ஐம்பொறி ஆட்சி கொள் - 10: அக்காவை படிக்க வைத்த தங்கை மேரி கியூரி

முனைவர் என்.மாதவன்

ஒரு பெண்குழந்தை தனது பத்து வயதில் தாயை இழக்கிறது. ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பம் அது. பெற்றோர் ஆசிரியர்கள் என்பதால் ஆரம்பக்கல்வி பெறுவதில் தடை இருக்கவில்லை.

நாட்டின் விடுதலைக்காகப் பரம்பரை பரம்பரையாக பாடுபட்ட குடும்பம் அது. இதிலிருந்தே தெரிந்துவிடும் அவர்களுடைய பொருளாதார நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பது. ஒருவழியாக மேல்நிலைக்கல்வி வரை படித்து முடிக்கிறாள் அந்த சிறுமியும் அவரது அக்காவும். பின்னர்பொருளாதார உதவிக்காக அக்காவும் தங்கையும் ஒரு உடன்பாட்டிற்கு வருகின்றனர்.

எப்பாடுபட்டாவது படிப்பேன்!

அதன்படி இரண்டு வருடம் தங்கை பணிபுரிந்து அக்காவின் படிப்புக்காக செலவுக்குப் பொருளாதார உதவி செய்வது.பின்னர் அக்கா தங்கையின் படிப்புக்காக பொருளாதார உதவி செய்வது. இதன்படி வசதி படைத்த ஒரு வீட்டிலுள்ள குழந்தைகளுக்கான ஆசிரியராகவும் ஆலோசகராகவும் பணியாற்றுகிறார் தங்கை. அயல்நாடுகளில் இப்படிப்பட்டோர்களை நியமிக்கும் வழக்கம் உண்டு. இவர்களுக்கு ’Governess’ என்று பெயர். இவ்வாறு பணிபுரிந்து அவரது அக்காவின் படிப்புக்கு உதவுகிறார். பின்னர் தானும் பயின்று முன்னேறி நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியாகிறார்.

நாட்டுப்பற்றுக்கு முன்னுதாரணம்

நீங்களே இப்போது சொல்லிவிடுவீர்கள். ஆம்! மேரி கியூரிதான். மரியா ஸ்லொடஸ்காஎன்ற இயற்பெயர் கொண்ட மேரி கியூரி(1867 - 1934) போலந்து நாட்டில் வார்சாவில்பிறந்தவர். அக்கா தங்கை இருவருக்கும் தந்தை கணிதமும் இயற்பியலும் கற்பிக்கிறார். இதில் ஏற்பட்ட ஆர்வத்தால் இருவரும் மேன்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தினர். அந்நாளில் போலந்திலும் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. பெண்களை அனுமதித்த ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மேரி உயர்கல்வி கற்றார். ஏற்கெனவே தாயை இழந்தவர்.

குடும்பத்தின் பொருளாதாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் படிப்பதற்கான ஆர்வம் மட்டும் குறைவில்லாமல் இருந்ததால் அவரால் மேன்மேலும் பயின்று முன்னேறி ரேடியம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். கடுமையாக உழைத்தார். தன்னுடைய உழைப்பின் பலனை நாட்டுக்குச் சமர்ப்பித்தார். அதனால்தான் தனது தாய்நாட்டின் பெயரையே தான் கண்டுபிடித்த முதல் தனிமத்திற்குப் பெயராகச் சூட்டினார். ’பொலோனியம்’ (Polonium) என்ற வேதியியல் தனிமம்தான் அது.

வேதியியலுக்காகவும், இயற்பியலுக்காகவும் இரண்டு முறை நோபல் பரிசு பெறுவதென்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன?

இவரது வாழ்க்கை வரலாற்றை வாய்ப்பிருக்கும்போது முழுமையாக வாசியுங்கள். அதற்கு முன் இவரது வாழ்க்கை உணர்த்தும் செய்தி என்ன? ஒரு குடும்பம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டால் அவரது வாரிசுகள் என்னாவது என்று இன்று பலர் தாம் உண்டு தன் வேலையுண்டு என்று வசித்து வருகின்றனர். தங்களுடைய குழந்தைகள் ஈடுபடுவதையும் அநேக பெற்றோர்ஆதரிப்பதில்லை. ஆனால், பொதுவாழ்க்கை ஈடுபாடு என்பது தனிமனித முன்னேற்றத்திற்குத் தடையல்ல, எதையும் தாங்கும் இதயம் தரவல்லது என்பது மேரி கியூரியின் வாழ்க்கை உணர்த்தும் ஒரு செய்தி.

தடை ஏதுமில்லை!

ஒரு குடும்பம் என்று வரும்போது குடும்பத்தில் மூத்தோர்தான் இளையோரை வழிநடத்த இயலும், உதவி செய்ய இயலும் என்ற அடிப்படைக் கண்ணோட்டத்தை கியூரி தகர்த்திருக்கிறார். தனது அக்கா தன் பருவத்திற்குள் கல்வி கற்க தனது கல்வியைத் தற்காலிகமாகத் துறக்கிறார். ஆனால், முறைசாராத வகையில் தனது கல்வியை தொடர்கிறார். பின்னர் வாய்ப்பு வரும்போது தான் கற்ற முறைசாரா கல்வியினை முறைசார்ந்த கல்வியோடு ஒருங்கிணைத்து வெற்றி அடைகிறார்.

ஆம்! நமக்கு வசதி இல்லை, வாய்ப்பு இல்லை என்று தயங்குபவர்களால் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. வாய்ப்பை நோக்கி நாம் நகரும்போது புதுப்புது வெளிச்சங்கள் நமக்கு கிடைக்கும். இருட்டில் கூட நடந்து பாருங்கள். நமது கண்கள் தகவமைப்பு பெற்று ஒரளவுக்கு வழியைக் காட்டும். எவ்வளவு பெரிய பயணமானாலும் முதல் அடியிலேயே தொடங்கி கடைசி அடியிலேயே நிறைவு பெறுகிறது. இடையிலுள்ள அடிகள் முக்கியம்தான் என்றாலும் முதல் அடி எடுத்துவைக்காமல் அடுத்தடுத்த அடிகள் இல்லைதானே!

(தொடரும்)

கட்டுரையாளர்: பள்ளி தலைமையாசிரியர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE