டிங்குவிடம் கேளுங்கள் - 14: பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது

By செய்திப்பிரிவு

டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன, டிங்கு?

- ஜெ. வில்லியம்ஸ், 5-ம் வகுப்பு, எத்திராஜ் மெட்ரிக். பள்ளி, வேலூர்.

அணைகளில் இருக்கும் தண்ணீ ரின் கொள்ளளவை, டிஎம்சி என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். ஆயிரம் மில்லியன் க்யூபிக் அடி (Thousand Million Cubic Feet) நீரை ஒரு டிஎம்சி தண்ணீர் என்று குறிப்பிடுகிறார்கள், வில்லியம்ஸ்.

பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது, டிங்கு?

- எம். ரேகா ராணி, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தேனி.

நம் உடல் செங்குத்தாக இருப்பதால், நம்மால் சில நிமிடங்கள் மட்டுமே ஒற்றைக் காலில் நிற்க முடியும். ஆனால், பூநாரை, நாரை, கொக்கு போன்ற நீர்ப்பறவைகளின் உடல் ஒற்றைக் காலில் நிற்பதற்கு ஏற்றவாறு, அமைந்திருக்கிறது. அதனால் அவற்றால் ஒற்றைக் காலில்நிற்க முடிகிறது என்று சொல்லப்பட்டுவந்தது.

பிறகு பூநாரையை ஆராய்ச்சிசெய்தவர்கள், உடல் வெப்பநிலையைச் சமன் செய்துகொள்வதற்கே ஒற்றைக் காலில் நிற்பதாகச் சொன்னார்கள். சமீபத்திய ஆராய்ச்சியாளர்கள், பூநாரைகளின் மூளை ஓய்வு நேரத்தில் ஒரு பாதி மட்டுமே வேலை செய்கிறது. அதனால் ஒற்றைக் காலைத் தூக்கிக்கொண்டு, தலையை உடல் மீது வைத்து ஓய்வெடுப்பதாகச் சொல்கிறார்கள்.

திடீரென்று ஆபத்து வந்தால் பறந்து செல்வதற்கும் ஒற்றைக் காலில்நிற்பது உதவியாக இருக்கிறது. ஆற்றலைச் சேமிப்பதற்கும் இது உதவுகிறது என்கிறார்கள், ரேகா ராணி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE