தித்திக்கும் தமிழ்-11: விளி வேற்றுமை 

By செய்திப்பிரிவு

கவிதா நல்லதம்பி

மதியும் மலரும் தொலைக்காட்சியில் பழைய பாடல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘கண்ணா உனைத் தேடுகிறேன் வா' என்ற பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

மதி: நேற்று வேற்றுமை உருபுகள் பற்றிப் பேசிக்கிட்டிருந்தோமே. இந்தப் பாடல்ல இருந்து உனக்கு ஏதாவது குறிப்பு கிடைக்குதான்னு பாரு..
மலர்: அக்கா, ஆரம்பிச்சுட்டயா, கொஞ்ச நேரம் தான பாட்டுப் பாக்குறேன். அதுலயும் இலக்கணமா?
மதி: சரி.. வேண்டாம்னா விடு. உனக்கு எளிமையா சொல்லித் தரலாம்னு நினைச்சேன்.
மலர்: அக்கா, உடனே கோவிச்சுக்காத. நான் தமிழ்ல நிறைய மதிப்பெண்களும் வாங்கணும். அதே சமயம் தாய்மொழியப் பிழையில்லாமப் பேசவும் எழுதவும் கத்துக்கணும். சரி சொல்லு.. இந்தப் பாட்டுல என்ன இருக்கு?
மதி: நீ சமத்து.. உருபே இல்லாம ரெண்டு வேற்றுமைகள் இருக்குன்னு பேசினோம் இல்லையா..
மலர்: ஆமாக்கா. எழுவாய் வேற்றுமை, விளிவேற்றுமை. இந்த ரெண்டுக்கும்தான் தனியா உருபுகள் இல்லை. எழுவாய் பற்றிப் பார்த்துட்டோம். அப்ப விளி வேற்றுமை பற்றித்தான் பேசப் போறோமா? அதுதான் எட்டாம் வேற்றுமை. சரிதானக்கா..
மதி: இப்ப இந்தப் பாடலோட முதல் வரி எப்படித் தொடங்குதுன்னு பாரு.
மலர்: கண்ணா உனைத் தேடுகிறேன்னு..
மதி: கண்ணன் தான பேரு.. இங்க கண்ணான்னு கூப்பிடுறாங்க. அழைத்தல் என்கிற பொருள்ல பெயரைப் பயன்படுத்தியிருக்காங்க. கூப்பிடுதல், அழைத்தல் என்ற ரெண்டு சொல்லுக்கும் இணையான சொல்தான் விளித்தல். விளின்னா அழைன்னு பொருள். அதனால தான் இந்த வேற்றுமைக்கு விளி வேற்றுமைன்னு பேரு.
மலர்: ஓ.. இப்ப புரியுதுக்கா.. மன்னவா மன்னவாங்கிற பாட்டுக்கூட இதுக்குப் பொருந்தும் இல்லையா. கந்தா, குமரா இப்படி என்னால உடனே சொல்ல முடியுது.
மதி: ஆமாம் மலர். மன்னன் மன்னான்னு வருது. மன்னவன் மன்னவான்னு வருது. பெயர்ச் சொல் இதுபோல விளித்தல் பொருளில் வரும்போது, அந்தப் பெயரோட கடைசி எழுத்துல மாற்றம் ஏற்படும். இந்தச் சொற்கள்ல கடைசியில் இருக்கக் கூடிய ஒற்றெழுத்து நீங்கிடும். கடைசி எழுத்துக்கு முன்னாடி இருக்கும் எழுத்து நீண்டு நெடிலா ஒலிக்கும். இங்க மன்னன்ல இருக்கக் கூடிய ‘ன்’ என்கிற மெய்யெழுத்து போயிடுச்சு. அந்த மெய்யெழுத்துக்கு முன்னாடி இருக்கக் கூடிய ‘ன’ங்கிற குறில் எழுத்து நீண்டு ‘னா’ன்னு ஒலிக்குது.
மலர்: விளி வேற்றுமை புரிஞ்சதுக்கா. இரண்டாம் வேற்றுமை உருபைப் பற்றிச் சொல்றியா..
மதி: சொல்றேன் மலர். ஐ என்கிற இரண்டாம் வேற்றுமை உருபு ஒரு பெயர்ச்சொல்லை செயற்படு பொருளாக மாற்றுது ஆறு விதமான பொருளை தருவதற்கு இந்த வேற்றுமை பயன்படுது.
மலர்: என்னக்கா செயற்படுபொருள் அது இதுன்னு கடினமா சொல்ற. நானே வகுப்புல புரியலேன்னு தான உன்கிட்ட கேட்குறேன்.
மதி: சரி மலர், உனக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்றேன். நீ எளிமையா புரிஞ்சுப்ப. நிலா செடியை நட்டாள். இந்தத் தொடர்ல எது எழுவாய், எது செயற்படுபொருள்..
மலர்: நிலா பெயர்ச்சொல்லுன்னு தெரியும். அதுதான இங்க எழுவாய். மற்றதெல்லாம்..
மதி: இந்தத் தொடர்ல ‘நிலா’ என்பது எழுவாய். ‘செடி' ங்கறது பெயர்ச்சொல். இந்தப் பெயர்ச்சொல் ‘ஐ’ ங்கிற உருபை ஏற்றுச் செயப்படு பொருளைக் காட்டுது.
மலர்: மறுபடியுமா, நான் எளிமையா சொல்ல சொன்னேன்.
மதி: அப்ப இப்பவே முடிக்க முடியாது. நாளைக்கு இரண்டாம் வேற்றுமை பற்றி விரிவா பேசுவோம். வீட்டுப் பாடங்களை முடி. நேரமாச்சு.

(மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

5 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்