படை வீரர்களைக் காக்கும் பாக்டீரியா

By செய்திப்பிரிவு

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

உலகத்தின் உயரமான போர்க்களம் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இமய மலைத் தொடர்களில் ஏறக்குறைய 22000 அடி உயரத்தில் உள்ள ‘சியாச்சின்’ பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதி. பனி மூடிய சிகரங்களின் வழக்கமான சவால்களோடு, மிக முக்கியமான சவால் கழிவறை வசதியின்மை.

பனிமலையின் பிரச்சினை

பனிமலைகளில் மாநகராட்சி கழிவுநீர் வடிகால் வசதிகள் இருப்பதில்லை. மனிதக் கழிவுகளைப் புதைத்து மட்கச் செய்யும் வழக்கமான முறையில் ஏராளமான பிரச்சினைகள்.பனியின் உறைநிலை வெப்பத்தில் கழிவுகள் மட்காது, நண்பகல் சூரியன் பனிப்படிவுகளை உருக்கும் போது, கழிவுகளும் நீரில் கலக்கும். பனிக்கட்டிகள் நீரோட்டமாகி ஜீவநதிகளில் கலக்கும். கூடவே கழிவுகளும். இதனால் நதியோர கிராமங்களில் தொற்று நோய் மளமளவெனப் பரவ வாய்ப்புள்ளது.

கால்பந்து மைதானம் போல கிடைமட்டமான பரந்த நிலப்பரப்பு உயரங்களில் கிடையாது. கிடைத்த இடங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் தங்குமிடம்,ஆயுத அறை, சமையலறை என எல்லாவற்றிற்கும் இடம் வேண்டும். இந்நெருக்கடியில் மட்காத கழிவின் துர்நாற்றமும், நுண் கிருமிகளின் அபாயமும் நாட்டை காக்கும் வீரர்களுக்கு எதிரிகளை விட மிகப்பெரும் சவால்கள்.

உயிரிக் கழிவறை?

இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமைந்தவை நுண்ணுயிரிகள்தான். நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி இந்திய ராணுவ விஞ்ஞானிகள் வடிவமைத்த உயிரிக்கழிவறை (Bio Toilet) தனித்துவமானது. உயிரி செரிமானி (Bio Digester) என்ற தொழில்நுட்பப் பெயரும் இதற்கு உண்டு.

எப்படி இது இயங்குகிறது? காற்றில்லா பாக்டீரியா (Anaerobic Bacteria) தொகுதிதான் இதன் சூட்சுமம். கழிவறையின் தொட்டியில் இந்த பாக்டீரியா திரவம் ஊற்றப்படும்.அது மனிதக்கழிவை நீர், மீத்தேன், கார்பன்டை ஆக்சைட் எனப் பிரிக்கிறது. வெளிவரும்நீர் தெளிவானது, வாசனையற்றது, தோட்டத்திற்கும், உபகரணங்களைக் கழுவுவதற்கும்பயன்படுத்தலாம். மீத்தேன் மிகச்சிறந்த எரிபொருள். சமைக்கவும், அறைகளை வெப்பமேற்றவும் உதவும். வெளியாகும் கார்பன் டை ஆக்சைட் மிகக் குறைவு.

என்ன சிறப்பு?

உயிரிக்கழிவறை -50 டிகிரி செல்சியஸ்வரை செயல்படும். எனவெ பனிப்பிரதேசங்களில் பயன்படுத்துவதில் சிக்கலில்லை. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பராமரிப்பு என்ற பேச்சேயில்லை. கழிவறை கட்டிடத்தின் ஆயுட்காலம்தான் இக்கழிவறைகளின் ஆயுட்காலம்.

இந்தியாவின் நீளமான கழிவறை என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே துறை, உயிரிக்கழிவறைகளை ரயில் பெட்டிகளில் அமைத்திருக்கிறது. மேலும் விமானம், கப்பல், நீர்மூழ்கிக்கப்பல், தீவுகள் என கழிவுநீர் வடிகால் வசதியற்ற இடங்களிலும் இக்கழிவறை ஒரு வரப்பிரசாதமாகும். காஷ்மீரின் ‘தால்’ ஏரியின் படகு வீடுகளில் உயிரிக்கழிவறை அமைக்கும் சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் பாடத்தில் வெப்ப உமிழ் வினையைப் (Exothermic Reaction) பற்றி படித்திருக்கிறீர்களா? ராணுவ வீரர்களுக்கு உணவு பரிமாற அது பயன்படுத்தப்படுகிறது. எப்படி?(தொடரும்)

கட்டுரையாளர், ‘விண்ணும் மண்ணும்’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

3 days ago

வெற்றிக் கொடி

6 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

10 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

17 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

24 days ago

வெற்றிக் கொடி

1 month ago

மேலும்