சுலபத்தவணையில் சிங்காசனம்-11: வந்தாச்சு முப்பரிமாண அச்சு!

By செய்திப்பிரிவு

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

செங்கல் வரிசைகளால் சுவர் கட்டப்படுவதைப் போல ஒவ்வொரு அடுக்காக மூலப்பொருளை கூட்டி ஒரு பொருளை உருவாக்குவது முப்பரிமாண அச்சு (3D Printing) தொழில்நுட்பம். இது கூட்டல் உற்பத்தி (Additive Manufacturing) என்று பொறியியல் துறையில் அழைக்கப்படுகிறது.

அச்சடிக்க வேண்டிய பொருளின் முப்பரிமாண மாதிரிகள் (3D Models) முதலில் உருவாக்கப்பட வேண்டும். முப்பரிமாண மாதிரி அடுக்கடுக்காகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அடுக்காக அச்சடிக்கப்படும். இதற்கான மென்பொருள்களும் உண்டு.

எங்கெல்லாம் பயன்படுகிறது?

பயணிகள் மற்றும் போர் விமான பாகங்கள், விமான எஞ்சினின் பாகங்களை அலுமினியம், டைட்டானியம் மற்றும் நிக்கல் உலோகக் கலவைகளில் அச்சடித்து இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். பல ராணுவக் கருவிகள் உபகரணங்கள் உருவாக்கத்திலும் முப்பரிமாண அச்சு முக்கிய பங்காற்றுகிறது.

விண்வெளி மையத்தை பழுது பார்க்கத்தேவையான உபகரணங்களைக் கூடபூமியிலிருந்து சுமந்து செல்லத் தேவையில்லை. உபகரணங்களின் முப்பரிமாண மாதிரிகளை வைத்து விண்வெளி நிலையத்திலேயே வீரர்கள் அச்சடித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

விண்வெளி மற்றும் விமானத் துறையில் மட்டுமின்றி, வீடு கட்டுவதற்கும் முப்பரிமாண அச்சு பயன்படுத்தப்படுகிறது. உங்கள் அன்புக்குரியவர்களின் சிலைகளையும் நீங்கள் அச்சடித்து பரிசளிக்கலாம்.

மருத்துவத் துறையில் மாத்திரைகள் அச்சடிக்கப்படுகின்றன. இடுப்பு எலும்புஇணைப்பும், முழங்கால் எலும்பு இணைப்பையும் அச்சடிக்கலாம். பயனாளியின் சி.டி. ஸ்கேன் மாதிரியை வைத்து பொருத்தமான டைட்டேனியம் இணைப்புகளை உடனடியாக அச்சடிக்கலாம்.

எந்த மை?

கணினி பிரிண்டரில் மை இருப்பது போல முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் பாலிஅசிட்டைட், அக்ரைலோநைட்ரைல் ப்யூடாடின் ஸ்டைரின் உள்ளிட்ட பாலிமர் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சூடாக்கி உருக்கப்பட்ட இந்த பாலிமரைக் கொண்டு நாம் உருவாக்க வேண்டிய பொருளின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அடுக்கடுக்காக வரைவதின் மூலம் முழுப்பொருளும் உருவாக்கப்படும்.

பிளாஸ்டிக் மட்டுமின்றி அலுமினியம், தேனிரும்பு, டைட்டேனியம், நிக்கல் உள்ளிட்ட உலோகங்களையும் மூலப்பொருளாக பயன்படுத்தி உலோக பொருட்களை உருவாக்கலாம். உலோகங்களை தூள் வடிவில் கையாண்டு, லேசர் கதிர்கள் அல்லது எலெக்ட்ரான் கற்றைகளைக் கொண்டு பொருட்களை உருவாக்கலாம். அரிசி மாவு உள்ளிட்ட உணவுப்பொருட்களை பயன்படுத்தி தின்பண்டங்களை அச்சடிக்கலாம்.

முப்பரிமாண அச்சில் மனித உறுப்பு

முப்பரிமாண அச்சில் அடுத்த கட்டமாக, மனித செல்களை அச்சடித்து திசுவாக அவற்றை வளர்க்கும் உயிர் அச்சும் (Bio Printing) படிப்படியாக வளரஆரம்பித்திருக்கிறது. உலக அளவில் சோதனை முயற்சிகள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதன் அடுத்த கட்ட நகர்வு, இதயம் உள்ளிட்ட உறுப்புகளை அச்சடிக்கும் தொழில்நுட்பமாக உருப்பெறும்என்பதில் ஐயமில்லை.

என்ன படிக்க வேண்டும்?

பொறியியல், மருத்துவம், உணவுத் தொழில்நுட்பம், நுண்கலை உள்ளிட்ட துறைகளில் படித்தவர்கள் தங்களது துறைகளில் முப்பரிமாண அச்சை பயன்படுத்தலாம். பொறியியல் பட்டயப் (டிப்ளமா) படிப்பை இயந்திரவியல், மின்னணுவியல், கணிப்பொறியியல் உள்ளிட்ட துறைகளில் படித்தவர்கள் முப்பரிமாண அச்சு சார்ந்த சான்றிதழ் படிப்புகளை கூடுதலாகப் படித்து இத்துறையில் கால்பதிக்கலாம்.

வேலை வாய்ப்புகள்

உலகை ஆளப்போகும் தொழில்நுட்பங்களில் ஒன்றாக முப்பரிமாண அச்சு கருதப்படுகிறது. தனியார் மற்றும் அரசுத் துறைகளில் சில ஆண்டுகளில் முப்பரிமாண அச்சுத் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகும். இது வளர்ந்து வரும் துறை என்பதால் சுய தொழில் வாய்ப்புகள் தற்போது மிகப் பிரகாசமாக உள்ளன. வாருங்கள் எதிர்காலத்தை அச்சடிப்போம்!

(தொடரும்)

கட்டுரையாளர், ‘அடுத்த கலாம்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

19 hours ago

வெற்றிக் கொடி

4 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

7 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

14 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

21 days ago

வெற்றிக் கொடி

28 days ago

மேலும்