டிங்குவிடம் கேளுங்கள்-13: கறுப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக இழுத்துக்கொள்வது ஏன்?

By செய்திப்பிரிவு

கறுப்பு நிறம் வெப்பத்தை அதிகமாக இழுத்துக்கொள்வது ஏன், டிங்கு?

- சி. ராகேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, பழநி.

வெப்பமும் ஒளியும் வெவ்வேறான ஆற்றல்கள். ஒளி ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றம் அடையும். கறுப்பு நிறம் ஒளியிலிருக்கும் அலைநீளங்களை அப்படியே இழுத்துக்கொண்டு, வெப்ப ஆற்றலாக மாற்றிவிடுகிறது. அதனால் கறுப்புநிறமுடைய பொருட்கள் வெப்பமடைகின்றன. வெள்ளை, வெளிர்நிறங்கள் ஒளியிலிருந்து பெறும் அலைநீளங்களைக் கறுப்புபோல் இழுத்துக்கொள்ளாமல் பிரதிபலித்துவிடுகின்றன. இதனால் குறைவான ஒளி ஆற்றலே வெப்ப ஆற்றலாக மாறுகிறது. இது ஒவ்வொரு நிறத்துக்கும் மாறுபடும். அதனால் தான் வெயில் காலத்தில் கறுப்பு ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்கிறார்கள், ராகேஷ்.

ஒலி வெற்றிடத்தில் பயணிப்ப தில்லை. ஆனால், ஒளி பயணிக்கிறது ஏன், டிங்கு?

- வி.ஆர். நந்தன், 8-ம் வகுப்பு, அ.மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்.

ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றன. அந்த அதிர்வு காற்றில் ஒலி அலைகளை உருவாக்குகிறது. தான் செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறு களை அதிர்வுறச் செய்கிறது. அத னால்தான் ஒலியை நம்மால் கேட்க முடிகிறது. மணி அடித்தால் அந்த அதிர்வில் ஒலி உருவாகி, காற்றில் பயணித்து நம் செவிப்பறையைத் தட்டுவதால் ஒலியை நம்மால் கேட்க முடிகிறது. ஒலி திட, திரவ, வாயு நிலைகளில் பயணிக்கக்கூடியது. ஒலியால் வெற்றிடத்தில் பயணிக்க இயலாது. ஒலி பரவ மூலக்கூறுகள் தேவை. காற்றைவிட நீரில் ஒலி வேகமாகப் பரவும். நீரைவிட திடப் பொருட்களில் இன்னும் வேகமாகப் பரவும். நம் கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள்தான் ஒளி என்று அழைக்கப்படுகின்றன. அலை, துகள் இரண்டின் பண்புகளையும் வெளிப்படுத்தும் ஒளி பயணிக்க ஊடகம் தேவை இல்லை. அதனால் வெற்றிடத்திலும் ஒளி பயணிக்கிறது, நந்தன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE