ரெ.சிவா
நகரத்தில் இருந்து வேலை மாற்றம் காரணமாக கிராமத்திற்கு வருகிறது ஒரு குடும்பம். பையனும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள். 7-ம் வகுப்பு படிக்கும் அவினாஷூக்கு அறிவியல் அறிஞராக ஆசை. அவன் தங்கை சுட்டிப் பாப்பா அக்ஷரா இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். இருவரும் அந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்.
அவினாஷ் வகுப்பில் அறிவியல் பாட வேளை. ஆசிரியர் வருவதற்கு முன்பாக ஒரு மாணவன், “மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியர் பட்டாபி அவர்கள் வரப்போகிறார்!” என்று அறிவிக்கிறான்.
அதிர்ச்சியடையும் மாணவ மனம்
கையில் ஒரு கம்புடன் வகுப்பறைக்குள் நுழைகிறார் ஆசிரியர் பட்டாபி. புதிய மாணவனான அவினாஷிடம், “அறிவியல் என்பதுஒரு சாஸ்திரம். அதுவே வேதம். சூத்திரங்களே மந்திரங்கள். அவற்றை தினமும் பாராயணம் செய்ய வேண்டும். அதைப் பின்பற்றிநடக்க வேண்டும். அதன் மேல் கேள்வி எதையும்கேட்கக்கூடாது. நன்றாக மனப்பாடம் செய்தால்தான் தேர்வில் நன்றாக எழுத முடியும்” என்கிறார். அவினாஷ் அதிர்ச்சியடைகிறான். மறுநாள், ஆசிரியர் தெர்மாமீட்டர் குறித்த பாடத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அவினாஷ் எழுந்து, “சார், தெர்மாமீட்டரில் பாதரசம் இருக்கு என்று சொல்றீங்க. ஏன் பாதரசத்தை வைக்கிறார்கள்? தண்ணீரை வைக்க கூடாதா? என்ன ஆகும்?”
ஆசிரியருக்குக் கடும்கோபம் வருகிறது. “இது மாதிரி முட்டாள் தனமான கேள்வி எல்லாம் கேட்காமல் நான் சொல்றத கவனி. என்னுடைய வகுப்பில் யாராவது பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்” என்று எச்சரித்துவிட்டு ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைத் தொடர்கிறார். மீண்டும் மெதுவாக அவினாஷ் எழுகிறான். “சார், நீங்க எழுதியிருப்பது தவறு. புத்தகத்தில் வேறு மாதிரி இருக்கு.”
கேள்வி கேட்டதால் பெயில்
“எனக்கு நீ சொல்றியா! நீ வாத்தியாரா, நான் வாத்தியாரா வெளியே போடா” என்று ஆசிரியர் கோபமாகக் கத்துகிறார். அவினாஷ் வெளியே போகிறான்.
சிறிது நேரத்தில் ஒரு சிறுமி எழுந்து, சார் அவினாஷ் சொன்னது சரிதான். புத்தகத்தில் வேற மாதிரி இருக்கு நீங்கதான் மாற்றி எழுதறீங்க. என்று கூறுகிறாள். என் வகுப்பில் யாரும் சத்தம் போடக்கூடாது என்று ஆசிரியர் கத்துகிறார். பாடவேளை முடிகிறது. கோபமாக அவர் வெளியேறுகிறார்.
நாட்கள் உருண்டோட மீண்டும் அறிவியல் பாட வேளை. தேர்வு விடைத்தாள்களுடன் பட்டாபி சார் வருகிறார். வழக்கம்போல கையில் கம்பு. மதிப்பெண்களுக்கு தக்கபடி பாராட்டும் அடியும். “இவனைப் பாருங்கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண். புத்தகத்திற்கும் இந்த விடைத்தாளுக்கும் புள்ளி கூட வித்தியாசம் இல்லை” என்று ஒரு மாணவனைப் பாராட்டுகிறார். “கண்டபடி கேள்வியாகக் கேட்டுக்கொண்டிருந்த அவினாஷ் பெயில்” என்கிறார்.
ஏற்கெனவே அவினாஷூடன் சண்டையிட்டு அதற்காக பட்டாபி சாரிடம் இருந்து அடி வாங்கிய வகுப்பு மாணவன் ஒருவன் இருவரையும் பழி வாங்க திட்டமிடுகிறான். பட்டாபி சார் புல்லட்டின் பிரேக்கை அவினாஷின் டூல் கிட் மூலம் கழற்றுகிறான். பட்டாபி சார் விபத்துக்கு உள்ளாகிறார். அவரது காலில் எலும்பு முறிவு. மூன்று மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை. பழி அவினாஷ் மீது விழ ஒருவாரம் பள்ளியிலிருந்து அவன் இடை நீக்கம் செய்யப்படுகிறான்.
புதிய ஆசிரியையின் வருகை
“பட்டாபி சார் வரும் வரை அறிவியல் பாடம்சொல்லித்தர இயலுமா?” என்று பள்ளி தலைமையாசிரியர் தனது மருமகள் மனசாவை கேட்கிறார். அறிவியல் பட்டம் படித்து உயர் படிப்புக்காக அமெரிக்கா செல்லவிருக்கும் மாணவி அவர். மதிப்பெண்ணுக்காக என்று இல்லாமல் என் விருப்பப்படி அறிவியல் சொல்லித்தர அனுமதித்தால் வருகிறேன் என்று சொல்லி பள்ளியில் இணைக்கிறார்.
புதிய அறிவியல் ஆசிரியை மானசா அறிவியல் என்றால் என்ன என்று கேட்டதும் பட்டாபி சாரின் ‘அறிவியல் வேதம்’ என்ற மந்திரத்தை அனைவரும் சொல்லுகிறார்கள். “பசங்களா, அறிவியல் மந்திரமோ, மனப்பாடமோ இல்லை. அதுதான் வாழ்வு. நமது வாழ்விலிருந்து அறிவியலைத் தேடிக் கற்கலாம்” என்று மானசா அன்பாக பேசத் தொடங்குகிறார்.
செயல்பாடுகள், கேள்விகளால் வகுப்பறை நிறைகிறது. அவ்வப்போது குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே சிறகடிக்கிறார்கள்.
மாநில அளவில் அறிவியல் கண்காட்சி பங்கேற்க நிதி போதவில்லை. ஆகையால் ஊர் மக்களிடம் இருந்து நிதி திரட்ட முயல்கிறார் மானசா. அனைத்து மாணவர்களும் ஒன்று கூடி ஊருக்குள் நாடகம் போடலாம் என முடிவு செய்கின்றனர்.
வெறும் கையில் திருநீறை வரவழைத்தல், தண்ணீரைப் பாலாக மாற்றுதல் போன்ற போலிச்சாமியார் வித்தைகளை நாடகமாக ஊருக்குள் நிகழ்த்தி நிதி திரட்டுகின்றனர்.
கேள்விகளே அறிவியலின் அச்சாணி. குழந்தைகளின் கேள்விகளின் வழியே தேடலின் வாசல் திறக்கும். அறிவியலை மனப்பாடம், மதிப்பெண், ஆய்வகங்கள் என்று மட்டுமே சுருக்கிவிடாமல் வாழ்க்கைக்குப் பயன்படும் வகையில் ஆக்க வேண்டும். உலகையும் சூழலையும் காக்கும் வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பதை ‘இகிசி தராஜூவாலு’ என்ற படம் கூறுகிறது.
கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், எழுத்தாளர்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
19 hours ago
வெற்றிக் கொடி
4 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
7 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
14 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
21 days ago
வெற்றிக் கொடி
28 days ago