இரா.முரளி
தெற்கு ஆப்பிரிக்காவில் 1990களில், ஆண்டுக்கு 70 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் நோயுடனே பிறந்தன. நாட்டில் 15 வயதிற்கு உட்பட்ட மொத்த சிறுவர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்தினர் எய்ட்ஸ் நோயுடன் இருந்தார்கள். அப்படி பிறக்கும் போதே சாவுக்கும் சாபம் வாங்கி வந்த சிறுவன்தான் கோசி ஜான்சன்.
அம்மா டஃபினிக்கு இருந்த எச்.ஐ.வி. எனும் எய்ட்ஸ் நோய் கருவிலேயே ஜான்சனுள்ளும் ஊடுருவியது. இதனால் எய்ட்ஸ் நோயுடனே அவன் பிறந்தான். சலோனி கோசி என்று பெயரிடப்பட்டான். அம்மா நோயுடன் இருந்ததால் தந்தை அவர்களை விட்டுப்போய்விட்டார்.
அரவணைத்த கைகள்
ஒரு நாள் அவனும் அவன் அம்மாவும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர். எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமாகத் திரண்டிருந்த அந்த ஆப்பிரிக்க மருத்துவமனையில் கோசியும், அவன் தாயும் முண்டியடித்து கொண்டுநின்றிருந்ததை கண்டார் சமூக சேவகர் ஜான்சன் என்னும் வெள்ளைக்கார பெண்மணி. தங்கக் கூட இடம் இல்லாத இவர்களுக்கு உதவநினைத்தார். தன்னுடைய வீட்டிலேயே தங்கவைத்தார். பின்னர் கோசியைத் தத்துப்பிள்ளையாகவும் வரித்துக் கொண்டார். அன்று முதல் அவன் பெயர் கோசி ஜான்சன் என்றானது.
கல்வி உரிமைக் குரல்
கோசி ஜான்சனை பள்ளியில் சேர்க்க முயன்ற போது, அவன் எய்ட்ஸ் நோயாளி என்பதால் நிர்வாகம் அவனை பள்ளியில் சேர்க்க மறுத்தது. ஆனால், சிறுவன் கோசி சும்மா விடவில்லை. தனக்கு முறையாகக் கல்வி கற்க இடம் தரவேண்டும் என்று ஊடகங்களில் பேசத் தொடங்கினான். அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னர் பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான இந்தஉரிமைக்குரல் பல நிறுவனங்களையும்ஊடகங்களையும் ஈர்த்தது. அவன் எய்ட்ஸ்நோயாளி குழந்தைகளுக்காக பேசத் தொடங்கினான். கோசியின் இடைவிடாத முயற்சியால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்விக்கூடங்கள் அனுமதி மறுக்கக் கூடாது என்ற சட்டத்தை அரசு பிறப்பித்தது.
அன்று முதல் ஆப்பிரிக்காவில் பல்லாயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளி குழந்தைகளுக்குப் பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அவன் பள்ளிக்கு போகத் தொடங்கியபோது, கோசியின் தாய் மிகவும்நோய்வாய்ப்பட்டு 1997ல் இறந்தார். தாயின்இறப்பு கோசியை மிகவும் பாதித்தது. என்றாலும், வளர்ப்புத்தாய் ஜான்சன் அவனை நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
கண்கலங்க வைத்த பேச்சு!
'கோசியின் சொர்க்கம்' என்ற பெயரிலே எய்ட்ஸ் நோய் நோயாளிகளுக்கான ஒருகாப்பகத்தை கோசி ஜான்சனின் வளர்ப்புத்தாய் உருவாக்கினார். அங்கு கோசியைப் போன்றே பிறவியிலேயே எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளையும், அவர்களின் தாய்களையும் பராமரிக்கத் தொடங்கினார். கோசி அவர்களுக்கு தன் பேச்சின் மூலம் நம்பிக்கையூட்டினான்.
2000-ல் ஆப்பிரிக்காவில், டர்பன் நகரில் நடைபெற்ற சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசுவதற்காக கோசி அழைக்கப்பட்டான். நலிந்த தேகத்துடன், ஒடுங்கிய கண்களுடன்,கருப்பு உடையில் மேடையில் தோன்றிய இந்த கருப்பு சிறுவன் பேசினான்:
"நாங்களும் மனிதர்கள்தான்! எங்களை ஒதுக்கி விடாதீர்கள்! நானும், என் அம்மாவும் எங்கு சென்றாலும் விரட்டப்பட்டோம். என் நோய்க்கு நான் காரணமில்லை. இது தொற்று நோயும் இல்லை. என் ரத்தம் உங்கள் ரத்தத்தில் கலக்கும்போதுதான் உங்களுக்கு இந்நோய் பரவும் ஆபத்து உள்ளது.
எங்களுக்குத் தெரியும் உங்கள் உயிரின் மதிப்பு. அப்படி ஆகாமல் நாங்கள் பார்த்துக்கொள்வோம். தாய்களுக்கு சரியான தடுப்பூசியைப் போட்டால் குழந்தைகள் என்போன்று பிறவாமல் பார்த்துக் கொள்ளலாம். எங்களை ஒதுக்காதீர்கள். உங்களைப்போன்றே கைகளும், கால்களும், உடலும் உள்ள மனிதப் பிறவிகள்தான் நாங்கள்."
11 வயது சிறுவனான கோசியின் இந்த உருக்கமான பேச்சு அங்கே கூடியிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கண்கலங்க வைத்துவிட்டது. யோசிக்கவும் வைத்தது. அன்று முதல் உலக அளவிலே எய்ட்ஸ் நோயாளிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வுகளின் முகமாக மாறினான் கோசி.
அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் பேச அழைக்கப்பட்டான். குழந்தைகளுக்கான ஆரோக்கியம் பற்றிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினான். ஊர் திரும்பிய அவனின் உடல் நிலைமிகவும் மோசமடைந்தது. விடாமல் உயிருக்காகப் போராடியும் பலனில்லை. 2001 ஜூன் 1 அன்று அவன் வாழ்வும் முடிந்தது.
கோசி இறந்த அடுத்த ஆண்டு, உலக குழந்தைகளுக்கான விருதை கோசியின் வளர்ப்புத் தாயிடம் முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அதிபர் கோர்பச்சேவ் வழங்கினார். ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலா கோசியை "வாழ்க்கைப் போராட்டங்களுக்கான சின்னம்" என்றார்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
19 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
2 months ago