திசைகாட்டி இளையோர் 3: கல்வியே விடுதலைக்கு வழி

இரா.முரளி

உலக வரலாற்றில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்ல, இளம் மாணவர்களும் பல்வேறு தளங்களில் தடம் பதித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் அமெரிக்காவில் வாழும் ரூபி பிரிட்ஜஸ் இடம் பெறுவார். தடைகளை மீறி பள்ளி சென்று, பயின்று, சிறு வயதிலேயே அச்சமின்றி அநீதிகளைக் கடந்தவர் இந்தக் கருப்பினப் பெண்.

அவள் கருப்பினத்தைச் சேர்ந்தவள் என்பதால் அமெரிக்கப் பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்காவின் வெள்ளை இனக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் கருப்பின மாணவர்கள் யாரும் அனுமதிக்கப்படாத காலம் அது.

நுழைவுத்தேர்வு எனும் தடைக் கல்

அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் வெள்ளையர் பயிலும் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று உத்தர விட்டது. ஆனாலும் லூசியானா மாநிலத்தில் வெள்ளையர் பயின்ற பள்ளிகள் கருப்பினர் பயில அனுமதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை அரசுப் பள்ளிகள் கடைப்பிடிக்கும்படி கடுமையாக வலியுறுத்தப்பட்டது.

எனவே கருப்பின மாணவர்கள் பள்ளியில் சேருவதை தடைசெய்யப் பள்ளிகள் ஒரு யுக்தியை கையாண்டன. அதுதான் நுழைவுத் தேர்வு எனும் தடைக்கல். நுழைவுத் தேர்வில் கருப்பின குழந்தைகள் தேர்ச்சிப் பெற இயலாது என்று நினைத்தார்கள். ஆனால், இந்த நுழைவுத் தேர்வை எழுதி பள்ளியில் சேருவதற்கு ரூபி உட்பட 6 குழந்தைகள் தேர்ச்சி அடைந்தனர். அவர்கள் பள்ளியில் சேர பயந்தார்கள். ரூபி மட்டுமே பள்ளியில் சேர்ந்தாள்.

பாதுகாப்புடன் பள்ளிக்கு...

ரூபியின் அம்மா தன் பெண் படித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் ரூபி 1960-ல் நவம்பர் 14 அன்று பள்ளிக்குச் சென்றாள். நான்கு போலீஸ்காரர்கள் பாதுகாப்பிற்கு அனுப்பப்பட்டனர். அவள் குனிந்த தலை நிமிராமல் வகுப்பறை வரை செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டாள். அவள் பள்ளிக்குள் நுழைந்த முதல் நாளே நூற்றுக்கணக்கான வெள்ளையர் பள்ளியின் வாசலில் அவளுக்கு எதிராக முழக்கமிட்டு எதிர்த்தனர். அவள் அது குறித்து அச்சமோ, கவலையோ கொள்ளவில்லை.

கடும் எதிர்ப்பு

ஆசிரியை பார்பராவைத் தவிர அத்தனை வெள்ளை ஆசிரியர்களும் ரூபிக்கு பாடம் எடுக்க மறுத்தனர். எதிர்ப்பைக் காட்டும் வகையில் வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தினார்கள். ரூபி மட்டுமே தனியாக இருந்தாள். ஆனால், சில நாட்களிலேயே வேறுவழியின்றி பிற பெற்றோரும் ஒவ்வொருவராக தங்கள் குழந்தைகளை பள்ளிக்குஅனுப்பி வைத்தனர். உணவில் விஷம் வைத்து அவளைக் கொன்று விடுவதாக பலர் மிரட்டினார்கள். ஆனால், இதையெல்லாம் கண்டு அச்சப்படவில்லை ஐந்து வயதே ஆன ரூபி.

அப்பாவுக்கு வேலை போனது

ரூபியின் தந்தை தான் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர்கள் குடும்பத்திற்கான மளிகை சாமான்கள் தருவது கூட கடைகளில் நிறுத்தப்பட்டன. பள்ளிக்கு சீருடை வாங்க கூட அவளுக்கு வசதி இல்லை. கல்வி தான் தன்னை விடுவிக்கும் என்ற சிந்தனையை ரூபியின் அன்னை அவள் மனதிலே பதியவைத்தார்.

ஆயிரம் இன்னல்கள் வந்தாலும், கல்வி கற்றே ஆகவேண்டும் என்பதில் சிறுமியான ரூபி வைராக்கியமாக இருந்தாள். அப்படி உறுதியுடன் கல்வி பயின்றதுதான் அவளின் சாதனை.

புகழடைந்த தருணம்

காவலாளிகளுடன் அவள் பள்ளிக்குச் செல்லும் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது. அது ஓவியமாகவும் வரையப்பட்டு புகழ்பெற்றுள்ளது. ரூபியின் பள்ளி வாழ்க்கை தொலைக்காட்சி தொடராகவும் எடுக்கப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இனவெறிக்கு எதிராக இவர் பள்ளியின் முதல் நாள் முதலே தொடங்கிய அறப் போராட்டம், இன்று வரை தொடர்கிறது. 1999-ல்
ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நிற வேறுபாடுகள் அற்ற நல்லிணக்கம், பிறரை மதிக்கும் பண்பு, சகிப்புத்தன்மை, வெற்றிகளை பாராட்டும்பண்பு ஆகியவற்றை மாணவர்களிடையே வளர்க்கும் பணியை ரூபி செய்து வருகிறார்.

அதே பள்ளியில் சிலை

2005-ல் கத்தரினா என்னும் புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட தன் ஆரம்பப் பள்ளியைச் சீரமைக்கும் பணியில் முக்கிய பங்காற்றினார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பழைய மாணவர்கள் சந்திப்பில், அன்று அவரை விட்டு விலகிய
அனைவரும் அவரிடம் மரியாதையுடனும், அன்புடனும் பழகியது அவருடைய தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. அமெரிக்க ஜனாதிபதி விருது உட்பட பல்வேறு விருதுகளால் கவுரவிக்கப்பட்டு இருக்கிறார். எந்தப் பள்ளி அவரை வேண்டாம் என்று ஒதுக்கியதோ, அந்தப் பள்ளியிலேயே இன்று அவருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது. தன்னை விடுவிக்க கல்விதான் சரியான வழி என்று
உணர்ந்து படித்த ரூபி உலகின் அனைத்து மாணவர்களும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

- கட்டுரையாளர், பேராசிரியர்-சமூகச் செயற்பாட்டாளர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE