பிளஸ் 2 உயிரி-தாவரவியல்
தொகுப்பு: எஸ்.எஸ்.லெனின்
பொதுத் தேர்வுக்கு அப்பால் தகுதி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கும் உயிரியல் பாடம் அவசியமாகும். அந்த அடிப்படையில் பாடங்களை படிப்பது, பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் உயர்வுக்கும் வழி வகுக்கும். 70 மதிப்பெண்களுக்கான பிளஸ் 2 உயிரியல் வினாத்தாள், தலா 35 மதிப்பெண்களுடன் உயிரி-தாவரவியல், உயிரி-விலங்கியல் என 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியான உயிரி-தாவரவியலை இங்கே பார்ப்போம்.
வினாத்தாள் அமைப்பு
உயிரி-தாவரவியல் வினாத்தாள் 4 பிரிவுகளாக உள்ளது.
பிரிவு 1 ஒரு மதிப்பெண் பகுதியின் 8 வினாக்களில் குறைந்தது இரண்டேனும் உயர்நிலை சிந்தனைக்கான வினாவாக அமைந்திருக்கும். இதர வினாக்களை புத்தகத்தின் பின்பகுதியில் இருந்து படிப்பதுடன், பாடங்களின் உள்ளிருந்தும் வினாக்களை உருவாக்கி, தொகுத்துப் படிப்பது அவசியம்.
பிரிவு 2 6-லிருந்து 4-க்கு விடையளிப்பதாக 2 மதிப்பெண் வினாக்கள் அமைந்திருக்கும். இவற்றுக்கு 2 முதல் 5 வரிகளில் விடையளிக்கலாம். நேரடி வினாக்கள் மட்டுமன்றி, ஒரு கருதுகோள் தொடர்பான ‘ஏன் அல்லது வரையறு’ என்பதாகவும் அவை கேட்கப்படலாம்.
பிரிவு 3 5-லிருந்து 3-க்கு விடையளிப்பதாக 3 மதிப்பெண் வினாக்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்று கட்டாய வினாவாகும். பிரிவு 4 ‘அல்லது’ வகையிலான 2 வினாக்கள் 5மதிப்பெண் பகுதியில் அமைந்துள்ளன. ’விளக்குக, அட்டவணைப்படுத்துக, விவரிக்க’ என்பதாகவே இவை இடம்பெறும்.
அதிக மதிப்பெண்களுக்கு
ஒரு மதிப்பெண் பகுதிக்கு பாடப்பகுதியின் ஆங்காங்கே அடைப்புக் குறிக்குள் உள்ள விவரங்களையும் படிப்பது அவசியம். இப்பகுதியின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்களுக்கு, இதர மதிப்பெண் வினாக்களின் ஒரு மதிப்பெண் கூறுகளை அடையாளம் கண்டு படிப்பது நல்லது. உதாரணமாக, 5 மதிப்பெண்களுக் கான ‘சூழ்நிலையியலின் படிநிலைகளை வரிசைப்படுத்துக’ அல்லது ‘குறுக்கேற்ற செயல் முறையின் படிநிலைகளை வரிசைப்படுத்துக’ போன்ற வினாக்களின் படிநிலைகளில் வரும் தொடர்ச்சியை புரிந்துகொள்வது அவை தொடர்பான ஒரு மதிப்பெண் வினாவுக்கு பதிலளிக்க உதவும்.
2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் ’எடுத்துக்காட்டு’ கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவற்றை எடுத்து எழுதுவது அவசியம். அதுபோன்றே படங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் படம் வரைய வேண்டும். கருத்துக்களின் எண்ணிக்கையில் குறிப்பிட்டு கேட்காத போது, 2 மதிப்பெண்ணுக்கு 4, 3 மதிப்பெண்ணுக்கு 6 என்பதாக பாடக் கருத்துக்களை எழுதலாம். ’பயன்கள், வேறுபடுத்தல், முக்கியத்துவம்’ போன்ற வகையிலான வினாக்கள் முக்கியமானவை.
3 மதிப்பெண் பகுதியின் கட்டாய வினாவானது, மரபியல் பாடத்தின் ‘கொடுக்கப்பட்ட தரவுகளில் இருந்து கலப்பின் வகையை கண்டறிந்து அதன் புறத்தோற்ற வகையின் விகிதங்கள் எழுதுவது’ அல்லது சூழ்நிலையியல் பாடத்தின் ’பத்து விழுக்காடு விதி’ தொடர்பான கணித வினாவாக அமையலாம். 5 மதிப்பெண் பகுதியின் 4 வினாக்களும் தாவரவியலின் 5 அலகுகளில் இருந்தே இடம்பெறுவதால் அவற்றை, ‘மரபியல், உயிரி தொழில்நுட்பவியல், தாவர சூழ்நிலையியல்’ ஆகிய 3 பாடங்களில் இருந்து தலா ஒரு வினாவாகவும், ‘தாவரங்களில் இனப்பெருக்கம்’ மற்றும் ‘பொருளாதார தாவரவியல்’பாடங்களில் இருந்து ஒரு வினாவாகவும் எதிர்பார்க்கலாம். ‘அல்லது’ வினாக்களில்‘விளக்குக’ என்பதான வினாக்களை விட ’படி நிலைகள், முக்கியத்துவம், பயன்கள், விளைவுகள்’ என பாயிண்டுகள் அடிப்படையிலான வினாக்களுக்கு முன்னுரிமை தருவது முழு மதிப்பெண்ணை உறுதி செய்யும்.
