ன ஓவியம் வரைகிறார்?

ஆமாம் இவர் ஓவியம் வரைவார், புத்தகம் பைண்டிங் செய்வார், பியானோ வாசிப்பார், ஆடை வடிவமைப்பார், ஆராய்ச்சியும் செய்வார்.

குடுவை ஏன் உடையவில்லை? - ஒரு நாள் ஆய்வு செய்ய கண்ணாடிக்குடுவையைத் தேடினார். அவர் தேடும்குடுவை அலமாரியின் மேலே இருந்தது. ஏணியில் ஏறி அந்தக் குடுவையை எடுத்தார். கை தவறியது.‘‘ஐயோ.. போச்சு..!'' ‘டொம்..'கண்ணாடிக் குடுவை கீழே விழுந்தது. நல்லவேளை இவர் விழவில்லை. கண்ணாடிக் குடுவை உடைந்துசிதறி இருக்கும் தானே...சிதறவில்லை. அப்படியே இருந்தது. ‘‘ஆ! என்னாச்சு! கண்ணாடி எப்படி உடஞ்சி சிதறாம இருக்கு?'' விஞ்ஞானிக்கு ஒரே ஆச்சர்யம்.!

வேகமாக கீழே இறங்கினார். கண்ணாடிக் குடுவையைக் கையில் எடுத்தார். கோடு கோடாய் கீறல் போல உடைந்திருந்தன. ஆனால் சிதறவில்லை. பசை போல ஏதோ பிடித்துக் கொண்டு இருந்தது. 'என்ன இது?' விஞ்ஞானி உற்றுப் பார்த்தார். குடுவைக்கு உள் பக்கம் பிளாஸ்டிக் போல ஏதோ படலம் இருந்தது. 'என்ன இது.?' விரலால் தொட்டுப் பார்த்தார்; முகர்ந்து பார்த்தார்.

செல்லுலோஸ் நைட்ரேட்: அந்த நேரம் உள்ளே வந்த உதவியாளரிடம், ‘இந்தக் குடுவையில் என்ன இருந்தது?'' என்றார் விஞ்ஞானி. ‘‘இதில் செல்லுலோஸ் நைட்ரேட் ஊற்றிவைத்தோம். கழுவி வைக்க மறந்துவிட்டேன்'' என்றார் உதவியாளர். விஞ்ஞானிக்கு விசயம் புரிந்தது. ‘அந்த செல்லுலோஸ் நைட்ரேட் ஆவியாகி இருக்கும். அதுதான் குடுவையின் உள் பக்கம் பிளாஸ்டிக் போல படிந்துவிட்டது. அந்தப் படலம் கண்ணாடியைச் சிதறவிடாமல் பிடித்துக் கொண்டது.'

கார் விபத்துகள்: உடைந்த குடுவையின் வடிவம் மாறவில்லை. அதை உதவியாளர் கையில் கொடுத்தார். இருவரும் மாறி மாறி அதைப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அந்தக் கண்ணாடிக் குடுவை இப்போது அதிசய பொருள். அதை அலமாரியில் நடுப்புறம் வைத்து விட்டார். ஒரு நாள், விஞ்ஞானி நியூஸ்பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு செய்தி: ''கார் விபத்தில் சிலர் மரணம்'' கார் கண்ணாடி உடைந்து அவர்கள் மீது குத்தியிருந்தது.

அலமாரியைத் திரும்பிப் பார்த்தார். உடைந்தும் சிதறாத அந்தக் குடுவை அங்கு இருந்தது. இதற்கு முன்பு நடந்த கார் விபத்துகள் பற்றி யோசித்தார். இதுவரை நடந்த கார் விபத்துகள் பற்றிய செய்திகளைச் சேகரித்தார். கார் மோதியதை விடக் கண்ணாடி உடைந்து குத்தித்தான் படுகாயங்கள், மரணங்கள் ஏற்பட்டிருந்தன.

‘‘இம்மரணங்களைத் நம்மால் தடுக்கமுடியுமா?'' என யோசித்துக் கொண்டிருந்தார். யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. விஞ்ஞானி கதவைத் திறந்தார். உதவியாளர் ரொட்டிகளைக் கொண்டு வந்திருந்தார். அதை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தார். அந்த ரொட்டிகளை உற்றுப் பார்த்தார். மேலும் கீழும் ரொட்டி. இடையே நறுக்கி வைத்த காய்கறிகள். திரும்பிஅலமாரியைப் பார்த்தார். அந்தக் கண்ணாடிக் குடுவை அங்கு இருந்தது.

ஐடியா.....! ‘இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே ஒரு பிளாஸ்டிக் படலம் போல செல்லுலோஸ் நைட்ரேட்டை வைத்தால் என்ன? அதைக்காரின் முன் பக்கக் கண்ணாடியாக பயன்படுத்தினால் என்ன?' எனயோசித்தார். பாதுகாப்பான கார் கண்ணாடி உருவானது. அதன் பிறகும்கார் விபத்துகள் நடந்தன. ஆனால்கண்ணாடி சிதறவில்லை. யாருக்கும்கண்ணாடியால் காயம் ஏற்படவில்லை.இந்த கண்ணாடியைக் கண்டுபிடித்தஅந்த விஞ்ஞானியின் பெயர் எடோர்டு பெனிடிக்டஸ் (Edouard Benedictus) 1878-ம் ஆண்டு பாரிஸில் (பிரான்ஸ்)பிறந்தார். உடையாத கார் கண்ணாடியை (laminated safety glass) 1909-ல்கண்டுபிடித்தார்.

செல்போன் டெம்பர் கிளாஸ்: இன்று செல்போன் டெம்பர் கிளாஸ் உடைவதைப் பார்த்திருப்பீர்கள். கிட்டத்தட்ட பெனிடிக்டஸ் செய்து காட்டியதன் நவீனவடிவம் தான் டெம்பர் கிளாஸ்.

இன்று கார் கண்ணாடிகள் தயாரிப்பிலும் பல நவீனமுறைகள் வந்துவிட்டன. இருந்தாலும் 1909-ல் செல்லுலாய்டு தாள்கள் வைத்து எடோர்டு பெனிடிக்டஸ் செய்த முதல் கண்டுபிடிப்புதான் ஆதாரம். எப்போதும் முதல் கண்டுபிடிப்பு ஒரு ஏணி போல. அதன் மீது ஏறித்தான் அடுத்தடுத்து நாம்அறிவியலில் முன்னேறுகிறோம்.

- கட்டுரையாளர் ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சடையம்பட்டி, திருச்சி மாவட்டம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE