ஆசிரியம் காப்போம்! | வகுப்பறை புதிது 8

By ஆயிஷா. இரா.நடராசன்

ஒரு சமூகம் தனது ஆசிரியர்களின் மேம்பட்ட இடத்தை பேணுவதன் மூலம் தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்கிறது - மார்கரெட் அசிசிகோவிச் ஆசிரியம் என்கிற உயர்ந்த பீடத்தை ஒரு சமூகம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்லித் தரும் புத்தகம், ஓர் ஆசிரியரைக் கொலை செய்ய 100 வழிகள் எனும் அச்சமூட்டும் தலைப்பில் வெளிவந்துள்ளது. நூலாசிரியர் மார்கரெட் அசிசிகோவிச் கனடா நாட்டைச் சேர்ந்தவர்.

அரை நூற்றாண்டுக்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்தார். கனடாவில் பொதுக் கல்வியில் அரசின் அதீத தலையீடுகள், குறைபாடுகள் குறித்து வெளிப்படையாக உரையாட அவர் சில முக்கியமான கல்வியாளர்களையும் ஆசிரியர்களையும் தேர்வு செய்து, பள்ளி சூழ்நிலையில் உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டிய கற்றல் செயல்பாடுகள் குறித்த பட்டியலோடு களம் இறங்குகிறார்.

மின்னணு சாதனங்களின் வழியே இணையச் செயல்பாடுகளில் எவ்வளவு மூழ்கினாலும் அடிப்படை கல்விக்கும், குழந்தைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழவும் ஆசிரியர்களை நம்பித்தான் ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்பதை இந்த நூல் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

ஏன் இந்தத் தலைப்பு? - இந்த நூலின் தலைப்புக்கான அர்த்தம் என்ன? கற்பித்தல் என்னும் அற்புதத்தை அடுத்த தலைமுறைக்கு வழங்குகின்ற தனித்துவ திறமைகளை ஒரு சமூகத்தில் கொலை செய்வதுதான் ஆசிரியரைக் கொலை செய்வது ஆகும். ஒவ்வொரு ஆசிரியரும் வெவ்வேறானவர்கள். ஒரு குறிப்பிட்ட பாடத்தை எல்லா ஆசிரியர்களும் ஒரே மாதிரி போதிப்பதில்லை. டென்மார்க் நாட்டில் ஸ்டீபன் கோல்ட் என்கிற கல்வியாளர் இருந்தார்.

பாடப்புத்தகங்களை வெளியில் வைத்துவிட்டு தான் அவரது வகுப்பறைக்குள் மாணவர்கள் நுழைய வேண்டும். அவர் செதுக்கிய மாணவர்கள் அனைத்து வகையான கற்றல் செயல்பாடுகளிலும் முதலிடத்தை வகித்தார்கள். ஆனால், கல்வி அதிகாரிகள் பாடப்புத்தகம் எங்கே என்று கேட்டு ஆசிரியரை நச்சரித்தார்கள். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆசிரியருக்கு பிடித்த பாடம்: தனித்துவமான ஆசிரியர் களின் கற்பித்தல் திறன்களை அதீத தலையீடுகளின் மூலம் அதிகார வர்க்கத்தால் கொலை செய்ய முடியும். தமிழகக் கல்வியில் அதைப் பொருத்திப் பார்த்தபோது அது எத்தனை துயரம் தரும் உண்மை என்பதை உணர முடிந்தது. ஒன்றாம் வகுப்பிலிருந்தே தமிழகம் முழுவதற்கும் ஒரே கேள்வித்தாள், ஒரே கால அட்டவணைப்படியிலான தேர்வுகள், காலாண்டு, அரையாண்டு என்று அனைத்துமே பொதுத்தேர்வுகள்.

இப்படிச் செயல்படும்போது கல்வியின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் நாம் ஒரு மைய பீடத்திற்கு வழங்கி விடுகிறோம். பாடப்புத்தகத்திலிருந்து ஆசிரியர் தனக்குப் பிடித்த பாடங்களை முதலில் நடத்துவதால் என்ன தவறு என்று இந்தப் புத்தகம் கேட்கிறது.

நடுவிலே இருக்கும் ஓர் அத்தியாயம் சுவையானது என்பதற்காக அதிலிருந்து அந்த ஆண்டை தொடங்கக் கூடாதா? அரசு வகுத்துக் கொடுத்த பாடநூலை அரசு வகுத்துக் கொடுக்கின்ற அதே முறைப்படி மாத, வார, நாள் அடிப்படையில் பிரித்து எல்லா ஆசிரியர்களும் எல்லாப் பள்ளிகளிலும் அன்றைக்கு அதைத்தான் நடத்த வேண்டும் என்பது வன்முறை இல்லையா என்கிற கேள்வியை இந்நூல் எழுப்புகிறது.

ஆசிரியர்களின் தனித்துவத்தை முற்றிலும் சிதைத்துவிட்டு அரசினுடைய உத்தரவுகளை அமல்படுத்துகின்ற எந்திரங்களாக அவர்களை கனடா அரசு மாற்றியபோது அதன் தீவிரத்தை உணர்ந்து லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி, கனடிய பள்ளிகளில் பேசு பொருளான புத்தகம் இது. இன்று தமிழகத்தில் ‘நீங்கள் எதுவும் உங்கள் இஷ்டத்துக்குச் செய்ய வேண்டியதில்லை.

நாங்கள் சொல்வதை மட்டும் செய்யுங்கள்’ என்கிற அதிகாரக் குரல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளின் தனித்துவத்தைக் காப்பாற்ற வகுப்பறை சுதந்திரத்தை எப்போது ஆசிரியர்களுக்கு வழங்கப் போகிறோம்? அரசும் நாமும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

- கட்டுரையாளர்: கல்வியாளர், எழுத்தாளர்; eranatarasan@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

1 day ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

8 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

15 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

22 days ago

வெற்றிக் கொடி

29 days ago

வெற்றிக் கொடி

29 days ago

வெற்றிக் கொடி

29 days ago

மேலும்