படம் தொடர்பாகக் கேட்கலாம்
தாவரவியலை பொருத்தவரை ஒரு மதிப்பெண் பகுதியிலும் படத்தை அடிப்படையாகக் கொண்டவினா இடம் பெறலாம். இதுவே 2 மற்றும் 3 மதிப்பெண் பகுதிகளில் ஒரு படத்தை கொடுத்து, ‘எந்த வகை கருவூண் திசுவை சேர்ந்தது, மற்றவையில் இருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது, கருநிலையை கண்டறிக’ என்பதாகவும் கேட்கலாம். 3 மற்றும் 5 மதிப்பெண் பகுதிகளில் படத்தைக்கொடுத்து பாகங்களை அடையாளம் இடுமாறும், அவற்றை விளக்குமாறும் கேட்கலாம். 5 மதிப்பெண்ணில் படம் வரைந்து, பாகங்களை குறித்து, விளக்கம் எழுதுமாறு கேட்கலாம். படத்தைக் கொடுத்து அது தொடர்பாகவும் கேட்கலாம்.
எ.கா.‘சடுதி மாற்ற வகையைக் கண்டறிந்து விளக்குக’. உயிரி-தாவரவியலில் படங்களை நேர விரயமின்றி வரையலாம். ‘முதிர்ந்த மகரந்தப் பையின்குறுக்குவெட்டுத் தோற்றத்தை வரைந்து விளக்குக’ என கேட்டிருந்தால் முழுப்படத்துக்கான அவுட்லைன் மட்டுமே வரைந்து, விளக்கத்துக்கு அவசியமான சிறு பகுதியை மட்டும் சிரத்தையுடன் வரைந்தால் போதும். அலங்காரங்கள் எதுவுமின்றி வடிவம் மற்றும் முறையான பாகங்கள் வரைந்தால் போதும்.
- பாடக் குறிப்புகள் வழங்கியவர்:
எஸ்.மலர்விழி,
முதுகலை ஆசிரியை (தாவரவியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, செண்பகராமன்புதூர்,
கன்னியாகுமரி மாவட்டம்.
தேர்ச்சி நிச்சயம்
மெல்லக் கற்போர் இனிவரும் நாட்களில் புதிதாக படிப்பதை விட, ஏற்கெனவே படித்ததை திருப்புதல் செய்வது முக்கியம். பாடங்களின் பின்பகுதி வினாக்களை படிப்பதன் மூலம் தேர்ச்சிக்கான மதிப்பெண்களைப் பெற்றுவிடலாம். மேலும் படங்களை வரையப் பழகியும், பாகங்களைக் குறித்தும் அவை தொடர்பாகப் பதிலளிக்கப் பயிற்சி செய்தால் கூடுதல் மதிப்பெண்களைப் பெறலாம். கலைச்சொற்கள் குறைவான வினாக்களுக்கு முன்னுரிமை தந்து விடையளிப்பது பிழைகளை தவிர்க்கச் செய்யும்.
மறைமுக வினாக்களில் கவனம்
மறைமுக வினாக்களுக்கு கவனமாக விடையளிக்க வேண்டும். எ.கா: ‘சிறுதானிய வகைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக’ என்ற வினா, ‘குறைவான அளவு சர்க்கரை அளவு குறியீட்டைக்கொண்ட தானிய வகைகள் யாவை? எடுத்துக்காட்டுடன் விளக்குக’ என்பதாகவும் கேட்கப்படலாம். அதே போன்று ‘பசுமை இல்ல விளைவு என்றால் என்ன? அதன் விளைவுகள் யாவை?’ என்ற வினாவினை, ‘சூரிய வெப்பக்கதிர்கள் வளிமண்டல வாயுக்களினால் கவரப்பட்டு வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிப்பதால் என்ன நிகழ்கிறது என்பதை விவரி. அதன் விளைவுகள் யாவை?’ என்பதாக நீட்டி முழக்கியும் கேட்கலாம்.
முக்கிய செய்திகள்
வெற்றிக் கொடி
3 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
6 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
13 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
20 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
27 days ago
வெற்றிக் கொடி
1 month ago
வெற்றிக் கொடி
1 month ago