நதிகள் பிறந்தது நமக்காக! 6: கிளை ஆற்றுக்கு மதிப்பில்லையா!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

இந்தியாவின் வட கோடி மாநிலங்களில் ஒன்று - இமாசல பிரதேசம். பெயரில் இருந்தே தெரியும் இமய மலையின் அடிவாரத்தில் இருக்கிறது என்று.

இந்த மாநிலத்தின் ஆறுகளில் முக்கியமானது - பியஸ் (Beas) நதி.

உலகம் சுற்றிய மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326 -ம் ஆண்டில், இந்தியாவின் வட கோடியை எட்டினார். அதற்கு மேல் செல்ல முடியாமல் போனது. என்ன காரணம்? வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பியஸ் நதி அவரது படைகளைத் தடுத்தது.

மாவீரனையே மிரட்டிய நதி

ஏற்கெனவே நீண்ட நாட்கள் பயணித்துக் களைத்து விட்ட வீரர்கள், நதியைக் கடந்து செல்ல மறுத்தனர். வேறு வழியின்றி அலெக்சாண்டர் திரும்பிப் போக நேரிட்டது என்கிறது வரலாறு. இந்தியாவில் போற்றப்படுகிற அறிஞர்களில் ஒருவர் வியாசர். அவரது பெயரைத் தாங்கி நிற்கிற பியஸ் நதி பழங்கால சம்ஸ்கிருத நூல்களில் விபாஷா (Vipasha) என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இமாசல பிரதேசத்தில் ரோடங்க் பாஸ் (Rohtang Pass) என்கிற இடத்தில், 10 ஆயிரம் அடி உயரத்தில் உற்பத்தி ஆகிறது இந்த நதி. அங்கிருந்து கிட்டத்தட்ட 470 கி.மீ. நீளம் பாய்கிறது. மற்ற இமய நதிகளைப் போலவே பியஸூம் வற்றாத ஜீவ நதியே. இமாசல பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களின் வழியே சென்று, நிறைவாக, ஹரிகே (Harike) என்ற இடத்தில் சட்லெஜ் ஆறுடன் கலக்கிறது.

பெயர் சொல்லும் நகரம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில், பியஸ் நதி பாயும் ஒரு நகருக்கு பியாஸ் நகரம் என்றே பெயர் இடப்பட்டுள்ளது.
குல்லு, கங்க்ரா (Kangra Valley) என்று இரண்டு பள்ளத்தாக்குகள், சிவாலி குன்றுகள் (Shivalik Hills) மற்றும் பல்வேறு மலைகளின் வழியே பாயும் பியஸ், ஆங்காங்கே பல கிளையாறுகளைத் தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.

இடையே மூன்று திசைகளில் பிரிந்து, சிறிது தூரம் ஓடி, மீண்டும் மிர்த்தால் (Mirthal) பகுதியில், சுமார் 2000 அடி உயரத்தில் ஒன்று சேர்கிறது. பியஸ் நதியின் முக்கிய கிளை ஆறுகள் பெயின் (Bain), பன்கங்கா, லூனி, உஹால், சக்கி, ஹர்லா, மமுனி, பார்வதி, சுகேதி & தீர்த்தன். ஆமாம், ஒவ்வொரு நதிக்கும், கிளையாறுகளின் பெயரை ஏன் குறிப்பிட வேண்டும்? பெயருக்குத்தான் இவை கிளைகள். இவற்றில் பல, பிரதான நதிக்கு நிகரானவை. மிகுந்த பலன் அளிப்பவை.

ஆற்றுக்கு மரியாதை

தமிழ்நாட்டில்தான் நாம், கிளை ஆறுகளுக்கு உரிய மதிப்பு அளிக்கத் தவறி வருகிறோம். இதனால், பல கிளை ஆறுகள் காணாமல் போய் விட்டன. உதாரணத்துக்கு, தென் பெண்ணை ஆற்று நீரின் கிளை ஆறுதான் - மலட்டாறு. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட, ஓடிக் கொண்டு இருந்த இந்தக் கிளையாறு, தற்போது, அறவே இல்லாமற் போனது!

வட மாநிலங்களில் இப்படி இல்லை. பிரதான நதிக்குத் தரும் முக்கியத்துவம், மரியாதை, கிளை ஆறுகளுக்கும் வழங்கப்படுகிறது. அதனால்தான் அங்கே, நீர் நிலைகள், நீர் ஆதாரங்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன. இந்த ஆற்றின் குறுக்கே, பாங்க் (Pong Dam), பண்டோஹ் (Pandoh Dam) என்று இரண்டு அணைக்கட்டுகள் எழுப்பப்பட்டு உள்ளன. சுமார் 360 மெ.வா. நீர் மின்சக்தி தயாரிக்கப்படுகிறது.

சொல்ல மறந்து விட்டேனே... இந்த ஆற்றை ஒட்டிய நகரங்கள்தாம் - நாம் மிகவும் ரசிக்கும் குலு, மனாலி.இப்போது சொல்லுங்கள் பியஸ் நதியைப் பார்க்க வேண்டும்தானே?

(தொடர்வோம்)

கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE