நதிகள் பிறந்தது நமக்காக! - 09: மனம் மயக்கும் தூய ‘சம்பல்’ நதி!

By செய்திப்பிரிவு

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

ஆறு என்று சொன்னாலே மாசு, அழுக்கு, கழிவு போன்ற சொற்கள்தாம் இன்றைய நிலையில் நினைவுக்கு வருகின்றன. ஆனால், மாசு படாத தூய நதி ஒன்று இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுதான் சம்பல் நதி.

மேற்கு மத்திய பிரதேசம் விந்திய மலை இந்தூர் மான்பூர் அருகே, மோவ் நகரத்தின் 'ஜனாபாவ்' பகுதியில் உற்பத்தி ஆகிறது 'சம்பல்' (Chambal). 'மால்வா' மண்டலம் வழியே பாயும் இது, யமுனா நதியின் முக்கிய கிளையாறு. 'பனஸ்' (Banas), காளி சிந்து (Kali Sindh), சிப்ரா (Sipra) மற்றும் பார்பதி (Parbati) ஆகியவை சம்பல் நதியின் கிளை ஆறுகளாகும்.

பகடை விளையாடிய கரையின் கதை

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களை தொட்டுச் செல்கிறது 'சம்பல்'. சுமார் 900 கி.மீ. நீளம் பாய்ந்து, நிறைவாய், யமுனை நதியில் சங்கமிக்கிறது. சம்பல் நதியின் பழங்காலப் பெயர் சர்மன்வதி (Charmanvat). சர்மன் - தோல். சர்மன்வட் - தோல் உலர வைக்கும் (ஆற்றங்) கரை.
இந்தியாவின் தொன்மையான நதிகளில் இதுவும் ஒன்று.

மகாபாரதத்தின்படி, இது சர்மான்யவதி (Charmanyavati). மன்னன் ரந்திதேவா வேள்விக்காக ஆயிரக்கணக்கான உயிரினங்களைப் பலி கொடுத்தாராம். அப்போது வடிந்த ரத்தத்தில் உருவானது இந்த நதி என்கிறது ஒரு கதை. பாஞ்சால அரசின் தெற்கு எல்லையாக இருந்த சம்பல் ஆற்றின் கரை வரை, துருபதன் ஆட்சி இருந்ததாம்.

நாட்டுப்புறக் கதைகளின்படி, இது சகுனி அரசின் ஒரு பகுதி. இங்குதான் மகாபாரதப் பகடை விளையாட்டு நடந்தது. அவமானத்துக்கு உள்ளான திரவுபதி, சர்மன்வதி ஆற்றில் இறங்கத் தடை விதித்ததாகவும், அதனால்தான் இன்றளவும் இந்த ஆறு, மனிதர்களால் மாசு படாமல் தூய்மையாக இருப்பதாகவும் கூட ஒரு கதை இருக்கிறது. இது உண்மையோ பொய்யோ.... ஆற்று நீரில், அசுத்தம் சேராமல் இருப்பதே நல்ல செய்திதானே!

பல்லுயிர் பெருகும் நதி

தூய்மையாக பாதுகாக்கப்பட்டாலும் சம்பல் நதியின் கீழ்ப் படுகையில்,10 கி.மீ. நீளத்துக்கு, மண் அரிப்பு நேர்ந்து உள்ளது. ஆகவே, இந்தப் பகுதியில் மண் பாதுகாப்பு (soil conservation) திட்டம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. காந்தி சாகர் அணை, ராணா பிரதாப் சாகர் அணை, ஜவஹர் சாகர் அணை மற்றும் தேசிய 'சம்பல்' பறவைகள் காப்பகம் ஆகியனவும் இந்த ஆற்றின் பயன்கள். சம்பல் நதியில் 'மக்கர்', 'காரியல்' (the mugger and gharial) என்று இரண்டு வகை முதலைகள் வாழ்கின்றன.

மேலும் பல்வேறு அரிய வகை நீர் வாழ் உயிரினங்களும் உள்ளன. நதி நீர் தூய்மையாக இருப்பதால்தான் இதுவெல்லாம் சாத்தியம் ஆகிறது. நம் ஊர் ஆற்றிலும் இப்படி எல்லாம் இருந்தால் நன்றாகத்தானே இருக்கும்!

(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE