ரெ.சிவா
‘வானவில் படை’ என்ற படம் நினைவிருக்கிறதா? பெலிதாங் என்ற கிராமப் பள்ளி குறித்த படம். அந்தத் தொடக்கப்பள்ளியில் பயின்ற சிறுவன் இகால். அவன் தன்னுடைய கனவு தேசமான பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரத்துக்கு படிக்கச் சென்றான் என்பதாக ‘வானவில் படை’ படம் முடிந்தது. தொடக்கப்பள்ளியை விட்டு சென்ற பிறகு பாரீஸ் கனவு நிறைவேறும் வரை இகாலுக்கு என்ன நடந்தது என்பதே 'கனவு காண்பவன்' (The Dreamer) படத்தின் கதை.
பட்டடப் படிப்பு முடிந்த பின் முதுகலை படிப்பை பாரீசில் படிக்க வேண்டும் என்ற இகாலின் கனவு கனவாகவே இருக்கிறது. பட்டப்படிப்பு முடிந்த பின் வயிற்றுப் பாட்டிற்காக அஞ்சலகத்தில் தபால் பிரிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறான். இதுவரை கூடவே இருந்த நண்பன் அராய்,திடீரென எங்கோ போய் விட்டான் என்றுவருந்துகிறான் இகால். அப்போது அவனுடைய நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
கனவை விதைக்கும் அன்பாசிரியர்
இகாலுக்கும் அராய்க்கும் ஒரே வயது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் அராயை அழைத்து வந்து தங்களோடு தங்க வைத்துக் கொள்கிறார் இகாலின் அப்பா. எதையும் வித்தியாசமாக யோசிப்பவன் அராய். மற்றவர்களை மகிழ்ச்சியாக ஆக்குவது எப்படி என்று சிந்திப்பவன். இவர்கள் இருவரோடு பெற்றோரை இழந்தஜிம்ப்ரான் என்ற சிறுவனும் நண்பனாகிறான். மூவரும் ஒன்றாகப் படிக்கிறார்கள்.
தொடக்கப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் மேலே படிக்க மங்கார் என்ற ஊருக்கு மூவரும் செல்கிறார்கள். ஊரில் உள்ள சந்தையில் வேலை பார்த்து கிடைக்கும் வருமானத்தில் உணவு, இருப்பிடத் தேவைகளை சிக்கனமாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள். தினமும் கொஞ்சமாவது பணத்தைச் சேமித்தும் வைக்கிறார்கள். பள்ளித் தலைமையாசிரியர் முஸ்தார் மிகவும் கண்டிப்பானவர். ஆசிரியர் ஜீலியன் பாலியாவகுப்பறையை இனிமையாக்குபவர்.
அவரது சொற்கள் மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவை. உலகமெங்கும் பயணம் செல்ல வேண்டும், உயர் கல்வியை பாரீசில் படிக்க வேண்டும் என்று மாணவ மாணவியரிடையே கனவை அவர் விதைக்கிறார்.
நீங்கள் மாபெரும் கனவுகளைச் சுலபமாக விதைத்து விடுகிறீர்கள். அதைஅடையும் வழி மிகவும் கடினமானது என்பதையும் அவர்களிடம் சொல்லவேண்டும் என்று தலைமையாசிரியர் கூறுகிறார். இருவரும் இணைந்து மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். பள்ளிநேரத்திற்குப் பின்னரும் சந்தையில் வேலைசெய்யும் மாணவர்கள் தவறு செய்யாமல்இருக்க வேண்டும் என்று தலைமையாசிரியர் கண்டிப்புடன் இருக்கிறார்.
தவறிழைக்கும் நண்பர்கள்
வயதுக் கோளாறால் நண்பர்கள் மூவரும் சிறு தவறு செய்கிறார்கள். பள்ளியில் அதற்காகத் தலைமையாசிரியர் தண்டனை தருகிறார். அதனால் பள்ளி செல்வதையே மூவரும் நிறுத்தி விடுகின்றனர். பல்வேறு வேலைகளைச் செய்துகொண்டும் ஊரைச் சுற்றிக்கொண்டும் பொழுதைக் கழிக்கின்றனர்.
அந்த ஊரில் உள்ள சிறிய துறைமுகத்தில் படகு மாலுமிகளிடம் பழகி எளிதில்உலகையே சுற்றிவரலாம். நமது கனவுஎளிதில் நிறைவேறும் என்று எண்ணிப்பெரும்பாலும் அங்கேயே பொழுதைக்கழிக்கிறார்கள். இதை அறிந்த தலைமையாசிரியர் அவர்களைத் தேடி துறைமுகத்திற்கு வருகிறார்.
இகாலைச் சந்திக்கிறார். “உங்கள் மூவருக்கும் என்மீது கோபம் இருக்கும். பாரீசுக்குப் போய் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உங்களது கனவு உயர்ந்தது. ஆனால், அது எளிதல்ல. வெறும் கனவு மட்டும் போதாது. அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் உங்களிடம் கடினமாக நடந்துகொள்கிறேன். நாளை உனது அப்பா பெற்றோர் கூட்டத்திற்காகப் பள்ளிக்கு வருவார். இந்தப் பருவத்தில் நீங்கள் ஃபெயில் மார்க் எடுத்திருப்பதை அறிந்த பின் அவர் எவ்வளவு மனவருத்தம்அடைவார்? ஒவ்வொரு முறையும் அவர்ஒரே சட்டையைத்தான் அணிந்து வருகிறார்.அவரிடம் இருக்கும் நல்ல சட்டை அது ஒன்றாகத்தான் இருக்கும். அவரது நம்பிக்கையை நீங்கள் குலைக்கலாமா? இனிமேலாவது பள்ளிக்கு வந்து படிப்பைத் தொடருங்கள்” என்று சொல்லுகிறார்.
குதிரை உண்டியல் பரிசு
இகால், அராய், ஜிம்ப்ரான் மூவரும் தங்களது தவறுக்கு வருந்திப் பள்ளி செல்கின்றனர். மற்ற நேரங்களில் படிப்பு, வேலை, சேமிப்பு என்று கடுமையாக உழைக்கின்றனர். இகாலும் அராயும் நன்றாகப் படிக்கின்றனர். ஜிம்ப்ரான் படிப்பில் சுமார். குதிரை வளர்ப்பது மட்டுமே அவனது கனவும் ஆசையும். ஊருக்கு வாடகைக்கு வரும் குதிரையை ஒருநாள் வாங்கிவந்து அவனது ஆசையை நிறைவேற்றுகிறான் அராய். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து இந்தக் குதிரையைச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லுகிறான்.
பள்ளி இறுதித் தேர்வில் இகாலும் அராயும் சிறப்பான தேர்ச்சியை அடைகின்றனர். கல்லூரிப் படிப்புக்காக ஜகர்த்தாநகருக்குக் கிளம்புகின்றனர். ஆசிரியர்,தலைமையாசிரியர், இகாலின் பெற்றோர்அவர்களை அன்போடு வழியனுப்புகின்றனர். குதிரை வடிவில் இருந்த தனதுஇரண்டு உண்டியல்களை எடுத்து வந்துஇருவருக்கும் கொடுக்கிறான் ஜிம்ப்ரான். குதிரைக்குத் தேவையான பணத்தை விரைவில் சேமித்துவிடுவேன் என்றும் கூறுகிறான்.
நடந்தவற்றை நினைத்துப் பார்க்கும் இகால், ஜிம்ப்ரான் கொடுத்த உண்டியலில் இருந்த பணத்தின் உதவியால் உயர்கல்வி உதவித்தொகைக்கான தேர்வுக்குத்தயாராகிறான். நேர்முகத் தேர்வன்றுஇன்ப அதிர்ச்சியாக அராயைச் சந்திக்கிறான் இகால். இருவருக்கும் பாரீஸ் சென்று உயர்கல்வி பயிலும் உதவித்தொகை கிடைக்கிறது. நண்பர்களின் கனவுப் பயணம் நனவாகத் தொடங்குகிறது.
கனவை விதைப்பது எளிது. அதைக்காத்து வளர்த்து நனவாக்குவதற்கு கடினமான முயற்சி தேவை. பள்ளியிலும் வெளியிலும் ஆசிரியர்களின் அன்பான கவனிப்பு குழந்தைகளின் கனவைச் சாத்தியமாக்கும்.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
2 days ago
வெற்றிக் கொடி
5 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
9 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
16 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
23 days ago
வெற்றிக் கொடி
1 month ago