நதிகள் பிறந்தது நமக்காக! - 10: பாலைவன சோலை போன்ற நதி சபர்மதி!

By செய்திப்பிரிவு

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் மேற்கு மாநிலங்களான ராஜஸ்தான், குஜராத் வழியே பாய்கிறது அமைதிக்கு வழி காட்டும் ‘ஆசிரமம்' அமைந்து இருக்கும் இடத்தில் பாய்கிறது இந்த நதி. வடக்கு, வட மேற்கு இந்தியாவில், ஆரவல்லி மலைத் தொடர் உள்ளது. டெல்லியில் தொடங்கி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் என்று சுமார் 700 கி.மீ.க்கு நீள்கிறது இந்த மலைத்தொடர். இங்கு தான் ‘மவுண்ட் அபு’ சிகரம் இருக்கிறது. பொதுவாக நமக்கெல்லாம், ராஜஸ்தான் என்றாலே ‘தார்’ பாலைவனம்தான் நினைவுக்கு வரும்.மேற்கு இந்தியாவின் முக்கியமான நதி ஒன்றும், இந்த மாநிலத்தில்தான் தோன்றுகிறது.

தேசத் தந்தைக்கு நிலம் கொடுத்த நதி

உதய்பூர் மாவட்டத்தில், ஆரவல்லி மலைப் பகுதியில் உற்பத்தி ஆகும் இந்த ஆறு, சுமார் 370 கி.மீ. நீளம் கொண்டது. இதில், சுமார் 50 கி.மீ மட்டுமே ராஜஸ்தானில் ஓடுகிறது. அதன் பிறகு, குஜராத் மாநிலத்துக்குள் நுழைந்து, அங்கேதான் 320 கி.மீ. தூரம் பாய்கிறது. நிறைவாய், ‘கம்பட் வளைகுடா’வில் (Gulf of Khambhat) அரபிக் கடலில் சங்கமிக்கிறது. சிலர் இதனை ‘கம்பே வளைகுடா’ (Gulf of Cambay) என்றும் அழைப்பதுண்டு.

குஜராத் மாநிலத் தலைநகரான காந்தி நகரமும் அகமதாபாத் நகரமும் சபர்மதி கரையில் அமைந்து உள்ளன. குஹாய் (Guhai), வட்ரக் (Watrak), வகல் (Wakal), ஹத்மதி (Hathmati), ஹர்னவ் (Harnav), காரி (Khari), மேஷ்வோ (Meshwo), மோஹர் (Mohar), ஷேதி (shedhi), மஸாம் (Mazam) என்று ஏராளமான கிளை அறுகள் கொண்டது இந்த நதி. ஆனாலும், முற்றிலுமாக பருவ கால மழையை நம்பி இருக்கிற ஆறு இது. அதனால், கோடைக் காலங்களில் அநேகமாக வறண்டே இருக்
கிறது. இந்த ஆற்றின் கரை மீதுதான் தேசத் தந்தை மகாத்மா காந்தி ஆசிரம் அமைத்துத் தங்கினார். அதுதான் சபர்மதி ஆசிரமம்.

மாசடையும் வேதனை!

தராய் (Dharoi) ஹத்மதி (Hathmati)ஹர்னவ் (Harnav) குஹாய் (Guhai) என்று அணைகள், மேஷ்வோ (Meshvo) நீர்த்தேக்கம் உள்ளிட்டவை இவ்வாற்றின் மீது அமைந்துள்ளன. சர்வதேச காற்றாடி திருவிழா, இந்த ஆற்றின் கரையில் நடந்தது. ஆனால், வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால் இந்தியாவில் மிக அதிகமாக மாசு படிந்த ஆறுகளில் சபர்மதியும் ஒன்று. கடல் சென்று சேருமுன் சுமார்120 கி.மீ. நீளத்துக்கு, ஆறு மொத்தமும் தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமே நிரம்பி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வருத்தமாக உள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, விசாரணைகள் தொடங்கி உள்ளன. நம்புவோம் - நல்லது நடக்கும். இப்போதைக்கு, மன நிறைவு தருகிற நல்ல செய்தியும் இருக்கிறது. உலகத்தை அகிம்சை, அமைதியின் பக்கம் திருப்பிய அபூர்வ மனிதரின் இருப்பிடத்தால், பலரும் வந்து போகிற புனிதத் தலமாக மாறி இருக்கிறது சபர்மதி. அவசியம் நாம் எல்லாரும் கால் பதிக்க வேண்டிய இடம் -சபர்மதி.

(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’,
‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE